கொடியில் வெயில் காய்ந்த
குற்றாலம் துண்டினை
பற்களால் பதம் பார்த்திருந்தது
ஒரு நாள்
இளைய மகனின்
ஒற்றைச் செருப்போடு
ஓடிப்போய் இருந்தது
ஒரு நாள்
கொழுத்த எலியை
கசக்கி பிழிந்து
படிக்கட்டில்
படுக்க வைத்திருந்தது
ஒரு நாள்
மொட்டை மாடியை அசுத்தப்படுத்தி
தூய்மையாக்குபவர்களை
வெளியிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
சில நாள்
சருகின் நகர்வுக்கும்
சப்தமிட்டு
ஆழ்ந்த தூக்கத்திற்கு
ஆப்பு வைத்துவிடும்
பல நாள்
சோதனை மேல்
சோதனையை தந்தது
அந்த வீதி நாயின்
விதி மீறிய சேட்டைகள்
இரவு முழுவதும்
நிலவைத் துரத்திய நிம்மதியில்
வீட்டு மாடியில்
ஓய்ந்திருந்த நாயை
இரகசியமாக நெருங்கி
நானும் ஒரு தடவை
பலமாக சோதித்து விட்டேன்
நீளமாக குச்சியால்
எல்லா வழிகளும்
அடைபட்ட நிலையில் அதனிடம்
பெரிய சீற்றத்தை
எதிர் பார்த்தேன்
கைவிடப்பட்ட ஒரு மனிதனின்
கடைசி நிமிட கலக்கமே
நாயின் அலறலில் கசிந்தது
நிலை குலைந்து போனேன்
தப்பித்து ஓடிய நாய்
தொலைவில் நின்று திரும்பி
என்னைப் பார்த்து
வாலை அசைத்தது
என்றோ ஒரு நாள் நான் வைத்த
ஒருபிடி சோற்றுக்கு கைமாறாக..

