kavithai : maandavargal meendum varugiraargal - kovi.baala.murugu கவிதை : மாண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள்!-கோவி.பால.முருகு
kavithai : maandavargal meendum varugiraargal - kovi.baala.murugu கவிதை : மாண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள்!-கோவி.பால.முருகு

கவிதை : மாண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள்!-கோவி.பால.முருகு

விடுதலை பெற்று எழுபத் தைந்தாண்டுகள்
      வீணாய்ப் போனது-நாட்டில்
கெடுதலை சாதி மதமும் மோதிக்
    கெட்டுப் போனது!
ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே
      அந்நிய மானது!-நாட்டில்
நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு
    நடுவீதியில் நிற்குது!
கோலை ஏந்திய ஆட்சி மதுவைக்
     குடுவையில் விற்குது!-நாட்டில்
சோலைக் காற்று தண்ணீர் உணவில்
     நஞ்சு கலக்குது!
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
     பாலை ஆனது!-அட
உறிஞ்சியே அவற்றின் இயற்கை வளங்கள்
     ஒழிந்து போனது!
நச்சுக் காற்றால் நாங்கள் இறக்கிறோம்
    ஆலையை மூடென்றால்-மக்கள்
உச்சந் தலைமுதல் உடலெல்லாம் பிய்ந்திட
            சுட்டுப் போடுகிறார்!
ஆறுதல் சொல்லிட வந்தொரு நடிகர்
    உளறிக் கொட்டுகிறார்!-அவர்கள்
போரிடும் வன்முறைத் தீவிர வாதியாம்
              தேளாய்க் கொட்டுகிறார்!
பகுத்த    றிந்து உண்மையைச் சொன்ன
தபோல்கர் பன்சாரே-நாட்டில்
உகுத்த செந்நீர் கல்புர்கி லங்கேஷ்கர்
உயிர்கள் குடித்தது!
தொகுத்து அறியும் அவரின் நெஞ்சைத்
தோட்டா துளைத்தது!
பகுத்த அறிவினை மதவெறி போக்கிட
நாளும் குரைக்குது!
உண்பதில் உடுப்பதில் கூட இங்கே
       உரிமை  பறிக்குது!-நாட்டில்
திணிக்கும் ஒற்றைக் கலாச்சார இந்துத்வா
          கொள்கை குதிக்குது!
இயற்கை வளங்கள் எல்லாம் இங்கே
சுரண்டப் படுகிறது!-நாட்டில்
வியக்கும் விவசாயத் தொழிலை அழிக்கும்
          விளைவைத் தொடுகிறது!
கிழவியும் சிறுமியும் கூட யிங்கே
கதறித் துடிக்குது!-நாட்டில்
அழுகிய காமத் தீயோர் செயலால்
         அழிவில் வெடிக்குது!
பாலியல் சாமியார்க் கெல்லாம்  பாஜக
           பலமாய் இருக்குது!-அட
கூலியாய் அவருக்கு நாள்தோறும் கோடிகள்
            கொட்டிக் கொடுக்குது
ஒன்ப தாண்டுகள்   பாஜக ஆட்சியில்
நாடே கெட்டது!-அட
துன்பம்  மிக்க    அதிமுக ஆட்சியால்
       தமிழகம் பட்டது!
பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து
பலரைக் கொன்றார்கள்!-அட
பிணத்தின் மீது ஆட்சி நடத்தும்
பிழைப்பைக் கொண்டவர்கள்!
வரியை ஜிஎஸ்டி என்றே மக்கள்
தலையில் வைத்தார்கள்!-அட
நரியைப் போல நாட்டை முதலாளித்
தீயில் திணித்தார்கள்!
 நாளும் பெட்ரோல் டீசல் எரிவாயு
விலையை உயர்த்துகிறார்!-அட
தோளும் துவண்டிட ஏழையர் ‌வாழ்வில்
          சுமையை அழுத்துகிறார்!
ஆண்டுக்கு  மூன்று கோடி பேருக்கு
வேலை என்றார்!-அந்த
மண்ணாலும் மோடி பக்கோடா விற்கப்
பரிந்துரை பண்ணுகிறார்!
கருப்புப் பணத்தை மீட்டு வங்கியில்
  போடுவேன் என்றார்!-நீங்கள்
விருப்பம் போல செலவு செய்து
மகிழலாம் என்றார்!
ஆண்டுகள் நான்கு ஆகியும் பைசா
வந்திட வில்லையே!-அட
அண்டப் புளுகர் அவரின் நாக்கு
அழுகிட வில்லையே!
மனதோடு பேசுவார் வெளிநாட்டில் பேசுவார்
தோசையும் கேட்பார்!-இங்கே
தினந்தோறும் போராடும் விவசாயி தொழிலாளி
மக்களிடம் பேசார்!
நாடு நாடாய்ச் சுற்றியே நாளைப்
போக்கி விட்டார்!அட
தேடி வந்தது ஒன்றுமே இல்லை
         கோடிகள் செலவழித்தார்!
தாழ்த்தப் பட்டோர் மீது எங்கும்
தாக்குதல் நடக்குது!-அட
வீழ்ந்தவர் உடலில் பாஜக ஆனந்தத்
தாண்டவம் நடக்குது!
வீழ்ந்தது உடலன்று விதைகள் அவைகள்
விரைவில் மரமாகும்!-அட
சூழ்ந்திடும் பகைகளைத் தூக்கி எறிகின்ற
வீரிய உரமாகும்!
மாண்டவர்கள் மீண்டும் வருவது நிச்சயம்
சத்தியம் செய்கின்றேன்!-அவர்கள்
மீண்டும் நாளை உயிர்த்து எழுவார்
  நடப்பது மெய்யென்பேன்!
அன்றைக்கு ஆதிக்க சக்திகள் தூளாய்
அழிந்து ஒழிந்திடுமே!-நாடு
வென்றிடும் இடது சக்தியில் மக்களின்
வெற்றி  மலர்ந்திடுமே!
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *