சட்டியை இறுக்கி
பிடித்தபடி காதலை
சொல்லிக் கொண்டிருந்தது
மதியம் வச்ச சோறு.
பருக்கைகள் பலவாறாய்
சிதறி கிடக்கிறது.
வெள்ளை கொக்கு
வேண்டி நின்றதாய்,
யாரையோ? வேண்டி
காத்திருக்கிறது சோறு.
கரண்டிக்கு இசைந்து,
ஒரு பாகத்தை வெட்டி
எடுத்தேன்.
தேய்ந்து போன நிலவாய்
அரை வட்ட வடிவில்
வட்டியில் விழித்தது.
விரல்களின் உரசலில்
மெல்ல இளகியது சோறு.
உதிர்ந்த மல்லியானாள்.
மண் சட்டியில் ஊறி
காத்து இருக்கிறது
எண்ணையும் மீனுமாய்
பழைய குழம்பு.
இதோ!இருவரும்
கட்டி தழுவியபபடி
தங்கள் காதலை
கடை விரித்தனர்.
அவர்களை பிரிக்க
மனமின்றி வாயில்
போட்டு கொண்டேன்.

kavithai ; michcham - r.kalayarasi கவிதை: மிச்சம் - இரா. கலையரசி
Posted inPoetry