அவர் வந்த பின்புதான்
வரலாறு என்றால்,
வரலாற்றுக்குப் பின்புதான்
அவர் வந்தனர் என்பதை
அறியாத முண்டம் நீ.
குமரிக்கண்டம் நாவலந்தீவு
நாகன் நாகரிகம்
கல் தோன்றி மண் தோன்றாக் காலம்….
இவையெல்லாம் கப்சாவென
நினைத்தீரோ முண்டங்களே!
நீர்
எந்த உடல் பாகத்தில்
வேண்டுமானாலும்
பிறந்தவனாயிரு,
ஒரு பெண்ணின் வயிற்றில்
அவளின் காதலோன்
காதலில் கசிந்த விந்தைக்
கருவாக்கிய
வித்தகியின் மகன் மகளென
இயற்கையின் விதியில்
பிறந்தவரை
இழி பிறப்பாளனென
எதனை அளவு கோலாக்கினாய்
முண்டமே?
இன்று
காணி நிலக்காரனாயிரு,
கவர்மெண்ட்டை நடத்து,
கணக்கில் சிங்கமாயிரு,
கணினியில் புலியாயிரு,
கடை கன்னியின் கர்த்தனாயிரு,
இவை எல்லாமும்
ஏமாளிகளை ஏமாற்றி
கோமாளித்தனமான
குறுக்கு வழியில்
குவித்துக் கொண்டவையென்பதை
கவனம்கொள் முண்டமே!
நாங்கள் நடத்தும்
பள்ளிக்குள் வராதே,
நாங்கள் வழிபடும்
கோயிலுக்குள் வராதே,
நாங்கள் உண்ணும்
விடுதிக்குள் வராதே,
வராதே… வராதே… என
வக்கனைப் பேசுகின்றாயே
கோயில் கட்டியபோது
குளம் வெட்டியபோது
பள்ளி கட்டியபோது
உனக்குப் பாடை கட்டும்போது….
போடா போ… தூரப்போவென
துரத்தினாயென்றால்
அது ஆண்மை!

