என்றும் முறுக்கிப் விடப்படாத மீசை
ஆனாலும் அதுவும் கூட உன்
அழகுக்கு கட்டியம் கூறும்
ஆணா பெண்ணா வென்று
அனுமானிக்க முடியாமலும்
அந்த மீசையின் நீட்சி
ஆண் பெண் சமத்துவம்
பேச வந்த அழகும் அதுதானோ?
மாதொரு பாகன் என்றெல்லாம்
மயக்குவதில்லை நீ
ஆமாம் நள்ளிரவிலும் கூட
நீ முகம் துடைத்து அலங்கரிப்பதேன்?
அர்த்த ராத்திரியில் நடக்கும்
அழகு ராணிப் போட்டிக்கோ?
கால்களில் சக்கரம் கட்டியதைப் போல என்பார்கள்
நீயோ கால்களில் பஞ்சை
கட்டிக் கொள்வாய்
மிகச் சன்னமாகக் கூட கேட்காது
உன் காலடி ஓசை
வேங்கைக்கே மூத்தக்குடி நீயென்று அறியாத மனிதர் கூட்டம்
குறுக்கே நீ வந்தால் குடியே
மூழ்கும் என்ற மூட நம்பிக்கையில்
முறைத்துப் பார்த்து துரத்தும்
உன்னை
பூனை என்ற பேர் கொண்ட
பூபாளம் நீ
இந்தப் பூவுலகில் உனை போற்றும்
புனிதரும் இருக்கிறார்கள்!