kavithai sanatham 31 - na.ve.arul கவிதைச் சந்நதம் 31 - நா.வே.அருள்
kavithai sanatham 31 - na.ve.arul கவிதைச் சந்நதம் 31 - நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 31 – நா.வே.அருள்

“அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்”

“அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம்தான்!”
ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கிடக்கும் ஓர் அபூர்வ ஒற்றை வரி. சரி… இந்த வரிக்கு வருவதற்கு முன் கொஞ்சம் இலக்கியத்தில் சுற்றிவிட்டு வருவோம்.

ரஷ்யக் கவிஞன் மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதிய ஒரு கதையில் வருகிற வரி ஒன்றுண்டு; The Milky Way is like a silver river. இந்த வரியை வைத்து சிருஷ்டி மனநிலையை விளக்கியிருப்பார் பிரமிள்: “பால்வீதி என்பது நட்சத்திர மண்டலத்தின் பெயர். இதைப்போய் ஒரு வெள்ளி நதிக்கு ஒப்பிட்டதில் என்ன கவிதை இருக்கிறது பிரமாதமாக என்று கம்பனின் கவி வரியில் ஒரு உவமையழகை ஒருவர் காட்டி வம்பு பண்ணலாம். நமது தமிழ் சமூகத்தின் கலாசாரச் சீரழிவின் வெளி விளக்கம்தான் அத்தகைய ஒருவர் பேச்சாகும். அவர் கம்பன் கவியையும் சரி இந்த ரஷ்யக் கவி வரியையும் உணராதவர் என வேண்டும். அதாவது அவர் சிருஷ்டி மன நிலையை உணரவில்லை. அதனால் பாதிப்புப் பெறவில்லை என்கிறேன்.” அவர் கருத்துப்படி உவமை என்கிற மேல் தோல் அம்சங்களுக்கும் அடியில் சென்று துழாவிப் பார்க்க வேண்டும் என்கிறார். அந்தப் படிமங்களின் இயக்க சக்தியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். இந்த வரியைப் படித்ததும் பிரமிளுக்குப் பிரமிப்பு வந்தது என்கிறார்.

பிரமிப்பு என்பதற்குப் பிரமிள் தருகிற விளக்கம் வெறும் அறிவுபூர்வமான அதிர்ச்சியல்ல. உவமையின் ‘சிறப்பில்’, கெட்டிக்காரத்தனம், வித்தை மற்றும் அதீதத் தன்மைகளில் இல்லை என்கிறார். இல்லையோ என்னும் இடை என்று கம்பன் சொன்னதில் அறிவின் அதிர்ச்சியைப் பார்க்கிற அவர் “வெள்ளி நதியைப் போலிருக்கும் பால்வீதி” என்பதில் மனஇழப்பு நிகழ்வதாக உணர்கிறார். இதை ஒரு சிறந்த படிமமாகப் பார்க்கிறார். அவர் வரிகளில் வாசிக்கலாம்: “அவ்வரி எனக்குப் பிரமிப்புக் கொடுத்ததன் காரணம் கலைஞனின் மனப்பண்பு – அதாவது அவனைப் பாதித்த சில வேகங்களின் விளைவு – அவ்வரியில் வெளியாவதுதான். தெளிந்த இரவில் நீங்கள் ‘மில்கிவே’யைப் பார்க்க முயன்றிருப்பீர்களோ என்னவோ, அது பிரபஞ்சத்தின் மௌனமான எல்லையின்மையைக் கண்களுக்குக் கோடிட்டுக் காட்டுவது. தற்கொலை செய்யப் போகிறவனுக்கும் சாவை நோக்கித் தன்னையே உருட்டிவிடுகிறபோது தனது தூசித் தன்மையின் முன்னிலையில் ஒரு அகண்டத்தின் பிரக்ஞை எழுகிறது. சுமார் பத்துப் பதினைந்து வரிகளேயுள்ள அக்கவிதையில் இந்த ஒரு வரிதான் கவியின் தற்கொலை எண்ணத்தை ஒரு பொருட்டு விஷயமாக ஒதுக்கிவிட வைப்பது. இருப்பும் இன்மையும் இந்த அகண்டத்தின் முன் ஒன்றுதான் என….ஆம். பிரபஞ்சவெளியின் முன் என் தூசித்தன்மையை அவ்வரி எனக்குப் புலப்படுத்தியிருக்கிறது. அதுதான் என் பிரமிப்பின் காரணம்.”

எல்லையின்மையின் முன் தூசியாக என்னை நானே நிறுத்துவதன்போது மட்டுமல்ல, வாழ்க்கையின் கையறுநிலையின் முன் நிற்கிற சில கதாபாத்திரங்களைக் காணுகிறபோதும் இது நிகழத்தானே செய்யும்? சில தான்தோன்றித் தனமானக் கருதுகோள்களின் மூலம் ஏற்படுத்தப்படும் “மன இழப்பை” வாழ்க்கையின் அதீதப் பாசாங்குகளிலும், அர்த்தமற்றப் பாகுபாடுகளிலும் கூட காண நேர்கிறதல்லவா?

அம்மா என்கிற கதாபாத்திரம் அப்பா என்கிற கதாபாத்திரத்தால் எப்படிக் காலகாலமாகக் கட்டுப்பாடுகளும் கட்டுப் பெட்டித்தனங்களும் நிறைந்ததாக மாறிவிடுகிறது என்பதை ஒரு வரி மூலம் தோலுரித்துக் காட்டிவிடுகிறான் கவிஞன். அப்போதும்தான் ஒரு பிரமிப்பு நிகழ்கிறது. இந்தக் கவிதையில் பிற வரிகளை வேறுவிதமாக அமைப்பதின் மூலம் ஒருவேளை “அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்” என்கிற இந்த வரியின் பிரமிப்பைத் தக்கவைத்தோ அல்லது இன்னும் கூடுதலாக ஆக்கவோ முடிந்திருக்கலாம். அது அந்தந்தக் கவிஞனின் கைப்பக்குவம். ஆனால் ஒரு விஷயம். மாயகோவ்ஸ்கி எழுதிய முழுக்கவிதையில் The Milky Way is like a silver river என்கிற ஒரு வரிதானே ‘மனஇழப்பு’ என்னும் ‘பிரமிப்பாக’ப் பேசப்படுகிறது. அப்படிக் கீழ்க்குறிப்பிடும் கவிதையில் நான் குறிப்பிட்ட ஒரு வரி போதும் (அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம்தான்) மனஇழப்பு பிரமிப்பைத் தரிசிக்க முடியும். இந்த மன இழப்பு பிரபஞ்சத்தின் முன்பு மனிதனைத் தூசியாக நிற்க வைக்கிறபோது நிகழவில்லை. மாறாக வாழ்க்கையில் ஒரு மனுஷியின் முன் ஒரு மனிதன் தன்னைச் சக்தியற்றவனாக நிற்கவைக்கிறபோது நிகழ்கிறது.

“அப்பாவின் பழைய லுங்கிகளை
சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில்
பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா
பால்யத்தில் நான் அவற்றைக்
கேள்விகளால் துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற
ஒரு பதிலில் கடந்துவிடும் அம்மாவுக்கு
ஐந்து நாட்கள் விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை.
அந்தத் துணிகளில் படாமல் போன
ஒரு செந்துளியின் சிறுதுளி தான்
நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது
அம்மாவின் உடல் ஒரு
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருந்தது…

அந்த ஐந்து நாட்களின்
அவஸ்தைகளிலெல்லாம் மனைவியின் புலம்பல்களை
மடியேந்திக் கொள்கிறேன்
அவளின் வலிகளுக்கு
சொற்களால் களிம்பிட முயன்றிருக்கிறேன்
அந்நாட்களின் ஏதோ ஒரு கணத்தில்
நினைவில் வந்துவிடும்
அம்மாவின் ரகசிய நாட்களின் மீது
இன்னும் கரிசனம் குவிந்திருக்கிறது

மகளுக்கு தூமைப் பஞ்சு வாங்க
கடைகளில் நிற்கும் கணமெல்லாம்
அம்மாவின் லுங்கிச் சதுரங்களின்
கறைகள் கண்களுக்குப் புலனாகும்.

எரவானத்துச் சதுரங்களை
அவள் எப்போது துவைத்தாள்
எங்கு உலர்த்தினாள் என்பது
நான் அறிந்திடாத ரகசியம்

வயல்களில் களையெடுக்கையில்
வயிற்றில் ஊர்ந்துகொண்டிருந்த
பூச்சிகளை
எப்படி அடக்கிக் கொண்டாள்
என்பது மாறா வியப்பு

மனைவிக்கு
மகளுக்கு
தோழிகளுக்கு
என
அந்த நாட்களின் தேவைகளின் பொருட்டு
மருந்துக் கடைக்குப் போக
தேநீர் கலந்து கொடுக்க
சிறு சிறு உதவிகள் செய்ய
என்னைப் பணித்தவை
அந்த லுங்கிச் சதுரங்கள் தாம்.

சாதாரண நாட்களில்
குளியலறை எரவானத்தில்
காட்சிப்படும் அவை
விசேஷ நாட்களிலும்
விருந்தினர் வருகையின் போதும்
காணாமல் போய்விடுவது
இன்னுமோர் பேரதிசயம்

அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்”

– உதிரிகள் இதழில் வெளியான கவிதை

======          கவிஞர் இரா.பூபாலன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *