கவிஞர் சிற்பி- Sirppi- NaVeArul | கவிதைச் சந்நதம் - Kavithai Santham

தொடர்: 36 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதை – கவிஞர் சிற்பி

 

மழையைக் குடை கொண்டு நம் மேல் நீர் விழாமல் தடுத்துக் கொள்ளலாம். கோடையை ஒரு குடை போல நம் மேல் கொதிக்கக் கொதிக்க கவிழ்க்கிறார் கவிஞர்.
கசங்கி நனையும் காலைப் பொழுது என்கிறார். நனைதல் என்பது தண்ணீரின் துணையால் நிகழ்வது. கசங்கி நனைதல் என்பது கதையையே மாற்றி விடுகிறது. கசங்கி நனைவது என்கிற செயல்பாடு நம் நனவிலி மனத்தில் இருக்கும் வியர்வையை ஞாபகத்தில் கொண்டு வந்து விடுகிறது. காலைப் பொழுதே கசங்கி நனைவதற்குக் காரணம்… பங்குனி வெயில்!

‘குழாய் நீர் கொதிக்கிறது’ என்ற உரைநடையைக் கவிதையாக்கும் வித்தை ‘கொப்பரைக் கரும்புச் சாறாய் அனல் பழுக்கிறது’ என்கிறபோது நிகழ்கிறது. கொப்பரைக் கரும்புச் சாறு என்பது கரும்பு காய்ச்சுகிற இடத்திற்குப் போயிருக்கிறவர்கள் அறிவார்கள். அனல் பழுக்கிறது என்கிற படிமம் கவித்துவத்தின் முத்தாய்ப்பை இந்த இடத்தில் சாதித்துவிடுகிறது.

‘இட்டிலியின் விள்ளல்
நெருப்புத் துண்டாய்க்
குரல் வளையை
அக்கினிப் பிரவேசத்தில்
ஆழ்த்துகிறது’

மிகை உணர்ச்சியை யதார்த்தத்தில் பொருத்துவதற்கு ‘இட்டிலி விழுங்குதல்’ பயன்படுத்தப்படுகிறது. குரல்வளையை அக்கினிப் பிரவேசத்தில் ஆழ்த்துகிறது என்கிற படிமம் கவித்துவத்தைக் கூட்டுகிறது. சிலருக்குச் சீதையைக் கூட ஞாபகப்படுத்திவிடுகிற கவிதையின் உபரி செயலும் நிறைவேறிவிடுகிறது. வெயில்தான் இராமனோ என்னும் கேள்வியை மனசுக்குள் மௌனமாய் ஓடவிடுகிறது. இவையெல்லாம் வாசிப்பவர்களின் வாசிப்பு விகசிப்புக்கு ஏற்றபடிதான் நிகழும்.

“கஞ்சியில் சலவை செய்த
சட்டையின் கைகளும் உடலும்
விறைத்தபடி வரவேற்கின்றன
மெல்ல அதற்குள் என்னை
நுழைத்துக் கொள்கிறேன்”

“கஞ்சியில் சலவை செய்த சட்டையின் கைகளும் உடலும் விறைத்தபடி வரவேற்கின்றன”… கவிஞன் கவித்துவத்தின் தச்சனாகிறான். கஞ்சி போட்டுச் சலவை செய்த சட்டையை ஒரு கதர் சிலுவையாக மாற்றுகிற ரசவாதத்தை நிகழ்த்தி வாசகர்களை நிகழவிருக்கும் சிலுவையறைதலுக்குத் தயார்ப் படுத்துகிறான்.

“நீங்கள் பார்த்ததில்லையே
இதோ நான்
சிலுவையில் அறையப்படுகிறேன்”

விறைத்தபடி இருக்கும் ஒரு மொடமொடப்பான (கதர்ச் சட்டை என்பது கற்பனைக்கு வலு சேர்ப்பதால் வலிந்து அப்படிக் கற்பனை செய்துகொள்கிறன்) சட்டை சிலுவைபோலக் காட்சியளிக்கிறது. ‘மெல்ல அதற்குள் என்னை நுழைத்துக் கொள்கிறேன்’ என்கிறான் கவிஞன். அதைத்தான் கவிஞன் சொல்கிறான்… இதோ நான் சிலுவையில் அறையப்படுகிறேன்.

“சற்று நேரத்தில்
கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது
வியர்வை வெள்ளம்
என் சிலுவையிலிருந்து
பொழியும் வெங்குருதி!”

கவிதையின் தொடக்கத்தில் ‘நனைதல்’ என்ற சொல்லைக் கசங்கி நனைதல் என்று பயன்படுத்தி வெயிலின் உக்கிரத்தை விளைவித்த கவிஞன் பயன்படுத்தும்அடுத்த பிரயோகம்…

‘கொட்டோ கொட்டென்று’

மழைக்குப் பயன்படும் ஒரு சொற்பயன்பாட்டை வியர்வையோடு இணைத்து வெயிலில் கவிதையைக் காய வைத்துவிடுகிறான். கவிதைக்கும் வியர்த்துக் கொட்டுகிறது.

கோடை ஏசுவாக்கிவிட்டது என்னை… என்று அற்புதமாகக் கவிதை முடிந்துவிடுகிறது. அலங்காரமில்லாத எளிமையின் அத்தனை அம்சங்களும் கைகூடிய ஓர் அச்சு அசலான கவிதையாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது.

இந்தக் கவிதை வரைகிற சித்திரம் உள்ளத்த்துக்குள் ஒரு கவிதைக் கண்காட்சியை நடத்திவிடுகிறது. கோடை ஒரு மனிதனை ஏசுவாக்கிவிட்டது என்றால், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் நினைவுகளில் நிழலாடுகின்றன. காலம் கல்வாரி மலையாகிவிட்டது. மனிதர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள்.

புழுக்கத்தில் புழு நெளிவதைப் போல ஒரு பிரம்மை தட்டுகிறது. பூமியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வெக்கை ஒருவனின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சயனைடு குப்பியைப் போல எப்பொழுதும் உயிரை விழுங்கக் காத்திருக்கிறது. இவற்றையெல்லாம் கவிதை பேசவேயில்லை. ஆனால் அந்த வெக்கையின் விஸ்வரூபம் வாசகர்களின் கற்பனையின் வாசல்களைத் திறந்துவிடுகிறது. எந்த வாசலை வேண்டுமானாலும் திறந்து வைத்துக்கொள்கிற சந்தர்ப்பத்தினை கவிதை வழங்கிவிடுகிறது.

என் சிலுவை
*
பங்குனி வெயிலில்
காலைப் பொழுதே கசங்கி நனைகிறது
குழாய் நீர்
கொப்பரைக் கரும்புச் சாறாய்
அனல் பழுக்கிறது

இட்டிலியின் விள்ளல்
நெருப்புத் துண்டாய்க்
குரல் வளையை
அக்கினிப் பிரவேசத்தில்
ஆழ்த்துகிறது

கஞ்சியில் சலவை செய்த
சட்டையின் கைகளும் உடலும்
விறைத்தபடி வரவேற்கின்றன
மெல்ல அதற்குள் என்னை
நுழைத்துக் கொள்கிறேன்

நீங்கள் பார்த்ததில்லையே
இதோ நான்
சிலுவையில் அறையப்படுகிறேன்
சற்று நேரத்தில்
கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது
வியர்வை வெள்ளம்
என் சிலுவையிலிருந்து
பொழியும் வெங்குருதி!

கோடை ஏசுவாக்கி விட்டது
என்னை…

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. navakavi Ramalingam

    இப்படி எல்லாம் பூடகம் என்று சொல்லிக் கொண்டு ஏன் கவிதை “பண்ண ” வேண்டும்?கோனார் நோட்ஸ் போல அரும்பொருள் பெரும்பொருள் படித்து ஒரு கவிதையை ரசிக்க வேண்டாமே!

  2. Vatsala R

    அருமையான கவிதை. அருமையான விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *