கவிதைச் சந்நதம்: 37
நா.வே.அருள்
கவிதை: “மனைவிக்கு”
ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா
கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த
சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில் எப்படியான
இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் நிலத்தில் கதை வேறு. காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம்
யாவையும் துணை நிற்கிற காதலியைத்தான் மகாகவி பாரதியும் காட்டுகிறான்.
கணவன் காட்டுப் புயலாக இருந்தாலும் அணையாமல் ஒளிர்கிற ‘குடும்ப விளக்கு’
தான் மனைவி என்று காவியம் படைத்திருப்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
களைப்பும் அலுப்பும் காதலுக்கில்லை. ஒருவரின் அசைவு மற்றவருக்கு ஓவியம்.
அவர்களின் ஒவ்வொரு அசைவும் காதல் இசையின் புதுப்புது இராகம். கணவனும்
மனைவியும் காதலர்களாகவே இருந்தால் இல்லறம் சுவாரசியமாகிறது.
இது ஒரு சீனக் கவிதையின் சிறந்த காதல். கணவனும் மனைவியும் உறவுச்
சங்கிலியில் ஊஞ்சலாடும் காதலர்கள். ஒரு நாளும் அவர்கள் விருந்து
பழஞ்சோறாவதில்லை. காதலைக் கண்களில் சுடச் சுடப் பரிமாறுகிறார்கள்.
காதல் மழை பொழிகிறது. ஆனால் கணவனும் மனைவியும் கவிதைக் குடையில்
நனைந்தும் நனையாமல் நடை பயில்கிறார்கள்.
“நீ தொடங்கிய வாக்கியத்தின் இறுதிப் பகுதியை
இப்போதுதான் நான் துண்டித்தேன்.
ஒன்றுமில்லைதான்
ஆனால் இரு பகுதிகளும் இணைந்திருந்தால்
அதுவோர் அற்புதமான கவிதையாக இருந்திருக்கும்”
என்கிறான் கணவன். அவசரப்பட்டு உரையாடலைத் துண்டித்த கணவன் ஆதங்கப்
படுகிறான். இணைந்திருக்க வேண்டிய பகுதியைத் துண்டித்ததற்காக
வருந்துகிறான். சீனக் கவிதைகளில் சங்ககாலச் சாயல்கள் கவிஞன் சுட்டுவது
போல கணவனும் மனைவியும் வாக்கியத்தின் இரு வேறு பகுதிகள் அல்ல…. அவர்கள்
ஒரே வார்த்தையின் பகுதி விகுதிகள். துண்டிக்கப்பட்ட வார்த்தைக்காக
வருந்துகிறான் கணவன்.
நெருக்கத்தை எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. கணவன்
அற்புதமான படிமத்தோடு பந்தி பரிமாறுகிறான்….
“தொங்கும் பளபளப்பான திராட்சைப் பழங்களைப் போல
அருமையான சுவையைத் தேக்கிக் கொண்டிருக்கிறது
நம் நெருக்கம்.”
இந்தப் படிமம் அடர்த்தியானது. நெருக்கத்திற்கு உதாரணமாக திராட்சைகள்
தேக்கிவைத்தச் சுவையைச் சொல்கிறான் கணவன். இன்னொன்றையும் கவனிக்கலாம்.
திராட்சைக் கொத்துகளைக் கற்பனை செய்தால் பழங்களின் அடர்த்தியான நெருக்கம்
கண்முன் வரும். என்னதான் சுவையாக இருந்தாலும் புளிப்பும் கொஞ்சம்
புதைந்திருக்கிறது!
“எனக்குச் சார்பாக முடியும் நீ
அல்லது உனக்கு நான்
எந்தச் சந்தர்ப்பத்திலும்
நாம் உரிமையை அனுபவிக்கிறோம்
மாற்றில்லாமல் அல்லது முன்னேற்பாடில்லாமல்.”
ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு கசிகிறது. அதே சமயத்தில், உரிமை
உயிர்க்கிறது. இவையெதுவும் முன் தீர்மானங்களில்லை. ஆனால்
திட்டமிடப்படாமல் அதுவாய் அமைந்துவிடுகிற அன்பின் அனுமானங்கள்! அன்பு
அஸ்திவாரமாக இருந்தால் கட்டடம் கண்களைக் கவர்கிறது.
வார்த்தைகள் உரசத்தான் செய்கின்றன. பொறிகள் பறக்கத்தான் செய்கின்றன.
ஆனால் எந்த நெருப்பும் எரித்துவிடுவதில்லை. பற்றிக் கொள்வதற்காக
வைக்கப்பட்ட தீப்பொறிகள் அல்ல…. ஊதி அணைப்பதற்காகக் கொளுத்திய பிறந்தநாள்
மெழுகுவர்த்திகள். உக்கிரம் அடைந்துவிடாத உரையாடல்கள். இதயங்கள் இடம்
மாறிப் பரிமாறப்படுகின்றன.
“இருபத்தைந்து வருட அன்பின் மொட்டு
பிரியாத உறவின் கனியாகிறது
நாம் வாதிடும்போது
சட்டென ஒரு பொறி பறக்கிறது
ஆனால் அணைந்து போகிறது பெரு நெருப்பாகாமல்
குளிர்ந்த உன் புன்னகை தோன்றுகிறது
அல்லது என் சமாதான வார்த்தைகள்
கேட்கப்படுகின்றன.”
மின்னல் பொறிகளால் தீப்பற்றி எரிவதில்லை மேகங்கள். இன்னும் கேட்டால்,
அன்பின் உரசல்கள் தூறல்களாகத் தூறிச் சிதறும். சொற்கள் சமாதான
ஒப்பந்தங்களின் சாராம்சங்களாகிவிடுகின்றன.
“தவிர நம் இருவரில் யாரும்
அவ்விடத்தை விட்டு
சொல்லிக் கொள்ளாமல் விலக விரும்புவதில்லை.”
பாதச் சுவடுகள் மிகவும் சிறியவை. பாதையில் சின்னப் புள்ளிகள்தான்.
ஆனால் கவனம் இல்லாமல் காலடிகள் வைக்கிற போது கணவனும் மனைவியும் பிரிவின்
எல்லைக்கே போய்விடுகிறார்கள்! குளத்தில் விழுவதென்னவோ ஒரு சிறிய
கல்தான். ஆனால் அது ஏற்படுத்தும் அலைகள் கரை வரைக்கும் போய்விடுகின்றன.
ஒருவரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒருவர் நகர்வதுபோல ஒரு நாகரிகமற்ற செயல்
ஏதுமில்லை யல்லவா? நாகரிகமற்ற செயல் அன்பற்ற செயலாகத் தோற்றம்
தருகிறது. இந்த இடமாறு தோற்றப் பிழையால்தான் ஒரு பிரம்மாண்ட மலையே
பிளந்து கொள்கிறது.
அதற்காக குமுறும் கோபம் குறைந்துவிடுவதில்லை. களைகளைப்போல
மண்டிவிடுகின்றன கருத்து வேறுபாடுகள். ஆனால், இதயம் எரிமலையாவதில்லை.
சொற்கள் போர்க்களத்தில் ஆயுதங்களைப்போல பொருதுவதில்லை…மைதானத்தில் மன
வேறுபாடுகள் பந்துகளாக உருள்கின்றன.
“இது நம் வாழ்வின் விதியாகிவிட்டது
ஒருவரின் கோபத்தை ஒருவருக்குள்ளேயே
ஒரு போதும் அமுக்காமலிருப்பது.”
பொதுவாக, என்பும் உரியர் பிறர்க்கு என்று வள்ளுவன் அன்பின் வாய்ப்பாட்டை
வரையறுப்பான். கணவன் மனைவிக்குள் அன்பு ஒரு காட்டாற்று வெள்ளம்.
இதயங்களைப் பொறுத்தவரை அன்பு ஒரு எல்லை மீறிய பயங்கரவாதம். ஒருவரை
ஒருவர் ஆதரிக்கும் காதல் அற்புதச் சித்திரமாகத் தீட்டப்படுகிறது.
“நாம் நடக்கையில்
என்னை ஒரு குழந்தையாக நீ நடத்துவாய்
எல்லா அபாயங்களையும் உனதாக்கிக் கொள்வாய்
என் பாதச் சுவடுகளில்
என்னை நடக்கப் பழக்குவாய்
புல்வெளி மேலும் கரடு முரடான பாதைகளிலும்.”
ஒருவர் பாதச் சுவடுகளைப் பதித்து வருகிறபோது மற்றவர் பாதையாகிறார்.
ஒருவர் சக்கரமாக மாறுகிறபோது மற்றவர் தண்டவாளமாகிறார். வாழ்க்கை வெறும்
சுகங்களின் சூத்திரமல்ல; சூழ்ச்சிகளின் வேட்கை; வெவ்வெறு விதவிதமான
அனுபவங்களின் விஷப் பரீட்சை அது! . அதில் கணவனும் மனைவியும் நீர் மேல்
நடக்கும் நீலோற்பல மலர்கள்.
“என் வாழ்வை
நான் சக்கரங்களாக மாற்றும்போது
உன் மனிதனின் தண்டவாளங்களாக
நீ மாறுவாய்
வாழ்க்கைப் பயணத்திற்கு
ஒரே மாதிரி பச்சை விளக்கு
எப்போதும் கிடைப்பதில்லை.
முன்னேறு, வலிந்து முன்னேறு
நாம் பிரியும் போதெல்லாம்
அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளுவதில்லை
ஆவலாயும் இருப்பதில்லை
ஒருவரையொருவர் மறப்பதுமில்லை.”
கைகளறியாத விரலுண்டா? கணவனும் மனைவியும் அப்படித்தான். ஒருவருக்குள்
ஒருவர் ஊடுருவி வாழ்கிறார்கள். துருப்பிடித்துவிடாத – உறுதியில் –
இரும்பென ஒருவருக்கொருவர் துணையாகிறார்கள்.
“கையை அறியும் விரல் போல்
அல்லது ஓர் இரும்பு சன்னலின் வழியே தெரியும்
வாழ்வோட்ட நரம்புகளாய்.
உலகையே சுற்றினாலும்
ஒரே அலைவரிசையில் நம் இதயங்கள்
காதலின் துல்லியமாக செய்தியை அனுப்புகின்றன.
கணவனும் மனைவியும் ஒரே அலைவரிசையின் இரண்டு குரல்கள். ஒரே பாடலைப்
பாடும் இரண்டு குயில்கள். கணவன் நினைக்கிறபோதே மனைவி
நிகழ்த்துபவளாகவும், மனைவி செய்ய நினைத்ததைக் கணவன் செய்து
முடிப்பவனுமாகவும் இருந்தால் வாழ்க்கையின் அற்புதம் ஒரு வரம்தானே?
“இன்று தட்டுவதற்காக
நான் என் கையை உயர்த்துவதற்குள்
நீ கதவைத் திறந்து வரவேற்கிறாய்
முழுமையான மகிழ்ச்சியுடன்.
“என் அன்பே, நீ மாலையாய் இருந்தால் அதில் நான் மலராக இருக்க மட்டுமல்ல,
நீ பாலையாய் இருந்தால் அதில் நான் மணலாகவும் இருப்பேன்” என்று
மு.மேத்தாவின் கவிதை வரிகள் மனதில் சுழல்கின்றன.
குளிர்க் காற்றிலிருந்து நீ என்னைப் பாதுகாத்தாய்
கோடை மழையிலிருந்து நான் உன்னை
நீ தடுமாறுகையில்
நானுன்னைப் பிடித்து உயர்த்துகிறேன்.
நான் மெலிகையில்
நீ எனக்கு வலுவூட்டுகிறாய்.
எனினும் நாம் தனிமரங்கள்.
வாழ்வின் வெம்மையால் சுற்றிக் கட்டப்படுகிறோம்
விதியின் வேர்களை நிர்மாணித்துக் கொண்டு.”
இல்லறத் தோப்பில் இருந்தாலும் இருவரும் தனிமரங்கள். வாழ்க்கையின்
வெம்மையால் இல்லறத்தில் வெப்பச் சலனம். இருப்பினும் விதியின் வேர்களை
இருவரும்தான் நிர்மாணிக்கிறார்கள். அன்பின் ஆசீர்வாதமும் மென்மையின்
சீதனமும் கலந்த காதல் கவிதைதான் இந்தக் கணவன் மனைவி கவிதை!
யதார்த்தத்தின் விதை.
இனி முழுக் கவிதை….
நீ தொடங்கிய வாக்கியத்தின் இறுதிப் பகுதியை
இப்போதுதான் நான் துண்டித்தேன்.
ஒன்றுமில்லைதான்
ஆனால் இரு பகுதிகளும் இணைந்திருந்தால்
அதுவோர் அற்புதமான கவிதையாக இருந்திருக்கும்
ரகசியத்தின் அடையாளமாய்
ஒரு தெரிந்து கொள்ளும் புன்னகை
பசுமையான சாயலில் பிரகாசித்த ஒரு பார்வை.
தொங்கும் பளபளப்பான திராட்சைப் பழங்களைப் போல
அருமையான சுவையைத் தேக்கிக் கொண்டிருக்கிறது
நம் நெருக்கம்.
எனக்குச் சார்பாக முடியும் நீ
அல்லது உனக்கு நான்
எந்தச் சந்தர்ப்பத்திலும்
நாம் உரிமையை அனுபவிக்கிறோம்
மாற்றில்லாமல் அல்லது முன்னேற்பாடில்லாமல்.
இருபத்தைந்து வருட அன்பின் மொட்டு
பிரியாத உறவின் கனியாகிறது
நாம் வாதிடும்போது
சட்டென ஒரு பொறி பறக்கிறது
ஆனால் அணைந்து போகிறது பெரு நெருப்பாகாமல்
குளிர்ந்த உன் புன்னகை தோன்றுகிறது
அல்லது என் சமாதான வார்த்தைகள்
கேட்கப்படுகின்றன.
தவிர நம் இருவரில் யாரும்
அவ்விடத்தை விட்டு
சொல்லிக் கொள்ளாமல் விலக விரும்புவதில்லை.
இது நம் வாழ்வின் விதியாகிவிட்டது
ஒருவரின் கோபத்தை ஒருவருக்குள்ளேயே
ஒரு போதும் அமுக்காமலிருப்பது.
நாம் நடக்கையில்
என்னை ஒரு குழந்தையாக நீ நடத்துவாய்
எல்லா அபாயங்களையும் உனதாக்கிக் கொள்வாய்
என் பாதச் சுவடுகளில்
என்னை நடக்கப் பழக்குவாய்
புல்வெளி மேலும் கரடு முரடான பாதைகளிலும்.
என் வாழ்வை
நான் சக்கரங்களாக மாற்றும்போது
உன் மனிதனின் தண்டவாளங்களாக
நீ மாறுவாய்
வாழ்க்கைப் பயணத்திற்கு
ஒரே மாதிரி பச்சை விளக்கு
எப்போதும் கிடைப்பதில்லை.
முன்னேறு, வலிந்து முன்னேறு
நாம் பிரியும் போதெல்லாம்
அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளுவதில்லை
ஆவலாயும் இருப்பதில்லை
ஒருவரையொருவர் மறப்பதுமில்லை.
கையை அறியும் விரல் போல்
அல்லது ஓர் இரும்பு சன்னலின் வழியே தெரியும்
வாழ்வோட்ட நரம்புகளாய்.
உலகையே சுற்றினாலும்
ஒரே அலைவரிசையில் நம் இதயங்கள்
காதலின் துல்லியமாக செய்தியை அனுப்புகின்றன.
இன்று தட்டுவதற்காக
நான் என் கையை உயர்த்துவதற்குள்
நீ கதவைத் திறந்து வரவேற்கிறாய்
முழுமையான மகிழ்ச்சியுடன்.
குளிர்க்காற்றிலிருந்து நீ என்னைப் பாதுகாத்தாய்
கோடை மழையிலிருந்து நான் உன்னை
நீ தடுமாறுகையில்
நானுன்னைப் பிடித்து உயர்த்துகிறேன்.
நான் மெலிகையில்
நீ எனக்கு வலுவூட்டுகிறாய்.
எனினும் நாம் தனிமரங்கள்.
வாழ்வின் வெம்மையால் சுற்றிக் கட்டப்படுகிறோம்
விதியின் வேர்களை நிர்மாணித்துக் கொண்டு.
நன்றி – உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) பக்.45
கவிதை ஆசிரியர் – ஹுவாங் ஹுவாய் Huang Huai
தமிழில் ப.கல்பனா
பரிசல் பதிப்பகம்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.