கவிதைச் சந்நதம் 38 // நா.வே.அருள்
‘அப்பாவும் நானும்’ கவிதை – நல்லு ஆர் லிங்கம்
வெறுங்கால் மனிதர்கள்
*********************************
ஒரு விவசாயிக்கு புஞ்ச காணியோ, நஞ்ச காணியோதான் சாமி. நிலத்திலேயே
கிடந்து நிலத்திலேயே உழன்று சேற்றில் அங்கப் பிரதட்சணம் செய்து அப்படியே
அவரது ஆயுள் முடிந்துவிடும். ஒரு விவசாயிக்கு எது தீர்த்தம்? …
வாய்க்கால் தண்ணீர்! எது பிரசாதம்? கட்டரிசி (நாற்றங்கால் விட்ட நாளன்று
ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லமும் கலந்து வீட்டில் எல்லோருக்கும்
கைப்பிடிக் கைப்பிடியாய்த் தருவார்கள். கட்டரிசியில் செய்வதால் அதற்குப்
பெயர் கட்டரிசி. திண்டிவனம் பக்கத்தில் இந்தப் பெயர். இடத்துக்கு இடம்
வெவ்வெறு பெயர்கள்). அப்பா தருகிற இந்த பிரசாதம்தான் அகிலத்தின் பசியைத்
தீர்க்கிறது என்று அப்பாவுக்கே தெரியாது. அவர்தான் அப்பா.
“தேன்கனித் தமிழில் திவ்வியப் பிரபந்தம்; தேவ நாகரியில் தத்துவப் பாடம்;
ஆங்கில மொழியில் உலகியல் ஞானம், அனைத்தும் பயின்று அறிவைக் கொண்டு” என்று
தன் தந்தையைப் பாடுகிறார் கவிஞர் வாலி. (வாலியின் ‘அம்மா’ கவிதைத்
தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 1995 திருத்திய பதிப்பு).
கவிஞர் நல்லு லிங்கம் அப்பாவுக்கு வயல்தான் திவ்வியப் பிரபந்தம், மாடு
கண்ணுதான் தத்துவப் பாடம். அவரவர்க்கு வாய்த்தது அவரவர் வாழ்க்கை! ஒரு
விவசாயியின் பிள்ளைக்கு வயல்தான் நண்பன்; பயிர்தான் சிநேகிதன்!
அப்பா நெற்பயிர்களை வளர்க்கிறபோது மகன் சொற்பயிர்களை வளர்த்திருக்கிறான்.
“இலை தழைகளை வெட்டிப்போட்டு
சேறடித்த நாற்றங்காலில்
முதல்நாள் இரவே
முளைகட்டி வைத்த நெல்மணிகளை
காலையில் விதைத்துவிட்டு
ஊறவைத்த பச்சரிசியுடன்
வெல்லமும் கலந்து
பிரசாதம் தருவார் அப்பா
காய்ந்தாலும் சரி பேய்ந்தாலும் சரி, அளவுக்கு அதிகமானால் விவசாயிகளுக்கு
விசனம்தான். நாற்றங்காலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது கூட அளவோடு
இருந்தால் ஆபத்தில்லை. விவசாயிக்கு வரலாறு புவியியல் மட்டுமல்ல, கணக்கு
தெரிந்திருக்க வேண்டும். இத்தனை நாள் உழவு ஓட்ட வேண்டும். இத்தனை நாள்
சேறும் தண்ணீரும் சேர்ந்திருக்க வேண்டும். பக்குவமான வேளையில்
பரம்படிக்க வேண்டும். நரம்பறுக்காமல் நாற்று பிடுங்கவேண்டும். நறுவிசாக
நாற்றைக் கற்றை கட்ட வேண்டும். நடவு நடும் பெண்கள் கையிலெடுக்கும்
நாற்றுக்கு ஒரு கணக்கிருக்க வேண்டும். இப்படிப் பக்குவமாகப் பார்த்து
நடவு நட்டபின் மழையடித்து வயலில் நீர் மட்டம் உயர்ந்தால் வயிற்றில்
புளியைக் கரைக்கும்; வானம் தரையில் கிடக்கும்!
“நாற்று நட்ட வயலுக்கு
நீர் நிரப்பிவிட்டு வந்த நாள்
நீர்மட்டம் உயர்ந்தால்
தூர் சாய்ந்துவிடுமென்று
நள்ளிரவில் பெய்யும் பெருமழையின்
நீர்வரத்தை வெளியேற்ற
மடை உடைக்க வேண்டி
கையில் மூன்று செல் எவரெடி
டார்ச்லைட்டோடு கிளம்புவார்”
“தரையில் சாய்ந்து
நீரில் அமிழ்ந்து கிடக்கும் பயிரைச்
சுற்றிச் சுற்றி வந்து பரிதவிப்பார் அப்பா”
அடிபட்டுக் கீழ் விழுந்து கிடக்கும் சக காக்கையைச் சுற்றிக் கரைந்தபடி
பறந்தடிக்கும் காக்கைகளைப் போல விதைநெல்லைப் போட்ட விவசாயி வயலைச்
சுற்றிச் சுற்றி வந்து மாரடித்து அழுகிறான் “வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கண்ணீர் சொரிந்து கசிந்துருகிய
வள்ளலாரின் வரிகள் விவசாயியைப் பார்த்துத்தான் விளைந்திருக்குமோ?
“பால் பிடித்துக் கதிர் முற்றியபின்
அறுவடைக்கு ஆள் சொல்லிவிட்டு வந்த
அந்த நாள் இரவில் திடுமென
அடித்துப் பெய்த பெருமழையில்
தரையோடு சாய்ந்து
நீரில் அமிழ்ந்து கிடக்கும் பயிரைச்
சுற்றிச் சுற்றி வந்து பரிதவிப்பார் அப்பா”
“பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்டணும்” – என்று பழமொழி
சொன்னாலும் பங்காளிக்கு ஒரு நெருக்கடி வந்தால் பக்கத்தில் வருவது
பங்காளிதானே? “பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே” என்றும் “ஆபத்திலே வந்து
பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்” (கண்ணன் என் தோழன்) என்றும் பாடிய
பாரதி நம் பாட்டன் அல்லவா? திடீரென மழை வருகிற போது பகையை மறந்து மூட்டை
பிடிப்பதற்காக, நனையும் துணிகள் எடுக்கப்போன மகளையும் மனைவியையும் பகை
கொண்ட தம்பி வீட்டுக்குப் போகச் சொல்லிப் பரபரக்கிறார். கோபத்தின்
பிள்ளைகள்தானே கொஞ்சவும் செய்கிறார்கள்!
“சடசடவென மழை தூற
கொடியில் காயும் துணிகளை எடுக்க
அம்மாவும் அக்காவும் ஓட
அங்க பாரு, அவன் இன்னமும்
மூட்டை புடிச்சிட்டு இருக்கான்
சீக்கிரம் போய் அள்ளிப் போடுங்க என்று
பேச்சுவார்த்தை இல்லாத சித்தப்பா வீட்டு
நெல்மணிகளைக் காக்க
எங்களை விரட்டுவார் அப்பா”
மாடு கன்றுகள் விவசாயியின் மனைவி மக்கள் மாதிரி. குடும்பத்து நபர்களைப்
போலவே மாடு கன்றுகள் மற்றும் கோழி, பூனை, நாய் போன்றவையும் விவசாயியின்
குடும்ப உறுப்பினர்கள். கன்று போடும் பசு மாட்டுக்கு அவ்வளவு
பக்குவமாகப் பண்டுவம் பார்ப்பார்கள். கன்று குட்டிகளைத் தங்கள்
குழந்தைகள் மாதிரி வளர்ப்பார்கள். “சேற்றில் மாடுகள் உழப்பிக்கொண்டு
கிடப்பதைப் பார்க்கச் சகிப்பதில்லை. கோதாணியைப் பிடித்து மேடான இடத்தில்
போட்டு கம்மந்தட்டு, கடலைக் கொடி, சோளத்தட்டு போட்டு வருவார் அப்பா.
அப்பா ஏன் வெறுங்காலோடு இருக்கிறார்? மகனின் கவிதை விடை கேட்டு
விசும்புகிறது…காலில் செருப்பில்லாமல் சேற்றில் நடந்த கதையைக் கேட்டால்
கண்களில் நீர் திரள்கிறது. உண்மையில் விவசாயிகள் வெறுங்கால் மனிதர்கள்!
“அதிகாலை நாலு மணிக்கு எழுந்து
கொங்காடை போட்டுக்கொண்டு பால் கறந்து
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும்
கூட்டுறவு சொசைட்டிக்கு
சைக்கிளில் போனால் வழுக்கும்
செருப்பணிந்து நடந்தால்
சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்று
வெறுங்காலில் நடந்தே போய்
ஊற்றிவிட்டு வருவார் அப்பா”
“இன்று உழவும் இல்லை, மாடு கன்று எருமை எதுவுமில்லை, வாழ்க்கையின்
சாட்சியாய் இருந்த அம்மாவும் இல்லை, தார்ச்சாலைப் பட்டணத்துக்கு அப்பா
என்னோடு வரவுமில்லை” என்று சேற்றிலும் நேற்றிலும் புதைந்துபோன வாழ்க்கையை
எண்ணிக் கண்ணீர்த் துளிகளைக் கோர்த்தெழுதுகிறான் கவிஞன். பிரக்ஞை
பூர்வமான கவிதை; பிலாக்கணம் இல்லை இதயபூர்வமான கவிதைக்கு இலக்கணம்
இல்லை. நேற்று வயல்வெளியில் பயிர்கள் இல்லை; இன்று வயல்வெளியே இல்லை!
“இன்றைக்கும் அதிகாலையில்
மழை பெய்கிறது
ஐந்து மணிக்கு எழுந்து
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்
தன் மகன் கவிதை எழுதுவான் என்று
அப்பாவுக்குத் தெரியாது
அப்பா என்ன நினைத்துக் கொண்டிருப்பார்
என்பது மட்டும் இந்த
மகனுக்குத் தெரியும்”
ஒரு விவசாயியின் வாழ்க்கையைக் கண்முன் கொண்டுவருகிறது இந்தக் கவிதை.
விவசாயத்திற்கு ஊற்றுக்கண் விதைநெல். விதையிலிருந்து விருட்சமாக மாறிய
மனிதர்களில் சிலர் காடுகளை அழிக்கிற கோடரிகளாக மாறிவிடுவதுதான்
விசித்திரம்.
தன் விவசாயி அப்பாவை நினைத்து நகரத்தில் வசிக்க நேர்ந்த மகன்
உருகுகிறபோது “பயிர் வாடுகிறபோது உயிர் விடுகிற விவசாயிகள்” டெல்லியில்
போராட்டத்தில் உயிர்நீத்த கதையெல்லாம் நெஞ்சில் புரள்கிறது. குறைந்தபட்ச
விலை நிர்ணயத்திற்காகவும் போராடிய விவசாயிகளின் வாழ்க்கை இன்றும்
குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறது. என்ன செய்ய?
நாட்டின் தலைவிதி நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதைவிட நாற்றங்காலால்
தீர்மானிக்கப்படவேண்டும். ஒரு நாட்டின் சிம்மாசனம் எலும்புகள் இழைத்துச்
செய்யப்படுகிறபோது சர்வாதிகாரம் கோலோச்சுகிறது. ஒரு விவசாயி
பிரதமராகிறபோதேனும் மரம் சிம்மாசனமாக மாறும் என்று எதிர்பார்க்கலாமா? .
பின்குறிப்பு –
கொங்காடை – மழைக்குச் சணல் சாக்கினை மூலை மடக்கி முக்காடு போலப் போட்டுக்கொள்வது
கோதாணி – மாடுகளுக்குத் தீனி வைப்பதற்குக் கழிகளை வைத்துப் பின்னுகிற
மேலும் கீழும் திறந்த நிலை வட்டுகள்
இனி கவிதை –
இலை தழைகளை வெட்டிப்போட்டு
சேறடித்த நாற்றங்காலில்
முதல்நாள் இரவே
முளைகட்டி வைத்த நெல்மணிகளை
காலையில் விதைத்துவிட்டு
ஊறவைத்த பச்சரியுடன்
வெல்லமும் கலந்து
பிரசாதம் தருவார் அப்பா
நாற்று நட்ட வயலுக்கு
நீர் நிரப்பிவிட்டு வந்த நாள்
நீர்மட்டம் உயர்ந்தால்
தூர் சாய்ந்துவிடுமென்று
நள்ளிரவில் பெய்யும் பெருமழையின்
நீர்வரத்தை வெளியேற்ற
மடை உடைக்க வேண்டி
கையில் மூன்று செல் எவரெடி
டார்ச்லைட்டோடு கிளம்புவார்
பால் பிடித்துக் கதிர் முற்றியபின்
அறுவடைக்கு ஆள் சொல்லிவிட்டு வந்த
அந்த நாள் இரவில் திடுமென
அடித்துப் பெய்த பெருமழையில்
தரையோடு சாய்ந்து
நீரில் அமிழ்ந்து கிடக்கும் பயிரைச்
சுற்றிச் சுற்றி வந்து பரிதவிப்பார் அப்பா
சடசடவென மழை தூற
கொடியில் காயும் துணிகளை எடுக்க
அம்மாவும் அக்காவும் ஓட
அங்க பாரு, அவன் இன்னமும்
மூட்டை புடிச்சிட்டு இருக்கான்
சீக்கிரம் போய் அள்ளிப் போடுங்க என்று
பேச்சுவார்த்தை இல்லாத சித்தப்பா வீட்டு
நெல்மணிகளைக் காக்க
எங்களை விரட்டுவார் அப்பா
உழவு மாடுகள் கட்டிய இடம்
மிதித்து மிதித்து சேறாகிவிட
என்னையும் கூட்டிப்போய்
கோதாணியைப் பிடித்து
மேடான இடத்தில் போட்டு
கொஞ்சம் கம்மந்தட்டு கடலைக்கொடி
சோளத்தட்டு ஆரியக்கூளம் ஏதோ ஒன்றைப்
போட்டுவிட்டு வருவார் அப்பா
அதிகாலை நாலு மணிக்கு எழுந்து
கொங்காடை போட்டுக்கொண்டு பால் கறந்து
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும்
கூட்டுறவு சொசைட்டிக்கு
சைக்கிளில் போனால் வழுக்கும்
செருப்பணிந்து நடந்தால்
சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்று
வெறுங்காலில் நடந்தே போய்
ஊற்றிவிட்டு வருவார் அப்பா
இன்றைக்கும் அதிகாலையில்
மழை பெய்கிறது
ஐந்து மணிக்கு எழுந்து
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்
தன் மகன் கவிதை எழுதுவான் என்று
அப்பாவுக்குத் தெரியாது
அப்பா என்ன நினைத்துக் கொண்டிருப்பார்
என்பது மட்டும் இந்த
மகனுக்குத் தெரியும்
– நல்லு ஆர்.லிங்கம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
