கவிதைச் சந்நதம் 39
கரப்பான் பூச்சிகளின் காலமும்
காக்ரோச் ஜனதா பார்ட்டியும்
***********************************
“கரப்பான் பூச்சி பற்றி கதை எழுதிய நாம் இனியாகிலும்
கரப்பான் பூச்சி நம்மைப் பற்றி
என்ன கதை எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?”
என்று எழுதிய இந்திரனின் இந்த வரிகள் இன்றைய அரசியல் நிலைமையைத் 2018 ஆம்
ஆண்டிலேயே முன்கூட்டி சொல்லி இருப்பது வியப்பினைத் தருகிறது. ஒரு
கவிஞன் சமூகத்தின் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்பவனாக இருக்கிறான்.
இதனைத்தைத்தான் பரிதிமாற்கலைஞர் என்று தன் பெயரைத் தமிழ்ப் படுத்திக்
கொண்ட ஸ்ரீ சூரிய நாராயண சாஸ்திரி அவர்கள் “ரவி செல்லாத இடத்திலும் கவி
செல்லுவான்” என்று குறிப்பிடுகிறார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி தொடங்கப்பட்ட – அந்தப் பாடல் வைரலாய்ப் பரவிய –
இந்தக் கால கட்டத்தில் இந்தக் கவிதை மேலும் தன் இருப்பை நிலை
நிறுத்திக்கொள்கிறது.
“ஒரு தலையை வெட்டினாலும்
ஒரு வாரமாவது உயிர் வாழ்ந்து காட்டும் கரப்பான் பூச்சிகள்
போராட்ட வீரர்கள்.”
இந்த வரிகள் எப்படி இன்றைய ஜென்சிகள் வைரலாக்கிய காக்ரோச் ஜனதா
பார்ட்டிக்குப் பொருந்துகின்றன?
இந்தக் காலம் கவிதைகளின் காலம் அல்ல. மாறாக, எதிர் கவிதைகளின் காலம்.
அது என்ன எதிர் கவிதைகள்?
இன்று எதிர் கவிதைகளின் புதிய வரலாறு எழுதப்படுகிறது. ‘எது கவிதை’ என்று
அரசர்களின் அந்தப்புரங்களில் கூந்தல் இழைகளைத் தேடிய காலம் போய் விட்டது;
‘எதுவும் கவிதை’ என்று சாக்கடைகளில் பரபரத்து ஓடும் கரப்பான்
பூச்சிகளின் கால்ம் இப்போது. கடவுளின் கர்ப்பக் கிரகத்தில் பூசாரிகளின்
புனித வார்த்தைகளுக்கு ஏங்கிய காலம் முடிந்து விட்டது; ‘எதுவும் கவிதை’
என்று மருள் வந்த சாமிகளிடம் மல்லுக்கு நிற்கும் காலம் இப்போது.
மந்திரிகளின் வீட்டுத் தானியங்களுக்காக வரிசையாக ஊர்ந்து சென்ற
எறும்புகளின் காலம் இனி இல்லை; அவர்களின் சமையலறை உணவுகளில் விழுந்து
பரபரக்க வைக்கும் கரப்பான் பூச்சிகளின் காலம்!
கரப்பான் பூச்சிகளைப் பாடக் காரணம் என்ன என்று இந்தக் கவிஞன் சொல்லும்
காரணங்களே ஒரு கவிதையாகியிருக்கிறது. “பொன்வண்டுகளையும்
பட்டாம்பூச்சிகளையும் பாடிய காலம் முடிந்துவிட்டது” என்கிறான் கவிஞன்.
கரப்பான் பூச்சிகள் “சூரியனை நிராகரிக்கும் தைரியம் கொண்டவையாம்”
சூரியனையே நிராகரிக்கிறபோது தாமரைகள் எம்மாத்திரம்?
மனிதனின் தோல்விக்கு மாபெரும் காரணம் மந்தை குணமாகத்தான் இருக்க
வேண்டும். அதனால்தான் இந்தக் கவிஞன் ஆடுகளைப்போல மந்தை குணம் இல்லாத
கரப்பான் பூச்சிகளை ஆராதிக்கிறான். “எறும்புகள் போல் அவை மற்றவர்களைப்
பின்பற்றுவதில்லை. அவை சுய சிந்தனையாளிகள்” என்று அவற்றிற்குத்
தன்மானச் சான்றிதழ் தருகிறான். தன்னைத் தாக்க வரும் மனிதனைத் தன்
குட்டைச் சிறகுகளால் தாக்க நினைக்கிற கரப்பான்கள் தன்மானச் சின்னங்கள்
அல்லவா? தலையை வெட்டினாலும் ஒரு வாரம் உயிர் வாழும் தனித்துவம்
கொண்டவையாம்.
மூவாயிரம் இலட்சம் ஆண்டுகளாய் வாழ்கிற இனம் மட்டும் அல்ல. அந்த இனம்
அணுகுண்டால் அழிக்கப்பட்டாலும் கூட பூண்டற்றுப் போகாமல் பூமியில் வாழும்
உயிர்ச்சக்தி உள்ளவை கரப்பான்கள் என்று அறிவியல் சொல்கிறது.
டைனோசர்கள் பூமியில் தோராயமாக 16.5 கோடி (165 மில்லியன்) ஆண்டுகள்
வாழ்ந்தன. அவை டிரயாசிக் யுகத்தின் பிற்பகுதியில் (சுமார் 23.3 கோடி
ஆண்டுகளுக்கு முன்) தோன்றி, கிரெட்டேசியஸ் யுகத்தின் இறுதி வரை (சுமார்
6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்) நிலைத்திருந்தன.
உருவில் பெரிய டைனோசர்களே உருத்தெரியாமல் போய்விட்டன. ஆனால் கரப்பான்கள்
அழிவையும் மீறி வாழும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.
“கரப்பான்கள் ஜனதா கட்சி” ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கால கட்டத்தில் இந்தக்
கவிதை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்… பட்டதாரிகளையும் சமூக
ஊடக விமர்சகர்களையும் ‘கரப்பான்பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என
ஒப்பிட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் விதமாக இந்த “Cockroach Janta Party”
வேலையில்லாதவர்களுக்கான கட்சி..என்ற நையாண்டி இயக்கம் சமூக
வலைத்தளங்களில் இளைஞர்களால் தொடங்கப்பட்டது…
“நாங்கள் சோம்பேறிகள் அல்ல… . வேலை இல்லாத பட்டதாரிகள் என்று முழங்கும்
பாடலுடன் வருகிறார்கள். உங்கள் சிஸ்டம் உருவாக்கிய கரப்பான் பூச்சிகள்
நாங்கள் என்கிறார்கள். “எங்கள் வலிமை என்னவென்று தெரியுமா?” என்று
எக்காளம் இட்டு வருகிறார்கள் கரப்பான்கள்.
இந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த நையாண்டிப் பக்கம்,
இன்ஸ்டாகிராமில் அசுர வேகத்தில் வளர்ந்தது… 5 நாட்களில் 2 கோடி பேர்கள்
பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். இதைக் கண்டு அரசாங்கம் அஞ்சிவிட்ட
நிலையில் Cockroach Janta Party’ (CJP) அதன் எக்ஸ் X ட்விட்டர் கணக்கு
நம் நாட்டில் முடக்கப்பட்டது…
இதில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் கடும்
விரக்தியில் இருக்கும் இன்றைய தலைமுறை (Gen Z) இளைஞர்கள்…
நிறுவனர் அபிஜீத் திப்கே.. தற்போது அமெரிக்காவில் போஸ்டன்
பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே அங்கிருந்துதான் இதை இயக்குவதாகத்
தெரிகிறது.
காக்ரோச்கள் போலவே நசுக்கப்பட்டாலும் இந்த பார்ட்டி மீண்டும் புத்துயிர்
பெற்றுத் திரும்ப வருகிறது. இணைய நிறுவனங்கள் இவர்களை முடக்கினாலும்
புதிய புதிய பெயர்களில் கரப்பான்களைப் போலவே கண்களை உறுத்துகிறார்கள்.
கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, “”Cockroach is Back”” என்ற
பெயரில் புதிய மாற்றுக் கணக்கை எக்ஸ் (X) தளத்தில் தொடங்கிவிடுகிறார்கள்.
சேகுவேரா போன்ற தலைவர்கள் போராடிய கொரில்லாப் போர் முறையை நாம் அறிவோம்.
“கரப்பான்பூச்சிகள் எவ்வளவு அடித்தாலும் அழியாதவை” என்ற உயிரியல் உண்மையை
தங்களின் அடையாளமாக மாற்றிய.” CJP போன்ற அமைப்புகள் “டிஜிட்டல்
கொரில்லா”போன்று செயல்படுகிறார்கள்.
ஒரு கணக்கை முடக்கினால் அடுத்த நிமிடமே ‘Cockroach is Back’ எனப் புதிய
கணக்குகள் தொடங்குவது, விபிஎன் (VPN) மூலம் மக்கள் பக்கங்களை அணுகுவது
எனத் தொழில்நுட்ப ரீதியாக இவர்களை முழுமையாக முடக்குவது அரசுக்குத்
தொழில்நுட்ப ரீதியான சவாலாகும்..
இந்தியாவில் ஒரு எக்ஸ் (X) கணக்கோ அல்லது இன்ஸ்டாகிராம் பக்கமோ
முடக்கப்பட்டால், அது இந்திய எல்லைக்குள் மட்டும்தான் செல்லாது…..
இவர்கள் இப்படியான தந்திரங்களைப் புரிந்து எதிர்வினையாற்றும்
மூளைக்காரர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் மிக எளிதாக “”VPN (Virtual Private Network)””
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் இருப்பிடத்தை அமெரிக்கா என்றோ
அல்லது சிங்கப்பூர் என்றோ மாற்றி, அதே முடக்கப்பட்ட பக்கங்களை
இந்தியாவில் இருந்துகொண்டே தடையின்றிப் பார்க்க முடியும் போல!
நிறுவனர் அபிஜீத் திப்கே தற்போது வெளிநாட்டில் இருப்பதால், இந்தியச்
சட்டங்களால் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை அங்கே முடக்க முடியாது. அவர்
டெலிகிராம் (Telegram), ரெடிட் (Reddit) அல்லது டிஸ்கார்ட் (Discord)
போன்ற அரசுகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியாத பரவலாக்கப்பட்ட
தளங்களுக்கு இந்த இளைஞர் கூட்டத்தை மாற்றிவிடுவார்.
கிரேக்க புராணத்தில் ‘ஹைட்ரா’ என்றொரு பாம்பு உண்டு; அதன் ஒரு தலையை
வெட்டினால் அங்கே இரண்டு தலைகள் முளைக்கும். இணைய உலகமும் அப்படித்தான்.
அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் பக்கங்கள் முதன்மைக் கணக்கு முடக்கப்பட்டால்,
‘CJP Tamil’, ‘CJP Mumbai’, ‘CJP Delhi’ என நூற்றுக்கணக்கான கிளைக்
கணக்குகளைப் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தன்னிச்சையாகத்
தொடங்குவார்கள். (நன்றி – அம்மா சஹஸ்ரா முகநூல் பதிவு)
வைரலான கரப்பான் பூச்சிப் பாடலில் சில வரிகள்…
“காக்ரோச் ஜனதா பார்ட்டி” வந்தது
கேள்விகளின் புயல் கொண்டு வந்தது
நாங்கள் பெருமையுடன் சொல்கிறோம்
நாங்கள் காக்ரோச்
எவ்வளவு அடித்தாலும்
நாங்கள் மீண்டும் எழுவோம்.
கண்விழித்து நாங்கள் யுபிஎஸ் எழுதினோம்
சிஸ்டம் எங்களைத் தள்ளிவிட்ட போது
காக்ரோச்சாக மாறி முன்னேறினோம்….
ஒரே குரல் ஐந்து கோரிக்கைகள்
நாங்கள் சோம்பேறிகள் அல்ல
ஆனால், வேலை இல்லாதவர்கள்
தற்போது இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை மிகவும் தீவிரமானது……!!
“உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி
போன்ற பதவிகளை வழங்கக் கூடாது”.
“நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும்.”
” கட்சி தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட
தடை விதிக்க வேண்டும்.”
“நீட் தேர்வு சர்ச்சை மற்றும் கல்வித்துறை அமைச்சரின் பொறுப்புக்கூறல்.”
என்று இவர்களின் கோரிக்கைகள் இந்திய ஜென்சிகளின் கோரிக்கைகளாக அங்கீகாரம்
பெற்றுவிட்டன.
மேலும் இவர்கள் நிஜ உலகிலும் இறங்கி சில வேலைகளைச் செய்தனர் என்று அறிய
முடிகிறது. டெல்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணிகளில்
கரப்பான்பூச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னார்வலர்களாகப் பணியாற்றினராம்.
இவர்களின் குரலாக இந்திரனின் குரல் ஒலித்திருப்பதுதான் எனக்கு வியப்பைத்
தருகிறது. இந்திரனின் ‘கரப்பான் பூச்சிகளின் காலம்’ படித்துப்
பார்க்கிறபோது அவரது கவிதையின் வரிகளிலேயே நமக்கும் கேள்வி கேட்கத்
தோன்றுகிறது….
“கரப்பான் பூச்சி பற்றி கதை எழுதிய நாம் இனியாகிலும்
கரப்பான் பூச்சி நம்மைப் பற்றி
என்ன கதை எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?”
இனி இந்திரனின் முழுக் கவிதை –
கரப்பான் பூச்சிகளின் காலம்
/ இந்திரன் /2018
பொன்வண்டுகளையும் பட்டாம்பூச்சிகளையும் பாடிய காலம் முடிந்துவிட்டது இப்போது.
அதனால் தான் கரப்பான் பூச்சிகளைப் பாடுகிறோம்.
சூரியனை நிராகரிக்கும் தைரியம் கொண்டவை அவை.
எறும்புகள் போல் அவை மற்றவர்களைப் பின்பற்றுவதில்லை.
அவை சுய சிந்தனையாளிகள்.
தன்னைத் தாக்க வரும்
மனிதனின் முகத்தைத்
தனது குட்டையான
இரட்டை இறக்கைகளால்
பறந்து தாக்கலாமா
அல்லது பதுங்கலாமா என்பதை
ஒவ்வொரு கரப்பானும் தனித்து முடிவெடுக்கிறது.
சதா இருட்டைத் தின்று ஈரத்தைப் பூசி
சாக்கடை பள்ளத்தின்
சாம்ராஜ்யம் வென்று
300 மில்லியன் ஆண்டுகளாய்
உலகை வென்று வாழும்
கரப்பான் பூச்சிகள் பார்வையில்
மனிதன் ஒரு தூசு.
ஒரு தலையை வெட்டினாலும்
ஒரு வாரமாவது உயிர் வாழ்ந்து காட்டும் கரப்பான் பூச்சிகள் போராட்ட வீரர்கள்.
கரப்பான் பூச்சி பற்றி கதை எழுதிய நாம் இனியாகிலும்
கரப்பான் பூச்சி நம்மைப் பற்றி
என்ன கதை எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
–2018இல் வெளிவந்த
இந்திரனின்
” மேசை மேல் செத்த பூனை ”
கவிதைத் தொகுப்பிலிருந்து
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஒரு கவிஞனின் தொலைநோக்குப் பார்வை. அற்புதம்.
Thank you very much comrade.
இந்திரன் 2018ல் இதை எழுதியது அருமை என்றால், 2026ல் அதை நினைவூட்டியது இன்னும் அருமை.