கவிதைச் சந்நதம் 2: நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 2: நா.வே.அருள்

தரையிறங்கும் காதல் விமானங்கள்

கவிதை – நேசமித்ரன்

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துத் தவம் கிடப்பவன்தான் கவிஞன்.  வலசைப் பறவைகள் தட்டுப் படாமலா போகும்?  வலசைப் பறவைகள் சில கதைகளைத் தங்களுக்குள் வைத்திருக்கின்றன.  அவற்றை மேகங்களுக்குச் சொல்கின்றன.  மேகங்களுக்குத் தலை வெடித்துவிடும் போல.  யாரிடமாவது சொல்லியாக வேண்டுமே…. நசுங்கி நசுங்கி மழையாக மாறி நதிமேல் விழுகின்றது.  மீன்குஞ்சுகளிடம் மெல்ல சொல்கிறது.  மழை கடைசியில் நதியோடு நதியாக மறைந்தும் போகிறது.

“வலசைப் பறவைகள் மேகங்களிடம் சொன்ன

கதைகளை மீன்குஞ்சுகளோடு ஒப்பித்துக் கொண்டிருக்கிறது”

எப்படி?

“நதிமேல் நட்சத்திர நிழல்களை

அச்சிடும் மழை”

அச்சிடுவதால்தான் நதியின் தாள் அலையெழுப்பி அசைகிறது போலும்.  அச்சிடும் எழுத்துகளைப்போலவே நிழல்களுக்கும் கருவண்ணம். வான மீன்கள் நதியின் மீன்களோடு கலந்துவிடுகின்றன.  கவிதை நம்மோடு கலந்துவிடுகிறது.  கற்பனையின் அதீதங்களுடன் திரிகிற கவிஞனால்தான் இப்படி எழுத முடியும்.

“காலையில் கேட்ட பாடலை நாளெல்லாம் முணுமுணுக்கிற உதடாய்”.  ஒரே பாடலை ஒரு நாள் முழுதும் முணுமுணுக்க வைப்பது அந்தப் பாடலின் ஈர்ப்பு மட்டுமா?  மனம் ஏதோவொன்றில் தன்னை மறந்து லயித்துக் கிடக்கிறபோது ஒரே பாடல் திரும்பத் திரும்ப ஒலிக்கும் சாத்தியமுண்டு.  இது காதல் பித்து.  பித்தேறிக் கிடக்கும் மனசு தத்துப் பித்து என்றுதானே உளறிக் கிடக்கும்!  இப்படியான பித்துக்குளி நினைப்பு உஷ்ணத்தை மூளவிடுகிறது.  ரோமங்களை ஈசல்களாக்கிக் கார் கொண்டாடுகிறது. இதெல்லாம் எப்படி?  உஷ்ணம் எப்படி கார் (மேகம், மழை) ஆகிறது? உஷ்ணத்தில் வேர்வை மழை பொழிகிறது? இது காதல் பருவ காலம்.  கவிதை திரளும் போதம்.

வண்டல் எங்கு படியும்?  ஆற்றுப் படுகையில்.  கவிதைப் பித்துப் பிடித்தவனுக்கு காதலியின் ஒரு செம்பட்டை நிறத்தாலான பிடரிக் குறுமயிர் நதி அலைவதாய்ப் படுகிறது. பின் கழுத்தில் வண்டல் திரள்கிறது.  வேர்வைத் திரள்களோ?  வண்டல் திரள்களோ?  கண்டு ரசித்தவனின் கண்களுக்கே இந்தக் காதல் வெளிச்சம் சித்திக்கும். .

செம்மண்ணும் மணலும் சேருமிடம் கண்டதுண்டா? அதைக் கண்டவர்களுக்கே இந்தக் காதல் சொர்க்கம் கண்வசமாகும்.

“மூட்டுகளின் பின்புற வரிகள்
இந்த செம்மண்ணும்
மணலும் சேருமிடம்”

மூட்டுகளின் பின்புற வரிகளைப் படிக்கிறவன் கண்களை அப்புறப்படுத்த முடியாத அந்தரங்க அவஸ்தை அவனுக்குத்தான் தெரியும். இவை காதல் வசப்பட்டக் கண்களின் கவித்துவக் கூடார்த்தங்கள்.

“தாவணி விசிறிகள் வீசுகிறேன்.  மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் அதைப் பூசுகிறேன்” என்று கவிப்பேரரசு வைரமுத்து திரையிசையில் பூசிய காதல் களிம்பைக் கண்டிருக்கிறோம்.  முந்தானையாய் அவளது சிறகுகள் தரையிறங்குகிறதாம்.  ஒரு சேலை விமானத்தைப் போல அவளது சிறகுகள் மெல்லத் தரையிறங்குகிறது.  கவிஞன் அந்தப் பொழுதுக்காய்க் காத்திருக்கிறானாம்.  எப்படி?  ஒரு பென்சிலைப் போல கடிகாரத்தைச் சீவியபடியே காத்திருக்கிறானாம்.  பென்சிலின் தேவையற்ற மரத்தோல்களைப் போல காலத்தைச் சீவி உதிர்க்கிறான்.

“வர்ணம் மாறாத நதியோட்டத்தில் எங்கோ மூழ்கிய நீர் காகம் திடீரெனத் தலையுயர்த்துகிறது”.  அது ஏன் நீர் காகம்?  அது மற்றப் பறவைகளைவிட புத்திசாலித்தனமானது. விளையாட்டுத்தனம் மிக்கது. வேட்டைக்குத் தப்பிவிடக் கூடியது.  அதன் கரைதல் வெறும் கரைதல் அல்ல.  மொழிதல்.  அதன் சப்த வேறுபாடுகளைக் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், இணையினை அழைக்கவும் வெவ்வேறு சப்த அலைகளை எழுப்புகின்றன.  அதனால்தான் முழுகி எழுந்திருக்கும் வேறொரு பறவையைவிடவும் கவிஞன் நீர் காகத்தைத் தேர்ந்தெடுக்கிறான். காகம் காதலர்களின் சேஷ்டைகளை நினைவுபடுத்திவிடுகிறது போலும்!  காகத்தின் அலகுக்குக் கீழே மூக்குப் பகுதியை ஒட்டி சிறு சிறு முட்கள்போன்ற முடிகள் இருக்கும்.  இவை காதலியின் பிடிரிக் குறுமயிர்களைச் சூசகமாகச் சுட்டிவிடுகின்றன,  இவ் வார்த்தைத் தேர்ந்தெடுப்புகள் எதேச்சையாகவோ அல்லது திட்டமிட்ட ஞாபகப்படுத்தலாகவோ இருக்கலாம்.

“கண்ணாடி மேல் முத்தமிட்ட
உன் உதடுகளை வானில் ஒட்டவை
இந்த பிறை சீக்கிரம் வளரட்டும்”

இம்மூன்று வரிகளால் கவிதையை மண்ணிலிருந்து விண்ணிற்கு உயர்த்திவிடுகிறார்.  உதட்டினைப் பிறை என்று சொல்வது பெரிய விஷயமில்லை.  ஆனால் அந்தப் பிறை சீக்கிரம் வளரட்டும் என்கிறபோது கவிதையின் அர்தத்தை விரிவுபடுத்திவிடுகிறார்.  இக்கவிதையும் ஒரு முழு நிலவினைப்போல நம் இதயத்தில் அமர்ந்து ஒளிவீசுகிறது.

இனி நேசமித்ரனின் கவிதையை நீங்களே படித்துக் கொள்ளுங்கள்……

வலசைப்பறவைகள் மேகங்களிடம் சொன்ன
கதைகளை மீன்குஞ்சுகளோடு ஒப்பித்துக் கொண்டிருக்கிறது
நதிமேல் நட்சத்திர நிழல்களை
அச்சிடும் மழை

காலையில் கேட்ட பாடலை நாளெல்லாம்
முணுமுணுக்கிற உதடாய்
நினைத்து மூளும்
உஷ்ணம் ரோமங்களை ஈசல்களாக்கி
கார் கொண்டாடுகிறது

உன் பிடறிக் குறுமயிர்
அலைவதாய்
வண்டல் திரள்கிறது
தீரங்களில்

மூட்டுகளின் பின்புற வரிகள்
இந்த செம்மண்ணும்
மணலும் சேருமிடம்

அவகாசமற்ற உன் சிறகுகள்
முந்தானையாய் தரையிறங்கும்
பொழுதுக்காய் பென்சிலைப் போல்
சீவிக் கொண்டிருக்கிறேன்
என் கடிகாரத்தை

வர்ணம் மாறாத நதியோட்டத்தில்
எங்கோ மூழ்கிய நீர்காகம்
திடீரென தலையுயர்த்துகிறது

கண்ணாடி மேல் முத்தமிட்ட
உன் உதடுகளை வானில் ஒட்டவை
இந்த பிறை சீக்கிரம் வளரட்டும்

 

Show 4 Comments

4 Comments

  1. நா.வே.அருள்

    அற்புதமானப் படங்களுடன் அழகு படுத்தியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *