கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

வாடிப்போன மாலைகள்

********************************* 

விசித்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு அவளது உடலுறுப்புகளே விலங்குகளாகிவிடுவதுதான். கைவிலங்கு கால் விலங்குகளை விட கருப்பை விலங்குதான் தப்பிக்கவே முடியாத தசைவிலங்கு.  பெண்ணுறுப்போ விலங்கு அல்ல; பெருஞ்சிறை! ஆண் மையச் சமூகத்தின் சர்வாதிகாரத்திற்கு அதுவே காரணமாகிவிடுகிறது.

 

ஒரு பெண் தாமதமாக வருவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் தர்மயுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது.  தருமர் சகுனியுடன் சதுரங்கம் ஆடவேண்டிய தருணங்கள் மனதில் நிழலாடுகின்றன.  பாஞ்சாலி நேரத்தில் பர்ணசாலைக்குத் திரும்பவில்லையென்றால்  பஞ்ச பாண்டவர்களின் பதற்றத்திற்குக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.   வழியெல்லாம் அவளது துகிலில் ஆயிரம் துச்சாதனர்கள் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இது வேறு கதை.

 

ஆனால் ஒரு பெண் தனக்கான நேரத்தைச் செலவிடுவதிலும் ஆயிரம் தலையிடித் தடைகள்.  கிறுக்கு முறுக்காகக் கேள்விகள்.  சகதியும் சாக்கடையுமாய்ச் சந்தேகங்கள்.  பதில் சொல்வதற்குள் பாதி உயிர் போய்விடும்.

 

“இன்று வர நேரமாகும்

புரிகிற மொழியில் தானே சொன்னேன்

பின் ஏன் வாசலருகே

கால் கடுக்கக் காத்திருக்கிறீர்கள்?”

 

போகிறவள் எங்கு போகிறாள்?  பார்க் பீச் என்று ஆண்களுக்கான அலைதல்களா?  அவள் ஒரு அறிவுஜீவி.  அறிவை மேலும் விசாலமாக்குவதற்கான விழைவுகள்.  அவ்வளவுதான்.  படிப்பைத் தேடி அலையும் பாதங்களில் குத்துவதற்கென்றே கோடரி முட்கள்.

“காத்திருக்கும் தோற்றமே நினைவைத் தூர்க்க

நூலகம் வகுப்பறை சாலைகள் முழுக்க

அலைகிறேன் பரிதவித்து.”

 

கவிமனம்.  இயற்கையுடன் சலனமற்றிருக்கும் சாந்நித்யம்.  பறவைகளின் சிறகுகளில் பதுங்கும் ஆசை.  மேகங்களின் குளிர்ச்சியாய் மிதக்கும் போதம். காலத்தை ஞாபகப்படுத்தும் கடிகாரத்தை உடைத்துவிடலாமா என்ற உள்ளம் துடிக்கும்….

“இலையசைவுகளும் பறவையொலிகளும் மாறும் மேகங்களும்

கடந்து செல்லும் நொடியை நினைவு படுத்த

எதிலும் ஒன்றாமல் கடிகாரத்தைச் சபிக்கிறேன்”.

 

பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் நெஞ்சைத் துளைக்கிற நிலைக்குத்திய கண்கள்.  துளைத்து ஊடுருவும் தொந்தரவுப் பார்வைகள்.  அள்ளி விழுங்கிவிடும் சில அசூயையற்ற ஆண்கள்.  பார்வையில் பல்லிளிக்கும் மலிவான மனக்கணக்குகள்.  புதையலைப் பார்ப்பதுபோல் சிலரின் வாய்பிளந்த வக்கரிப்புகள்…. பூமிக்குள்ளேயே புதைந்துவிடலாமா என்று நினைக்க வைத்துவிடுகிற ‘புண்ணியவான்கள்’.  இவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதால்தான் நகர முடியாமல் மெதுவாய் நகர்கிறது நகரப் பேருந்து.

“பேருந்து நிலையத்தில்

வேண்டுமென்றே நேரம் கேட்கும் விஷமிகள்

நடுக்கத்தால் பாதங்களில் நசுங்கும் மண்.

 

புத்தகங்களை முறைத்தும்

அற்பமான கேள்விகள் எழுப்பியும்

உள்ளூர நமைச்சலை ஏற்படுத்தும் சக பயணிகள்

 

நெரிசலுக்கிடையில்

வியர்த்து வதங்கித் தவிக்கையில்

ஆமையாய் நகரும் பேருந்து.”

 

இப்படியான அற்ப மனிதர்களைக் கடந்தால் வருவதுதான் அவளது வீடு.  பெண்களை அடைத்து வைக்கிற பிரபலமான சிறைச்சாலைக்குப் பெயர்தான் வீடு!  வீடுதான்… ஆனால், அவளுக்கெதிராக ஆயிரம் ஆயுதங்கள்.  சந்தேகத் தோட்டாக்கள் நிரப்பியத் துப்பாக்கிகள்.  காயம் ஏற்படுத்தக் காத்திருக்கும் கத்திகள்.  ஆனால் பல நேரங்களில் ஆயுதம் வைத்திருப்பவர்களே அம்மா… அப்பா…அண்ணன்…. மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் மாதாக்களுக்கு மகள்கள் வைத்திருக்கும் ஒரே பதில் மௌனம்தான்!

பெண்களுக்கு எதிராக ஏந்தப்படும் ஆயுதங்கள் எப்போது வரவேற்பு வளையங்களாக மாறும்?  எப்போது புன்னகைப் பூக்களாக புஷ்பிக்கும்?  மகள்கள் நேரங்கழித்து வருகிற மாலைகளில் வாசலில் எப்போது தொங்கப் போகின்றன மகிழ்ச்சி மாலைகள்?…

“தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் வீடு சேர்ந்து

மரண தண்டனை பெறப் போகும் கைதி போல் நிற்க

என் நெஞ்சைக் கீறத் தயாராய்

உங்கள் ஆயுதம்.

 

ஏன் என்னால் மடியில் கட்டிக்கொண்ட நெருப்பாக

போன பிறவியின் பாவப் பலனாக மட்டுமே

இருக்க முடிகிறது?

 

பூவாக புன்னகையாக

உங்கள் ஆயுதம் மாறும் காலம்

வராதென்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது

ஒவ்வொரு நேரங்கழித்து வரும் மாலையிலும்

 

அபத்தமில்லையா, பெண்ணாக இருப்பது?

 

இனி, கவிஞரின் முழுக் கவிதை…

 

கீறல் விழுந்த மாலைக் காலங்கள்

**********************************************

இன்று வர நேரமாகும்

புரிகிற மொழியில் தானே சொன்னேன்

பின் ஏன் வாசலருகே

கால் கடுக்கக் காத்திருக்கிறீர்கள்?

 

காத்திருக்கும் தோற்றமே நினைவைத் தூர்க்க

நூலகம் வகுப்பறை சாலைகள் முழுக்க

அலைகிறேன் பரிதவித்து.

 

இலையசைவுகளும் பறவையொலிகளும் மாறும் மேகங்களும்

கடந்து செல்லும் நொடியை நினைவு படுத்த

எதிலும் ஒன்றாமல் கடிகாரத்தைச் சபிக்கிறேன்.

 

பேருந்து நிலையத்தில்

வேண்டுமென்றே நேரம் கேட்கும் விஷமிகள்

நடுக்கத்தால் பாதங்களில் நசுங்கும் மண்.

 

புத்தகங்களை முறைத்தும்

அற்பமான கேள்விகள் எழுப்பியும்

உள்ளூர நமைச்சலை ஏற்படுத்தும் சக பயணிகள்

 

நெரிசலுக்கிடையில்

வியர்த்து வதங்கித் தவிக்கையில்

ஆமையாய் நகரும் பேருந்து…

 

தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் வீடு சேர்ந்து

மரண தண்டனை பெறப் போகும் கைதி போல் நிற்க

என் நெஞ்சைக் கீறத் தயாராய்

உங்கள் ஆயுதம்.

 

ஏன் என்னால் மடியில் கட்டிக்கொண்ட நெருப்பாக

போன பிறவியின் பாவப் பலனாக மட்டுமே

இருக்க முடிகிறது?

 

பூவாக புன்னகையாக

உங்கள் ஆயுதம் மாறும் காலம்

வராதென்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது

ஒவ்வொரு நேரங்கழித்து வரும் மாலையிலும்

 

அபத்தமில்லையா, பெண்ணாக இருப்பது?

—-ப.கல்பனா

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *