kavithai sannatham 32- na.ve.arul கவிதைச் சந்நதம் 32 - நா.வே.அருள்
kavithai sannatham 32- na.ve.arul கவிதைச் சந்நதம் 32 - நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 32 – நா.வே.அருள்

கவிதை – இளம்பிறையின் “கனவுப் பிரிவு”

வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு, அச்சத்திலும் பயத்திலுமே வடிவமைக்கப்பட்டுவிட்டால் வாழ்க்கை பயங்கரமாய் மாறிவிடும். இம் மென்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்று மகாகவியின் வார்த்தைகள் மகா வாக்கியங்கள்! பயத்தில் விடுகிற ஒவ்வொரு மூச்சும் இறுதி மூச்சல்லவா? வாசல் என்று நுழைந்த ஒன்று சிறைச்சாலையாக இருந்துவிட்டால்…
“நடப்பதற்குக்
காலைத் தூக்கும் போதெல்லாம் கூட
உதைப்பதற்கோயென
ஒடுங்கியிருக்கிறேன்.”

விசித்திரம் என்னவென்றால்….கவிதைகள் நன்றாக இருக்கின்றன; வாழ்க்கைதான் மோசமாக இருக்கிறது. சந்தேக வினாவை எதிர்கொள்ளும் தருணங்களின் பயங்கரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கையில் கோலுடன் துரத்தப்படும் ஒரு பூனையின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த பீதி கலந்த பார்வை பயத்தின் வரைபடம். பாழாய்ப் போன சந்தேகங்கள் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒரு பிளாட்டிங் தாளைப் போல உறிஞ்சிவிடுகின்றன. அனைத்து சந்தோஷமான வாக்கியங்களையும் அழித்துவிட்டு ஒவ்வொரு வார்த்தைக்கப்புறமும் முற்றுப்புள்ளிகள் விழத் தொடங்குகின்றன. காதல் அழியாதது என்கிற கவிதைச் சபதங்கள் எல்லாம் காற்றில் பறந்து விடுகின்றன.
“சந்தேக வினாக்களுக்குப்
பயந்து கலைந்த ஆடைகளுடன்
‘நான்கு வருடம் என்ன
நாற்பது வருடம் ஆனாலும்
இறக்கப் போவதில்லை
என் மனதில்
உன் உறவு பற்றி
ஒரு நினைவு கூட’
கவிதையெழுதியிருக்கிறேன்.”

தகரும் பாலத்தைச் சவுக்குக் கழிகளால் முட்டுக் கொடுத்து வைத்திருப்பது போல எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும் இல்லறத்தின் பாதை? குடும்பத்தில் தான் படும் கொடுமைகளையும் ஆற்றாமைகளையும் வெளியில் சொல்லாமல் பெண்கள் குமுறுவதால்தான் கவலைகள் கூந்தலாக நீண்டு வளர்ந்து விடுகின்றனவோ? காலைக் கடிக்கும் செருப்பு என்றால் கழற்றி எறிந்துவிடலாம். உயிரைத் தாக்கும் உறவை என்ன செய்வது? எட்டு முழ சேலைக்குள் எரிமலையை வெளியில் தெரியாமல் காப்பாற்றி வைப்பதில் இந்தியப் பெண்களின் சகிப்புத் தன்மைக்கு எல்லை இல்லை. கன்னங்களுக்கும் பல்வலிக்கும் பொருத்தமில்லாத பொய்களால் சப்பைக் கட்டு கட்டி சமாளித்து விடுகிறாள்.
‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’
சொன்னவர்களிடம்
பதில் சொல்லத் தெரியாமல்
அழுதிருக்கிறேன்.
தப்பித்தலாய்
கழிவறைக்குள் நுழைந்து
தாழிட்டு…
பாதுகாப்பையும்
நிம்மதியையும்
உணர்ந்திருக்கிறேன்.
கன்னங்கள்
வீங்கிய பொழுதெல்லாம்
‘பல்வலி’ சொல்லி
கண்ணீரை உள்வாங்க
படாதபாடு பட்டிருக்கிறேன்.”

எல்லாவற்றையும் சொல்லித் தொலைத்தாலும் பரவாயில்லை. மனம் ஆறுதலடையும். சொல்ல முடியாதவற்றை மென்று விழுங்குகிறாள். அதனால் நெஞ்சுக்குச் செரிமானப் பிரச்சனை. அவள் முள்புதரை முந்தானையால் மூடிவைக்க முயன்றால் கிழிசல்தான் மிஞ்சுகிறது. சொன்ன விஷயங்கள் கேட்டவரின் காதுகளைப் பிறாண்டுகின்றன. சொல்லாத விஷயங்கள் நெஞ்சை சிராய்த்துவிடுகின்றன. .
“இன்னும் இன்னும்
எழுத்துக்களின்
ஸ்பரிசத்தை விரும்பாமல்
எத்தனையோ கிடக்கின்றன
நெஞ்சுக்குள்.”

பெண் என்பவள் ஒரு ரப்பர் காடுதான். அதற்கும் ஓர் எல்லை உண்டு. இனிமேல் இழுத்தால் கம்பி அறுந்துவிடும். அறுந்துவிடுவதற்கு முன்பு பிரிந்துவிடுவது நல்லதல்லவா? அடுத்தவர் கண்களை இனியும் ஏமாற்ற முடியாது. இறுகிப் போய்க் கவலையில் கறுத்துப போன கண்ணீர்க் கோடுகள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டுவிட்டன. இனியும் அவற்றை வானவில் என்று சொல்வது வெறும் வாய் ஜாலம்தான்.
“இனிமேலும் முடியாது
‘நல்ல வாழ்க்கை’யென சிலர்
நினைத்துக் கொண்டிருப்பதற்காக நீடிக்க.”

திருமணத்திற்கு ஆயிரம் பொய்களுக்கு அவசியமாயிருக்கலாம். ஆனால் மணமுறிவுக்கு ஒரே ஒரு உண்மை போதும். அது சூரியனைச் சுட்டெரிக்கிற சுடர்விடும் உண்மை.
“கனவுகளை….
தனித்தனி மூட்டைகளாக்கி
விருப்பப்பட்டு பிரிகிறோம்.”

இவ்வளவு துயர்களின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் போதும் கணவன் தரப்புக் கண்ணோட்டத்தில் சிறிது சிந்திக்கவே செய்கிறாள். கண்ணீரின் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே அவன் மீதும் வருத்தங்களின் சாரல்கள் தெறித்திருக்கலாமே என்று நினைத்துப் பார்க்கிறாள்.
இருக்கலாம்…
இதைப் போலவே உண்மையாக
உன்னிடமும்
ஒரு பட்டியல்.

இவ்வளவுக்குப் பிறகும் அவள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். தன்னையே தந்ததற்கான தழுவல் அல்ல… குழந்தையின் கன்னங்களுக்கான குட்டிச் செல்லம்…. அதாவது குறைந்தபட்சம் உலர்ந்து போன ஒரேயொரு முத்தம்?
“ஆனாலும்
கடைசியாகப் பிரிந்தபோது
கடைசியாக எதிர்பார்த்தேன்
கொடுத்துவிட்டுப் போவாய்
குழந்தைக்கு
ஒரு முத்தம் என்று.”
—இளம்பிறை

கனவுப் பிரிவு

நடப்பதற்குக்
காலைத் தூக்கும் போதெல்லாம் கூட
உதைப்பதற்கோயென
ஒடுங்கியிருக்கிறேன்.

சந்தேக வினாக்களுக்குப்
பயந்து கலைந்த ஆடைகளுடன்
‘நான்கு வருடம் என்ன
நாற்பது வருடம் ஆனாலும்
இரக்கப் போவதில்லை
என் மனதில்
உன் உறவு பற்றி
ஒரு நினைவு கூட’
கவிதையெழுதியிருக்கிறேன்.

‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’
சொன்னவர்களிடம்
பதில் சொல்லத் தெரியாமல்
அழுதிருக்கிறேன்.
தப்பித்தலாய்
கழிவறைக்குள் நுழைந்து
தாழிட்டு…
பாதுகாப்பையும்
நிம்மதியையும்
உணர்ந்திருக்கிறேன்.
கன்னங்கள்
வீங்கிய பொழுதெல்லாம்
‘பல்வலி’ சொல்லி
கண்ணீரை உள்வாங்க
படாதபாடு பட்டிருக்கிறேன்.

இன்னும் இன்னும்
எழுத்துக்களின்
ஸ்பரிசத்தை விரும்பாமல்
எத்தனையோ கிடக்கின்றன
நெஞ்சுக்குள்.

இனிமேலும் முடியாது
‘நல்ல வாழ்க்கை’யென சிலர்
நினைத்துக் கொண்டிருப்பதற்காக நீடிக்க.

கனவுகளை….
தனித்தனி மூட்டைகளாக்கி
விருப்பப்பட்டு பிரிகிறோம்.

இருக்கலாம்…
இதைப் போலவே உண்மையாக
உன்னிடமும்
ஒரு பட்டியல்.

ஆனாலும்
கடைசியாகப் பிரிந்தபோது
கடைசியாக எதிர்பார்த்தேன்
கொடுத்துவிட்டுப் போவாய்
குழந்தைக்கு
ஒரு முத்தம் என்று.

-கவிஞர் இளம்பிறை

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *