நீதியின் பாதை
வாருங்கள்
நெருங்கி நடப்போம்
சிறு திருத்தம்
நாங்கள் போடுவதுதான்
உங்களுக்கான பாதை
அதிசயிக்கும் வாழ்வு
வாருங்கள்
சேர்ந்தே வாழ்வோம்
சிறு திருத்தம்
நாங்கள் காட்டுவதுதான்
உங்களுக்கான வாழ்க்கை
உன்னத மரணம்
வாருங்கள்
உற்சாகமாய்ச் சந்திப்போம்
சிறு திருத்தம்
நாங்கள் தீர்மானிப்பதுதான்
உங்களுக்கான மரணம்
துணிந்து
பயணிக்கத் தொடங்குகிறேன்
உயிர் கருகும் வாடை
நெருப்புக் குவியலிடம்
திரும்புகிறேன்
” தீயதைப் பார்க்காதே”
கண்களை மறைக்கின்றன
அந்நிய கைகள்
சப்தம் மழுங்கிய அழுகுரல்கள்
கோபம் கொள்கிறேன்
” தீயதைக் கேட்காதே”
காதுகளைப் பொத்துகின்றன
அந்நிய கைகள்
எங்கும் பொய்யின் வாய்ஜாலம்
கலைத்து விடத் துடிக்கிறேன்
” தீயதைப் பேசாதே”
வாயை மூடுகின்றன
அந்நிய கைகள்
என்னையே நான்
உற்றுப் பார்க்கிறேன்
அற்புதமாக வாய்த்திருக்கிறது
குரங்கின் சாயல்…

