அலைபேசி அழைப்பு வரலாற்றில் பதிலளிக்காமல் தேங்கி நிற்கும்
சிகப்பு வண்ண பெயர்களுக்குள் மறைந்துள்ளது..
அந்நியமான அழைப்புகள் பற்றிய அச்சம்
‘எதற்கு வம்பு ‘ எனும் தன்னலம்
தான் பரபரப்பான ஆள் எனக் காட்டும் பாசாங்கு
சிகப்பு வண்ண பெயர்கள், எண்களுக்குள் மறைந்துள்ளது..
ஆபத்தில் உதவிக்காக நீண்டு கொண்டே இருக்கும் கைகள்
ஆறுதல் கோரி விரிந்த அன்பு மனங்கள்
புறக்கணிப்பின் வலியை சுமந்து கொண்டே அலையும் உயிர்கள்
எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
நீங்கள் அழைத்த நபர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை.
இளவரசன்
ரோஹித் வெமுலா
அனிதா
நந்தீஸ்- சுவாதி
ராஜலட்சுமி
காஷ்மீர்
ஈழம்
யூதன்
பாலஸ்தீனம்
மணிப்பூர்
இடைவிடாது நீள்கிறது சிகப்பு வண்ண பெயர்களின் பட்டியல்.
கொஞ்சம் மனிதம் வேண்டும்
சிகப்பு மாறுவதற்கு.

