காதல்
காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது.
செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால்,
காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல்
காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய
எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும் தேவைதானே?
செயற்கை நுண்ணறிவு காலத்தில், திருநர், பால் புதுமையர் ஆகியோரின்
காதலுக்கு செயற்கை நுண்ணறிவின் இதயம் போலத் துடிக்கும் எந்திரக் காதல்
மாற்றாகிவிடுமா என்ன?
காதல் எவ்வளவு பழைமையாக இருக்கிறதோ, அவ்வளவு புதுமையாகவும் இருக்கிறது.
கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்ததாக இருக்கிறது காதல். காதல் காதலரைப்
பிற்போக்காக ஆக்கிவிடக்கூடும். ஆனால், காதல் தன்னை முற்போக்காகவே
தக்கவைத்துக் கொள்கிறது. ‘அதிகாரம்’ செய்ய முடியாததை அன்பால் ஆள்கிறது.
சட்டம் தகர்க்க முடியாத சாதியைக் காதல் தகர்த்துவிடுகிறது.
*********************************************************************************************************
1
ஆண் பெண்ணை நேசிப்பது அற்புதம்; பெண் ஆணை நேசிப்பது பேரின்பம்! அல்லவா?
காதலர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பது உயிர்களின் உன்னதம். இமைகள்
குறுக்கிடுவதால், அவர்களின் பார்வை கொஞ்சம் பதற்றம் அடைகிறது. ஆடை
குறுக்கிடுவதை அவர்கள் விரும்புவதில்லை; காற்று துணை செய்கிறது. சரி,
கடல் உள்வாங்கும் தருணத்திற்காக ஒரு கவிஞன் ஏன் காத்திருக்கிறான்?
அடடா சொல்ல வைத்துவிடுகிறது. அற்புதம் எவ்வளவு அநாயசமாக நடந்தேறுகிறது.
அநாயசத்தின் ஆன்மா அவருக்குள் உறைந்திருக்கிறது. அது கவிதையாய்ச்
சுரந்து கொண்டேயிருக்கிறது. காதலியை அவர் விரும்பியபடி கண்டுவிடுவதற்காக
மூழ்கி மூழ்கி முத்தெடுக்கிறார்; மூன்று வரிகள்தாம் சிக்கியிருக்கின்றன!
அலைகளை உடுத்தியிருக்கிறாள்
கடல் உள்வாங்கும் தருணத்திற்காகக்
காத்திருக்கிறேன்.

– வசந்தகுமாரன்
*********************************************************************************************************
2
மென்மையான உணர்வுகளை அழகழகான சித்திரங்களாகத் தீட்டிவிடுகிறார் கவிஞர்
ப்ரிம்யா க்ராஸ்வின். நுரை உடைவதற்கு சிறு காற்றின் அசைவு போதும்.
நுரையை விட மிகவும் மென்மையாய் அவளது மனம்; ஒலி விழுந்தாலே உடைந்து
விடுவாளாம்! கவிஞர் சங்ககால நுட்பத்திலிருந்து கவித்துவத்தை
நெய்திருக்கிறார்.
அடடா… பார்வை விழுந்தாலே காதல் ஒரு கலைடாஸ்கோப்பாக மாறிவிடுகிறதே!
நுரைக்குமிழில்
நிறங்களின்
நடனம் முடிந்து விட்டது!
கொஞ்சம் பார்த்துப் பேசு…
எதைச் சொன்னாலும்
உடைந்து விடுவாள்!

ப்ரிம்யா க்ராஸ்வின்
*********************************************************************************************************
3
ஒரு கவிஞன் தன் காதலிக்கு மரபுக் கவிதையால் மருதாணி பூசுகிறான்.
வார்த்தைகளால் வளையல்கள் போடுகிறான். கவித்துவத்தால் கண்மை தீட்டுகிறான்.
முந்தானை முழுவதும் முத்தங்கள் சுமந்ததால் அவள் இடை தாங்குமா என்று எடை
போட்டுப் பார்க்கிறான். அடடா… காதலியை விடவும் கவிதை எவ்வளவு
அழகாகிவிடுகிறது!
புண்ணேற்கும்மூங்கில்தான்
புல்லாங்குழல்! -நீண்ட
புடமேற்கும் பயணம்தான்
புகழின் நிழல் !
விண்ணேற்கும் கதிர்ப்பிழம்பே
வெளிச்சக் கடல்! -வான
வில்லேந்தும் நிறக்குழம்பே
காதல் மடல்!
மண்ணேற்கும் விதைவெடிப்பே
மரத்தின் நிழல்!–தாயின்
மடியேற்ற குடியேற்றம்
மழலைக்குடில்!
பெண்ணேஉன் கண்ணுக்குள்
காந்தப்புயல்!-அந்தப்
புயற்காற்றில் கரைசேர்த்தல்
காதல் அருள்!

– கவிக்கோ துரை வசந்தராசன்
*********************************************************************************************************
4
“கோப்பையில் பாதி தீர்ந்த மது. உள்ளத்தின் காதல் வெக்கையை அளந்துவிட்டு
வெளியில் வரும் காற்றாய்ப் பெருமூச்சு!” இது ஒரு முன்னாள் காதலனின்
வரைபடம்.
காதல் எவ்வளவு சுவாரசியமானது! இளமை கடந்த மனிதனை ‘அசைபோடும் மாடு’ போல
ஆக்கிவிடுகிறது இளமைக்கால காதல் நினைவுகள். என்னதான் சிகரெட் புகை
வாசத்தில் மறக்க நினைத்தாலும், முதல் முதல் நுகர்ந்த முந்தானை வாசம்
மூக்கைத் துளைக்கிறது. என்னதான் கோப்பை மது குப்புறக் கவிழ்த்தாலும்
மலரும் நினைவின் மகத்தான காதல் மனிதனை மல்லாத்திப் போடுகிறது! ஒவ்வொரு
வீட்டிலும் ஒலிக்கிற பாடல்களை உற்றுக் கேளுங்கள்…உங்கள் நெஞ்சுக்குள்
பழைய காதலியின் கொலுசொலிகள் சப்திக்கக்கூடும்.
என்ன செய்வது ?
விரலிடுக்கில் வைத்த சிகரெட்டோடு
கோப்பை மது பாதியருந்தி
பழைய காதலை
நினைத்துப் பெருமூச்சு விட்டு
வெகு நாளாகிவிட்டது.
என்ன சொல்வது?
பதின்மக் காதலை
நினைப்பதென்பது
ஒலி நாடாவை ஓடவிட்டு
ஒரு பழைய பாடலைக் கேட்பது போலிருக்கிறது.

எஸ்.மதுசூதனன்
*********************************************************************************************************
5
இரு எதிர் நியாயங்களின் பொருந்துதல்தான் மாயக் கிளர்ச்சிகளின் மர்மம்.
கவிஞன் உள்ளிருக்கும் ரகசியத்தை உருவி வெளியில் எடுக்கிறான். அல்லது
எடுக்க முயல்கிறான். முற்றாய் எடுக்க முடியுமா, தெரியவில்லை.
உன்னுடையும் என்னுடையும் மோதி எஞ்சுபவை எவை? இவர்களின் அம்மணங்கள்…
அதுவும் கிழிசல் அணிந்த அம்மணங்கள். அதுவும் காமஞ் சொட்டும் காதல்
கிழிசல்கள். பருத்திப் பூ சிரிக்கிறதாம்… அம்மணங்களால் ஆடை
நெய்கிறார்களாம்… இது கவிஞரின் சமத்காரமான துகிலுரி நாடகம் அல்லாமல்
வேறென்ன?…
இரு எதிர் நியாயங்கள்
பொருதிக் கொள்ள
எத்தனையோ வெடி மருந்துகள்
உன் உடையும்
என்னுடையும் மோதி
எஞ்சியவை
கிழிசல் அணிந்த அம்மணங்கள்
பருத்திப்பூ சிரிக்கிறது
வா
நம் ஆடையை நெய்யலாம்.

-யுகயுகன்.
*********************************************************************************************************
எழுதியவர் :
✍️ – நா.வே.அருள்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
