உறவுகள் இல்லையெனில் வாழ்க்கை வெறுமையாகிவிடும். தனித்து விடப்படுவதைப்
போல ஒரு சோகம் வேறெதுவும் இருக்க முடியாது. தனித்துவிடப் பட்டவர்களின்
உடலில் கார்ட்டிசால் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகம் சுரக்கிறது.
இந்தக் கார்ட்டிசால்தான் இதய நோய் முதல் பக்கவாத நோய் வரைக்குமான
காரணமாகவும் அமைந்துவிடக்கூடும். குறிப்பாக வயது முதிர்ந்த காலத்தில்
வேதியலை விளங்கிக் கொண்டால்தான் இந்தப் பௌதிகம் புரியும். எப்போதும்
ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற மனம் நோய் வாய்ப்படுவதில்லை. ஆதரவு இல்லாமல்
நிராதரவாக இருக்கின்றவர்களின் மனநோய் உடல்நோயாகி ஆயுளைக் குறைப்பதாய்
ஆரோக்கியக் குறிப்புச் சொல்கிறது.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இன்னும் பெரியம்மா, அத்தை,
சித்தப்பா, மாமன் போன்ற உறவுகள் மனிதனின் மனதை ஒருவித சமூக
வயப்படுத்திவிடுகிறது. ‘நான் தனியாள் இல்லை’ என்கிற மனம் உற்சாகம்
கொள்கிறது. அதிலும் அம்மா அப்பா உறவுக்கு ஈடு உலகத்தில் எதுவுமேயில்லை.
அன்னை மகனைக் கருவில் சுமக்கிறாள். அப்பா எப்போதும் மகனைத் தன் நினைவில்
சுமக்கிறான். அம்மா சமையலறையில் தொடங்கிய தியாகத்தை அப்பா தன் இதய
அறைகளில் தன் மகனுக்கான கடைமையெனத் தொடர்கிறார்.
இதோ… மாரி செல்வராஜ் தன்னைச் சுமந்த அப்பாவைத் தான் சுமக்கிறார்.
நீச்சலைக் கற்றுத் தரும் அப்பாவுக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமில்லை.
நிமிர்ந்தே பழகாத அப்பாவால் சுதந்திரத்தைச் சொல்லித் தர முடியாதா என்ன?
அம்மா குழந்தையின் கையில் சோறு உருட்டித் தந்திருக்கலாம்… அப்பா கையில்
ஒரு காட்டுத் தீயையே உருட்டித் தந்துவிடுகிறார்…அது ஒரு கவிதைச்
சூரியனாக ஒளிர்கிறது ( இயக்குநர் கவிஞராக இருப்பதால் கவிதை
காட்சியாகிவிடுகிறது)
நீச்சலே தெரியாத என் அப்பாதான்
எனக்கு அலைகளைப் பழக்கினார்
வானை நிமிர்ந்தே பார்க்காத என் அப்பாதான்
எனக்குப் பறத்தலைப் பழக்கினார்
காட்டுத் தீயின் தீக்கொழுந்துகளை அள்ளி எடுத்துவந்து
அன்றைக்கு அப்பா உருட்டிக் கொடுத்ததுதான்
என்னிடம் எப்போதுமிருக்கும்
அந்தக் குளிர்ந்த சூரியன்.

மாரி செல்வராஜ்
Mari Selvaraj
*************************************
தான் பட்டினி கிடந்தாலும் மகனைச் சாப்பிட வைக்கும் தாய். தான் நடந்தே
போனாலும் மகனுக்குச் சைக்கிள் வாங்கித் தரும் அப்பா… உந்திச்
சுழியிலிருந்து உதிர்ந்த உறவு அல்லவா?…( அப்பா மகனுக்கு அல்லது
மகளுக்கு ஹீரோ சைக்கிள் வாங்கித் தரலாம். ஆனால், மகனுக்கோ, மகளுக்கோ
அம்மாதான் எப்போதும் ஹீரோயின் அல்லவா?… மகாலட்சுமியின் ‘மைன்ட் வாய்ஸ்’
ஐ என்னால் கேட்க முடிகிறது). அப்பாவால் மகனுக்கு ஒரு ஹீரோ சைக்கிள்
வாங்கித் தர முடியாமல் போகலாம். ஆனால், எப்போதும் மகனுக்கு அப்பாதான்
ஹீரோதான் இல்லையா?
தன் துருப்பிடித்த சைக்கிளின்
செயினை
மாற்றமுடியாத அப்பாதான்
எதிர்வீட்டுச் சிறுவனின்
சைக்கிள் பார்த்து
ஏங்கினேன் என்று
மறுநாளே
ஹீரோ சைக்கிளோடு வந்தார்.

-பா.மகாலட்சுமி-
Maha Lakshmi B
*************************************
பிள்ளைகளுக்கு எல்லாமாக இருந்த அப்பா, தன் இணையருக்கு எப்படி
இருந்திருப்பார்? அம்மா, அப்பாவை எப்படிப் பார்க்கிறார்? அது
சுவாரசியமானது மட்டுமல்ல… மயானம் வரைக்கும் கூடவே வரும் அம்மணம் மாதிரி,
ரகசியமானதும்கூட…. அதைத்தான் முபாரக் சொல்ல முனைகிறார்…
அவசரப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கும்
அம்மாவிற்கு அவ்வப்போது
வந்துபோகிறது நினைவு
முதல் முறையாக நினைவு வந்தபோது
பூனைக்குப் பால் வைத்தீர்களா எனக்
கேட்டாள்
மீண்டும் ஒரு முறை
செடிக்குத் தண்ணீர் விட்டீர்களா என்றாள்
நினைவு திரும்ப வாய்ப்பே இல்லையென
மருத்துவர் சொல்லிச் சென்றபிறகு
கையில் அழுத்திப் பிடித்திருந்தாள்
அப்பாவின் பழைய புகைப்படமொன்றை!

மு.முபாரக்
Mubarak M
*************************************
சரி, அப்பா பிள்ளைகளின் மேல் எப்படி எப்படியெல்லாம் அன்பு செலுத்துகிறார்
என்பதை அறிகிறோம். எப்படி எப்படியெல்லாம் ஆதரவு தருகிறார் என்பதையும்
அறிகிறோம். அப்பாவைச் சில பிள்ளைகள் எப்படி நடத்துகிறார்கள்? அந்த
அபூர்வமான தருணத்தைத்தான் காட்டுகிறார் கவிஞர் ரிஸ்வான்.
ஒவ்வொரு பிள்ளையின்
கையிலும்
அற்புத விளக்கு
அப்பா
விளக்கின் அற்புதங்கள்
தேய்ந்து ஓய்ந்தபின்
பிள்ளையின் கையில்
ஓர் அநாதையின் சுட்டுவிரல்
அப்பா…

– ரிஸ்வான்
Rizwan Teabreak Kavithai
*************************************
இப்பொழுதெல்லாம், ஏதோ ஒரு அலுவலகத்தின் முன்போ, ஏடிஎம் வாசலிலோ, திருமண
மண்டபத்திலோ, காவலாளிகளைப் பார்க்கையில், மனம் கனத்துவிடுகிறது. இரவில்
அனுபவிக்கிற கொசுக்கடிகளைவிட முதிய இரவுக் காவலர்களின், உறவுகள் கொடுத்த
நெருக்கடிகளைத் தாங்க முடிவதில்லை. ஒரு சின்ன சீண்டல் போதும்.
அவிழ்ந்து கொட்டிவிடுகிறார்கள். அப்பாக்கள் என்பவர்கள் நெருக்கடிக்
காலங்களில் எல்லாம் குடும்பத் தேரினை இழுத்த வடக்கயிறுகள்தாம். தள்ளாத
வயதில் ஒரு நூலினைப் போல இளைத்துப் போகிறார்கள். வயதாக ஆக, மனசு
நொந்துவிடுகிறார்கள்; அவர்கள் மழையில் கரையும் மண்ணைப் போலக்
கரைந்துவிடுகிறார்கள்.
வெடித்துப்போன பலூன்கள். வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தில் இருக்கும்
அவர்களுக்கு எந்த நேரத்திலும் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம். இறுதி
யாத்திரையை நோக்கித்தான் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையின்
யாத்திரையைத் தொடங்குகிறார்கள்.
இப்படியெல்லாம் இருந்த அப்பா தன் கடைசி நாள்களில் எப்படி எப்படியெல்லாம்
உரு மாறி விடுகிறார் என்று ஆனந்த பிரபு மௌனமான அழுகைகளை நம் மனக்கண்
முன் நிறுத்திவிடுகிறார்:
தன்மானம் சீண்டப்பட்டதில்
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
காவலாள் வேலைதேடிக்
கிறுக்கப்பட்ட காதிதத்தில்
இருக்கிற எண்ணை அழைத்துத்தரச்
சொல்லுமந்தப் பெரியவரைத்
தவிர்க்க இயலவில்லை.
வயதென்ன என்ற கேள்விக்கு
கள்ளமற்று வைகாசி வந்தா
அறுபத்தைந்து என்கிறார்.
அறுபதுக்கு மேலிருந்தால்
வேலையில்லையென்று
துண்டிக்கப்பட்டது அழைப்பு.
திகைத்துப்போய் நின்றவரிடம்
சில நோட்டுகளைத்தந்து
ஊருக்கு போங்க ஐயாவென்றேன்.
வாங்கிப்பழக்கமற்ற அந்தக்கரங்கள்
நடுங்கின.
வற்புறுத்தி தேநீர் வாங்கித்தந்து
பேருந்தேற்றி விட்டேன்.
இரண்டு நாட்கள் காணாதுபோய்
மூன்றாம் நாள் வீடடைந்த
அப்பா எனக்குமுண்டு.

– கௌ.ஆனந்த பிரபு
அதனால்தான் வயதானதும் அப்பா தன்னைத் தேடித் தேடிக் காண முடியாமல்,
கடைசியில் மயானத்திற்கே வந்துவிடுகிறாரோ? சில அப்பாக்கள் எங்கோ தொலைத்த
மகனை மயானத்தில் வந்து தேடுகிறார்களோ?
எழுதியவர் :
✍️ – நா.வே.அருள்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மேதகு ரெட்டனை கலைஞர் கவிஞர் நா.வெ.அருள் வணக்கமும் வாழ்த்தும் நன்றியுடன்.
கரப்பான் என்ற பூச்சி இனம் அதீத வெப்ப அணுக்கதிர் வீச்சை தாங்கி வளர்ந்து வரும் உயிரினம்.
நீதித் துறையில் உள்ள ஒரு மனிதனின் கேலிச் சொல் எதிர் வரும் நாட்களில் பெரும் தாக்கத்தை இந்திய அரசியல் மற்றும் போலி ஆளுமைகள் மீதுள்ள அபிமானத்தை செல்லாக்காசாக்கிடும்
சுதந்திர இந்தியாவில் நமது மக்களின் மதிப்பை உணராமல் உள்ள ஓட்டு திருடர்கள் ஆணவம் அடங்கும் நாள் இயற்கை பேராற்றல் மிக்க தனது திறத்தால் நிகழ்ந்திடும்.
கரப்பானுக்கு நுரையீரல் பகுதி பல அடுக்கு உடையது. எனவே அது தன்னைத் தானே வடிவமைத்து கொள்கிறது. அதேபோல் நமது இளைஞர்கள் தங்களது பாதையை பயணத்தை வடிவமைப்பு செய்ய புறப்பட்டு விட்டார்கள்.
ஜீவராசிகள் பூச்சியியல் இருந்து வந்தது தானே நண்பரே.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக என்ற வடலூர் வள்ளல் பெருமான் வாக்கு பலிக்கும்
உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் அருளரசே
karappaan poochi patri periya vaguppu edukkumalavukku vivaram aliththu karunai arasu nokkiya ungal paarvai thannaiyum munvaithu irukkireergal. migavum manamaarntha nanri sir.