திரும்பத் திரும்பச் சொன்னாலும் அலுத்துப்போகாத அமுதம் காதல். காதலுக்காக ஒரு சாம்ராஜ்யம் மண்டியிட்ட கதையெல்லாம் அறிந்திருப்போம். மக்களாட்சி காலத்தில் அடகு வைப்பதற்குத் தேசத்தைத் தேட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அதற்கென்றே சில கடைந்தெடுத்த மூன்றாந்தர அரசியல்வாதிகள் நாடு முழுவதும் நாற்காலியும் குதிரையுமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எளிய மனிதர்களுக்கு இதயமே துணை. மனதில் காதல் வழியத் தோன்றும் சொற்களைத் திரும்பத் திரும்ப மந்திரம் போல் ஜெபிப்போம். அதுதான் நோய் தீர்க்கும் மருந்து. காதல் சொல்லித்தரும் சொற்களின் “கட்டிப்புடி வைத்தியம்.”

காதலைச் சொல்கிறபோது சொற்கள் முத்தங்களாகிவிடுகின்றன. அந்தரங்க சைகைகளாகிவிடுகின்றன. காமம் சிறகசைக்கும் கண்ணசைவுகளாக மாறிவிடுகின்றன. கவிதைகள் காதல் வானத்தில் சிறகடித்துப் பறக்கையில் கந்தருவ கிம்புருடர்கள் சொக்கிப் போய்ச் சோலை வனங்களில் சோபன பானங்களை அருந்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமா? நாமும்தான் வார்த்தைகளின் போதையில் வழுக்கி விழுகிறோம்…..

1.
எப்படி எப்படியெல்லாம் காதலிகளைக் கொண்டாடுகிறார்கள் கவிஞர்கள்? காதலியின் கண்களை, கழுத்தினை, இடையினை என உடலுறுப்புகளை உவமைகளால் ஆராதித்தத் தமிழுலகம் புதிய புதிய முறைகளில் சிந்தனைகளைப் பாய்ச்சுகிறார்கள். அரதப் பழசான விஷயம்தான் காதல். ஆனால் புத்தம் புதுசாக ஆகிவிடுகிறது சொல்லும் முறைகளின் சூட்சுமத்தால். காதல் குளத்தில் ஒரு கவிஞன் எப்படித் தன் காதலிக்குத் தூண்டில் போடுகிறான் பாருங்கள்…

அவள் குளித்துக்
கரையேறியபோது
இரண்டு கெளுத்தி மீன்களை
இழந்திருந்தது நதி.

கோ.வசந்தகுமாரன்

2.
காதல் என்னவெல்லாம் செய்துவிடுகிறது. ஒரு குரூப் போட்டோவில் இருந்த காதலியை சட்டென்று காதலன் பக்கத்தில் ஒரு நொடி தள்ளிவந்து விடுகிறது. அதற்குக் காதலியின் நெற்றியில் சுருண்டிருக்கும் ஓரிரு இழைகளோ, உதட்டுக்கு மேலிருக்கும் மச்சமோ, கன்னக்குழி என்று சொல்லப்படும் மிகப்பெரிய காதல் பள்ளமோ காரணமாயிருக்கலாம். எதுவுமே காரணமாய் இல்லாமலும் இருக்கலாம்.

பத்தாம் வகுப்பு
குரூப் ஃபோட்டோவில்
மேல் வரிசையில் நான்.
அமர்ந்திருப்போர்
வரிசையில் இட வலமாய்
நான்காவது நீ.
படத்திலிருந்து வெளிப்பட்டு
கன்னக் குழி தெரிய
சிரித்து விட்டுப் போவது
உன்னைத் தவிர யார்?

துசூதன்.எஸ்

3.
காதலியைக் கவிதையாக்குகிறபோது ஒவ்வொரு உடலுறுப்பையும் சொற்களாகக் காணும் பைத்தியம் பிடித்துவிடுகிறது கவிஞனுக்கு. அவள் உடல் முழுதும் ஒட்டிக் கொள்ள ஓராயிரம் பாவனைகள். காதலியைப் பச்சைத் தமிழச்சியாகவே பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். படித்து முடித்ததும் முத்தங்களின் பிசுபிசுப்பை உணர முடிகிறது.

தமிழ் என்ற பெயர்
பொருத்தமாயிருந்தது அவளுக்கு
காற்புள்ளியைப் போல கண்கள்
நாவலைப் போல நீளக் கூந்தல்
சிறுகதையைப் போன்ற சிற்றிடை
இன்னும் பற்பல செழுமையான
சிற்றிலக்கிய வடிவங்களைத் தாங்கி இருந்தாள்
இதழ் வரிகளை வாசித்தபடி
அவளைத் தழுவிக்கொண்டேன்
என் உடல் முழுக்க ஒட்டிக்கொண்டது
அவள் மின்மினி வார்த்தைகள்.

கார்த்திக் திலகன்

4.
எதைப் பார்த்தாலும் லைலாவாகத் தெரிகிறாள் என்பான் மஜ்னு. காதலியின் ஜிமிக்கி என்ன என்னவற்றையெல்லாம் எதை எதையாகப் பார்க்க வைக்கிறது பாருங்கள். ஆச்சரியம் என்னவென்றால் ஆண்பால் கண்களாய் மாறும் கவிஞரின் பெண்பால் கண்கள்.

தாஜ்மஹாலின் மேற்கூரை
கைப்பிடியில்லா குடை
காம்பில்லாத காளான்
கவிழ்த்து வைக்கப்பட்ட மதுக்கோப்பை
அத்தனைக்கும்
அவள் காதினில் தொங்கும் ஜிமிக்கி யின் சாயல்.

ச.ப்ரியா

5.
இந்தக் கவிதையைப் படித்ததும் அசந்துபோனேன். “உன்னைப் படைத்தபின் பிரம்மன் கை கழுவினான். குளத்தில் தாமரைகள் பூத்தன” என்று எப்போதோ படித்த கவிதையில் ஏற்பட்ட மின் அதிர்ச்சி இக் கவிதையைப் படிக்கையிலும் நிகழ்ந்தது. பழைய உவம உவமேயங்களாக இருக்கலாம். ஆனால் படிக்கப் படிக்கத் திகட்டாத படிமங்களாக மாறிவிடுகின்றன…. காரணம் காதல்!

இருளை முடைந்து
முதுகிற்குப் பின்னால்தான்
வீசினாய்
கூந்தல் என்கிற பாவனையில்

அது என்
இதயத்தில் சொடுக்கிய
கருஞ்சவுக்கு!

கோ.பாரதிமோகன்

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

 தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்

 தொடர் 9: கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்

 தொடர் 10: கவிதை உலா – நா.வே.அருள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *