தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள்

1. பசி

யாசகம் கேட்பவர்களின் பசி எத்தனை பேருக்குத் தெரியும். பிச்சை எடுப்பது என்பது தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எந்த நேரத்தில் வாழ்க்கையின் சுயமரியாதைக் கோட்டிலிருந்து தவறி விழுவோமோ தெரியாது. ஆனால் பிச்சைக்காரர்களுக்கு வள்ளுவரைத் தவிர வேறு யாரும் அபிமானம் தவறாத அன்பை இவ்வளவு துல்லியமாகக் காட்டியிருப்பார்களா தெரியாது: “சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை”.( இரத்தலுக்கு இல்லை, ஈகைக்கே இப்படிச் சொல்கிறார் வள்ளுவர்). அவர்களை முன்வைத்து இவ்வளவு கடுமையாகக் கடவுளைச் சபித்திருப்பார்களா தெரியாது: “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்”

கவிஞர்கள் பசியை, அது தொடர்பான வறுமையை, பசியை நீக்கும் பொருட்டு
உலகில் நிகழும் கணங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தக் கவிதையில் பெரியவர்களை வாழ்க்கை மரத்துப் போனவர்களாகவும், சில கணக்குகளைப் போட வேண்டிய நிர்ப்பந்தவாதிகளாகவும் மாற்றியதால் ஒரு குழந்தை யாசகம் கேட்பவருக்குத் தன் உண்டியலிலிருந்தே கொடுக்கிறது.

கடவுளின் சாயல்

வாசலில் நின்று
யாசகம் கேட்கும் தாத்தாவுக்கு
தன் உண்டியலில் இருந்து
ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து
யாருக்கும் தெரியாமல் கொடுக்கும்
சிறுமியின் முகத்தில்
அம்மன் சாயல்.

நெய்வேலி பாரதிக்குமார்

–சீ. பாஸ்கர்

உலகம் முழுவதும் உலவிக் கொண்டிருக்கிறது பசி; சில நாடுகளில் அரசாங்கங்களின் ஆதரவோடும், அதிகாரங்களின் பரிந்துரையோடும். குப்பைத் தொட்டியை உபயோகிப்பவர்கள் மனிதர்கள்; அதில் யாருமே போடாமல் அவர்களே போய் வீழ்ந்து கிடப்பவர்களும் மனிதர்கள்! அரசியல் அறமற்றவர்களின் புகலிடமானால், பொருளாதாரம் புதைமணலில் மூழ்கத் தானே செய்யும்

கவிஞர் முகமது பாட்சாவின் இந்தக் கவிதை பசியின் வரைபடத்தையே வரைந்து காட்டுகிறது. பொருளாதாரப் புதிர் வழியைப் புரிந்துகொள்ளாததால் வறுமையின் புதர்களில் சிக்கிக் கொள்கிறார்கள் மனிதர்கள். எப்படி மக்களை குழந்தைகளைப் போல ஏமாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதைக் கச்சிதமாகப் படம்பிடிக்கிறது இந்தக் கவிதை.

2. “நான்கு கோடுகளை வரைந்து கொடுத்து
இதுதான்
உங்களின் அறை என்றார்கள்
நாங்களும்
அதில் வசிக்கத் தொடங்கினோம்.
ஒரு மின்மினியை வரைந்து விட்டு
இதுதான்
சூரியன் என்றார்கள்
பேசாமல் அங்கீகரித்துக் கொண்டோம்.
ரொட்டித்துண்டுகளை வரைந்து
உங்களின் உணவு என்கிறார்கள்…
பசியை வரையத் தெரியாமல்
திகைத்துக் கொண்டிருக்கிறோம்”


– முகமது பாட்சா

பொருளாதாரம், காரணம், காரியம் என்று அலட்டிக்கொள்ளவில்லை இந்தக் கவிதை. ஒரு கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண் சிப்பந்தியின் மன அவசம் ஒரு முதியவளின் குடும்பத்திற்கு மருந்து கிடைக்க வழியாகிறது. அவளே இன்னும் கொஞ்ச நாள்களில் சக மனித எந்திரங்களைப் போலவே தேய்ந்துபோவதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் கவிஞன் கவனமாகப் ‘புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்’ என்கிறான். அதிகபட்சம் கவிஞன் போட்டிருக்கும் ஒரு பொருளாதாரக் கணக்கு என்றால் அது இதுதான்: “அதன் விலை சுருக்குப் பைக்குள் அடங்க மறுக்கிறது”. அதற்குமேல் கவிஞன் எந்தப் பொருளாதாரக் கணக்கையும் போட்டுக் காட்டவில்லை. ஆனால் நம் மனசில் ஓர் ஆற்றாமை அமர்ந்துகொள்கிறது. இப்படியான எத்தனையோ முதியவர்களின் வாழ்க்கை என்னாவது? கவிதை தன் வேலையைக் கச்சிதமாகச் செய்ததாகத்தான் கருதுகிறேன்.

3. “மருந்துச்சீட்டில் எழுதியிருப்பவற்றில்
பாதிக்கு எவ்வளவு ஆகும்
என வினவுகிறாள்
ஒரு மூதாட்டி

அதன் விலை சுருக்குப்பைக்குள்
அடங்க மறுக்கிறது

இரண்டு நாளைக்கு போதும் எனப்
பெற்றுக்கொள்பவள்
வாசலில் அமர்ந்திருக்கும்
கிழவனைக் கைபிடித்துக் கூட்டிக் கொண்டு
நடக்கத் தொடங்குகிறாள்

மொத்த மருந்துகளையும்
பையிலிட்டுத் தந்துவிட்ட
மருந்தகத்தில் புதிதாக
வேலைக்குச் சேர்ந்தவள்
இன்று மாலை
இடிக்கும் கணக்கையும்
பிடிக்கும் சம்பளத்தொகையையும்
யோசித்தபடியே
வலிநிவாரணிகளை அடுக்கிக் கொண்டிருக்கிறாள்”

இரா.பூபாலன் கவிதைகள் » Nutpam

– இரா.பூபாலன்

இந்தக் கவிதை யாரும் கவனிக்காத பசியை எல்லோருக்கும் எடுத்துச் சொல்கிறது. அவனுடைய வாழ்க்கையைப் பற்றிய எந்தக் கேள்வியும் இல்லை. அவனது வயிற்றைப் போலவே காலியாயிருக்கும் ஒரு ரயில் பெட்டிக்குள் ஏறுகிறான். காதுகள் இருக்கிறதா என்ற கவலையே இல்லாமல் அவன் பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அநாதையான வாழ்க்கையின் அவலநிலை கவனிப்பதற்கு ஆளற்றுக் காற்றில் கரைந்து கொண்டிருக்கும்.
அந்தப் பாடல் என்னவாக இருக்கும்? அவனது வாழ்க்கையைப் பற்றித்தானே இருக்கும், இதிலென்ன சந்தேகம்?

4. “இறைவனிடம்
கையேந்துங்கள்
அவன்
இல்லையென்று
சொல்லுவதில்லை
பாடிக்கொண்டே ரயிலில் ஏறினான்
பார்வையற்ற யாசகன்.

அந்தப் பெட்டியில்
யாருமே
இல்லையென்பதை
யாருமே
சொல்லவில்லை.”

– கண்மணிராசா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. சு.செல்வகுமாரன்

    மிகவும் சிறப்பான கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *