ஒரு சுற்று வாழ்க்கை
*****************************
கவிஞர்கள் – சந்துரு .ஆர்.சி, நிலாக்கண்ணன், சரஸ்வதி
அர்த்த விளையாட்டாக இருக்கிற வாழ்க்கைதான் அபத்த விளையாட்டாகவும் இருக்கிறது. விசித்திரங்களின் விமான ஓடுதளததில் நத்தையாக நகர்வதும் வாழ்க்கைதான். ஊர்ந்து செல்லும் மரவட்டையின் கால்களாக ஓயாமல் விரைவதும் வாழ்க்கைதான். காசே இல்லாத போது உண்டியலில் கம்பி விட்டு நாணயங்களை எடுக்கிறபோது என்ன சந்தோஷம் வருமோ அப்படியான சந்தோஷங்களைக் கொண்டிருப்பதும் வாழ்க்கைததான். மீண்டும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷங்களை எண்ணிக் காலமெல்லாம் ஏங்க வைப்பதும் வாழ்க்கைதான். மொத்தத்தில் வாழ்க்கையே ஒரு முரண்களின் மூட்டைதான்.
இதில் கொள்கை, சித்தாந்தம் என்று பேசி தம்மை வருத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். விட்டேத்தியாக வாழ்ந்து உடன் இருப்பவர்களை வருத்திக் கொல்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை சேகரித்து வைத்த அனுபவங்களை அவ்வளவு இலேசில் புறந்தள்ளி விட முடிவதில்லை. காலற்றவர்களுக்குச் சக்கர நாற்காலிபோல வாழ்க்கை அவரவருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் செய்கிறது. சிலர் திருப்திப் படுகிறார்கள். சிலர் எதற்குமே திருப்தியுறாமல் அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது…. “இவ்வளவுதான் வாழ்க்கை… இவ்வளவுதான்…”
சந்துரு .ஆர்.சி
**********************
இது அலைபேசிகளின் காலம். ஆனால், சைக்கிள் மிதித்தே களைத்துப் போன கால்களின் வலிகளின் உக்கிரத்தை எந்தச் சுயமியால் எடுத்துக் காட்ட முடியும்? சைக்கிள் சீட் இறுக்கியே விரைவாதம் வந்த எத்தனையோ பேர்களின் வலிகளுக்கு இந்த வாழ்க்கை எந்தக் களிம்பை வைத்திருக்கிறது?
மாதங்கள் கடந்தும்
சாத்தி வைத்த சுவற்றில்
துருப்பிடித்து
சீந்துவாரற்று கிடக்கிறது
பெடலுடைந்த சைக்கிள்.
கலகலத்து ஆடியபோதும்
ஓட்டம் குறையாத அதன் மேல்
அரூபமாய் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறது
ஓட்டை வண்டியை உருட்டியே
ஒவ்வொன்றாய் கரையேற்றி
களைத்துப்போன முதியவனொருவனின்
வாழ்வு…
எல்லாமே சாதாரணமாக நடந்துவிடுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் எல்லாமே யாரோ சிலரின் திட்டமிடுதல்களாலும், தந்திரங்களாலும், அவற்றிற்கு ஆட்படுபவர்களின் வெள்ளந்தித் தனத்தாலும், யோசிப்பின்மையாலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இது மேய்ப்பர்களின் மேய்ப்பர்கள் காலம்.
மேய்ச்சல் முடித்து
கனத்த வயிற்றுடன்
திரும்புகின்றன மாடுகள்.
வற்றிய வயிற்றுடன்
பின் தொடர்கிறான் மேய்ப்பன்.
வழி நடத்தியவனின்
பசியுணராமல்
நன்றியோடு
குரலெழுப்புகின்றன அவை.
மேய்ப்பனின் எஜமானர்கள்
தந்திரம் மிக்கவர்களென்று
ஒருபோதும்
மந்தைகள் அறிவதில்லை
மேய்ப்பனும்தான்…
நிலாக்கண்ணன்
************************
அம்மா எடுக்காத அவதாரமில்லை. சமையல்காரி முதல் தையல்காரி வரை… அவளது கைகளில் ஊசி குத்திய காயங்கள் ஆறியிருக்கலாம்…. ஆனால் அவள் தைத்துக் கொடுத்த ஆடைகள் கொடுத்த கதகதப்பு மாறியிருக்குமா?…. இன்றைக்கும் ஏங்குகிறோம்….
அவள் ஒரு வயலினிஸ்ட்
கிழிந்த ஆடைகளை
சிறு ஊசியால் வயலினைப்போல மீட்டுவாள்
அந்த இசையை நாங்கள் உடுத்தியிருந்தோம்.
💜💜💜
கவிஞர் சோலை பழநியின் கவிதையொன்று நினைவில் நிழலாடுகிறது. பள்ளிக் கூடத்தில் சத்துணவு சாப்பிடும் சின்னஞ்சிறு பையனுக்கு“ இந்த உலகம் ஒரு சோற்று உருண்டையைப்போலத்தான் தெரிகிறது”. நிலாக் கண்ணனுக்கும் இந்த அனுபவம் நேர்கிறது. சுவரொட்டி ஒட்டும் பையன் கவிஞனின் மனசில் கவிதையினை ஒட்டி விட்டுச் செல்கிறான்.
ஒரு இரவென்பது
நான்கு முனைகளுடன் கூடிய
சதுரமான காகிதமாய் இருக்கிறது
நகரத்தின் மையத்தில்
போஸ்ட்டர் ஒட்டும் சிறுவனுக்கு.
அவன்தான் இரவின் மீது
பசை தடவி
இந்தபூமியில் ஒட்டிவிடுகிறான்.
💜💜💜
கவிதை ஜோசியம் பார்க்கும் கவிஞர்கள் ஏராளம். அவர்களிடம் இருப்பவை ஏராளமான நெல்மணிகள்… சிறகுகள் கத்தரிக்கப்பட்ட சில கிளிகளும்! ஆனால் இந்தக் கவிஞன் சொல்கிற கதையே வேறு…வாழ்க்கையே பொய்த்துப் போன ஒருவன் ஜோசியத்துக்கு உயிர் கொடுக்கிறான்….. மொட்டைப் பனையில் பிடித்த கிளியோடும் விதை நெல்லோடும் செத்துப் போன விவசாயி… ஜோசியக்காரனாக உயிர் பிழைத்துக் கொள்கிறான்…. கவிதையின் கடைசி இரண்டு வரிகள் கண்ணீரை வரவழைத்து விடுகின்றன.
மொட்டைப்பனையில்
பிடித்த கிளியோடும்
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரை விட்டு ஒடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்
சரஸ்வதி
************
முகநூல் பல சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறது. உலகம் முழுவதையும் நமது வாசலுக்கு வரவழைத்துவிடுகிறது. அங்கு நேரும் கொண்டாட்டங்கள் நமது கொண்டாட்டங்கள். அங்கு நேரும் துக்கங்கள் நமது துக்கங்கள். ஆனால் மாறி மாறி அலைக் கழிக்கையில் கல்யாண விருந்து சாப்பிட்ட கையோடு காரியத்தில் கலந்துகொண்டு பங்காளிக்குத் “தலைகட்ட” வேண்டியிருக்கிறது. கண்ணீர் புன்னகையாக மாற கால அவகாசம் கூட கிடைப்பதில்லை. இதயத்தின் இடப்புறத்தில் மணமேடை… வலப்புறத்தில் பிணமேடை….இப்படித்தான் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆடுகிறது. இந்தக் கவிதையின் மூலம் கவிஞர் நமது கண்கட்டை அவிழ்த்து விடுகிறார்.
“ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விட்டு மனம் கனக்க
தொடுதிரையை மேலேற்றினால்
நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்தச் சொல்கிறது முகநூல்
சட்டென்ற மனமாறுதலைப் பெற முடிந்த இயந்திர உலகில்
சற்று முன் அறிவித்த வருத்தங்களைத்
துடைத்தெறிந்துவிட்டு உடனே சிரித்தபடிச் சொல்ல முடிகிறது பிறந்த நாள் வாழ்த்தொன்றை”
கவிஞர் நினைத்தால் ஒரு தெருவோர வியாபாரி கடவுளாகலாம். கடவுளின் பழைய பிரதிமைகள் அழிக்கப் படுகின்றன. புனைவு வழி விரிவது புதிய கடவுள். ஒரு பெண்தான் நாள்தோறும் பழைய கோலத்தை அழித்துப் புதிய கோலத்தைப் போடுபவள். கடவுளின் முகவரியைத் தேடி அலுத்துப் போனவர்களுக்குக் கவிஞர் கொடுப்பது பசியின் முகவரி….இது கடவுளுக்கே பசியை அடையாளம் காட்டும் கவிதை. வேறு வேறு கோலம் போட்டாலும் வாசல் அழகாகிவிடுகிறது.
மூங்கில்களுக்குள்
இசையை நிரப்பி
விற்று வருகிறார்
அந்த நவீன கிருஷ்ணர்…
உதடுகளின் உரசல்களுக்கும்
முகக் கவசத்திற்குமான
இடைவெளியில்
காற்றாடிக் கொண்டிருக்கிறது
பசி.
முந்தைய தொடர்களை படிக்க:
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்
தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.