kavithai: vannaththaik konduponaval - agavi கவிதை:வண்ணத்தைக் கொண்டுபோனவள்  - அகவி
kavithai: vannaththaik konduponaval - agavi கவிதை:வண்ணத்தைக் கொண்டுபோனவள்  - அகவி

கவிதை:வண்ணத்தைக் கொண்டுபோனவள்  – அகவி

வம்சத்தை நிறமாற்ற தன்
வண்ணத்தைக் கொண்டு போனாள் அக்கா
காது மூக்கை மூடி
அனுப்பினார்கள்
பணி ஓய்வுப் பணத்தில் கழுத்து நிறக்க
நகை போட்ட பிறகுதான்
மனசடைந்தது அம்மாவுக்கு
எந்த நகையும்
அக்காவை விஞ்சி மின்னவில்லை
புகுந்தகம் போய்
 நகரத்தையே எங்களுக்குப்
 பரிசளித்தவள்
அனைத்திந்திய சுற்றுலா
போனபோது
மாமியாராய் மாற்றி அம்மாவை
அழைத்துப்போனாள்
எட்டாம் வகுப்பு வரை
படித்திருந்த அக்காவை
 பெண் பார்க்க   வந்தபோது
மாப்பிள்ளை கருப்பென்று அழுதபோது
கவர்மெண்டு மாம்பிள்ளை
உனக்கு கசக்குதா என
உச்சந்தலையில் அண்ணன் குட்டியதை
வாழ்நாளெல்லாம் சிரித்துக்கொண்டே நினைவு கூர்ந்தாள்
தெப்பக்குளத்தின் அருகில் இருந்த
சத்திரம் மண்டபத்தில் கல்யாணம் முடிந்தது
இமாம்பசந்து மாம்பழம்போல்
அக்கா புகுந்தகம் போன
சில ஆண்டுகளிலேயே மாமா  பூசுனமாதிரி மாநிறமானார்
மாமா ஊருக்கு வரும்போதெல்லாம்
கையில் கருப்பு உறையிட்ட பிலிப்ஸ் வானொலி பெட்டிகொண்டு வருவார்
கோழிக்குழம்பும்
பல கார வாசமும் ஒவ்வொரு நாளும்
காற்றில் பரவும்.
வீட்டிற்குள் அக்கா வரும் போதெல்லாம் தன் நகரத்தைக்
கூட்டி வருவாள்
நாங்கள் அக்கா வீட்டிற்கு போகும்போதெல்லாம்
இலவசமாய்கை நனைக்கக்கூடாது
என்பதற்காக
அம்மாவும் அய்யாவும் செய்யும் அன்பு ஏற்பாடு நெகிழத்தக்கது
அம்மா இறந்தபோது
எதற்கும் கலங்காத மாமாவின்
கெட்டிக் கண்ணீர் அம்மாவின் புகழ் அஞ்சலி
அதற்கப்புரம்
எங்கள் வீட்டில் கைகால் இல்லாத
விருந்து உபசரிப்புதான் நடந்தது
அக்கா வீட்டுப் பிள்ளைகள்
அனைவரும் பெரு நகரத்தில்
வாசம் செய்கிறார்கள்
 தலைமுறைகளின் சந்திப்பை
சில விசேசங்களே தீர்மானிக்கிறது
பி டைப் 2/411 டவுன்ஷிப் வீட்டை
ஒருநாள் கடந்தபோது
 வேறு யாரோ வீட்டில் இருந்தவர்கள் எட்டிப்பார்த்தார்கள்
அக்காவின் தோசை வாசம்
சட்டென நாசியில் பரவியது
அக்காவும் மாமாவும்
அடுத்தடுத்து மறைந்ததை
தளர்ந்த மனத்தால்
சுமந்து கசிந்தார் அய்யா
மகளைக் கொடுத்து
ஒரு வம்சத்தையே நிறமாற்றம்
செய்த திருப்தியில்
எண்பது வயது வரை இருந்த
அய்யாவுக்குப் பிறகு
உறவின்முகங்களில் சூன்யவண்ணம் தெரிந்தது
அக்கா இறந்தபோது எங்களின்
முதல் நகரம் இறந்து போனது
நாங்கள்
அக்கா மாமாவின் பிரதிபலிப்பை  அவர்கள்பிள்ளைகளிடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம் இத்தனை வருசமானாலும்
அக்கா கொடுத்த குரோட்டன்ஸ்கள் மட்டும் முகம் மாறாமல் இருக்கிறது.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *