பூமிப்பந்தைப் பசுமையாக்க
சாமி தந்த வரம்
நதிகளெனும் வளம்
மலைதனில் பிறந்து
சமவெளியில் தவழ்ந்து
முகத்துவாரம் அடைந்திடும்
பயன்மிகு நதிநீர்
கடல்தனில் வீணாய்க்
கலப்பதைத் தடுத்து
உழவர்க்கு பயந்தரவும்-மக்களின்
தாகத்தைத் தீர்க்கவும்
தேவைக்குக் கட்டினால்
அனைவர்க்கும் பயனுண்டு
வீம்புக்குக் கட்டினால்
எதிர்ப்பவர் பலருண்டு
குடகினில் பிறந்து
தமிழ்திசை பாயும்
காவிரியை முடக்க
தீவிரந்தான் எதற்கு
வானத்தின் வரமாகிய நீரை
ஏகபோகமாய் நினைத்து
மேகதாதுவில் தடுத்திட
துடிப்பதுவும் எதற்கு
கருனாடக மக்களுக்குக்
கருணைதான் இல்லையோ?
அன்று-பொன்னியின் அகந்தையை
அழித்திடும் பொருட்டு
கமண்டலத்தில் அடக்கினான்
கோபங்கொண்ட குருமுனி-இன்று
பொங்கிவரும் பொன்னியை
தமதுரிமை என்றெண்ணி
அந்த மாநிலத்தார்
க[ருநாடக]மண்டலம் தன்னில்
அடைத்திட நினைத்தாரோ?
காற்று எப்படி
அனைவர்க்கும் பொதுவானதோ
அப்படியே நீரும்
அனைவர்க்கும் பொதுவானதே
காற்றுக்கு எப்படி யாரும்
விலங்கிட முடியாதோ
அப்படியே நீருக்கும் யாரும்
விலங்கிட முடியாது
ஆகவே- வேண்டாம் நீருக்கு விலங்கு
இதனை- உணர வேண்டியவர்
உணர்ந்தால் நன்று
இது- காவிரிக்கு மட்டுமல்ல
அனைத்து நதிகளுக்கும்
பொதுவான ஒன்று…