மென்மைப்பூச்சி
********************
பறக்க நினைக்கும் பொழுதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தினால்
இறகின் வண்ணத்தைத்
தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?…………
நான் தினம் பறக்கும்
நிலவின் நிழலில் மட்டும்
என்னை மிஞ்சிய பல பட்டாம்பூச்சிகள்
நீ மேனி உரசிய காரணத்தினால்
கலைந்துவிட்டன காத்திருப்பு வண்ணங்கள்…………….
ஒரு புள்ளியில் யாரெல்லாம்
அழகை அடைகாத்து சிலாகித்தார்களோ
அவர்களுக்கு மட்டும்
கன்னத்தை வண்ணமாக்கிச் செல்கிறது
இந்த அழகு பட்டாம்பூச்சி……
நானும் வண்ணமாகி விடுகிறேன்
குழந்தையின் கையில் சிக்கிய வானவில் வளையங்களைப் போல
நீளமும் சதுரமும் வட்டமுமாய் மாறிப் போன
உணர்வி ததும்பிகளாய்
வண்ணங்கள் மட்டும் எனது எண்ணத்தூரிகையில்
மேலும் கீழுமாக…….
இருக்கட்டும்
இறுக்கம் திறந்த இறகுகளைக் கொண்ட அந்த ஒரு பட்டாம்பூச்சி
வானவில்லாய்
எனது எட்டாவது வண்ணத்தில்…………..
மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….
யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….
ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில்
இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….
கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது
அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….
சிவப்புக் கம்பள விரிப்புகளுள்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும்
சற்று அதிகமாகவே பதிவுறுகின்றன……..
கவிஞர் சே கார்கவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.