கார்கவியின் கவிதைகள்




நிழல் மனிதர்கள்
எனது தலை மயிர் முதல்
பாதவெடிப்பு வரை அனைத்தையும்
இருளில் புதைத்துவிட்டு நான்
எந்த இரவிற்கு நிழல் வழங்குவது……..

உனது இமை விலகி
கருவிழியை தொடும் நேரத்தில்
நான் கண்ணீரின் நிழலில்
நிறுத்தம் கொடு சற்று
தாகம் தனித்துக் கொள்கிறேன்……

உள்ளங்கையை மடக்கி
நீ கொடுக்கும் அரையணா
கொடைக்காக உச்சி வெளுத்தும்
ஓயாமல் நிற்கிறோம்
அந்த கடவுளை கடந்து வந்த
மறு கடவுளாய் உன் தலை சாய்த்து
நீ போடும் சில்லரையில்
என் முகம் மறைக்கும்
சிறு நிழல் பருகி செல்லலாமே என்று……….

ஒற்றைப்படை கலசம் கொண்ட
ஓங்கிய கோபுரத்தின் ஆகச்சிறந்த நிழல் இன்று
வரை நிலத்தை தொடவில்லை என்பதே
மெய்யாகிபோனது இந்த நிழல் உலகில்………

ஒருவரிடம் வாங்கி ஒருவரிடம் கொடுக்கும்
இல்லாதவனின் நிழலும் இருப்பவனின் நிழலும்
உழைப்பென்ற அரண் தாண்டி
பணம் என்ற நுழைவாயிலில் மறைந்து
புதிதாக உருவாகிறது ஒவ்வொரு நுழைவிலும்
சொட்டு சொட்டாக……..

அப்பனின் குருதியில் சிறு சல்லடைகள் வைத்து
வடிகட்டிப் பிறந்துவிட்டேன்
என் பெயரின் முன் எழுத்தாய் என் வாழ்நாள்
நிழலாகிவிட்டார் அவர்………

நான் யாரை இருட்காட்டில் அடைத்து வைத்தாலும்
அவர் மொத்தமாக பணத்தில் கரும் மோகக்காடாக மாறி
எனது நிழலை ஆக்கரமித்து விடுகின்றார்….

பாவம் எனது மனப்பறவைகள்…
இந்த கரும்பெருவெளியை அடைத்து மொத்தமாக வளர்கின்றன நிழல் மனிதர்களின் கருமைகள்…….

*******************************
மௌனம்_கனமானது
நான் பார்க்கின்ற நபரெல்லாம்
இரட்டை தலையுடன் பயணிக்கின்றனர்….
ஒன்று மொத்தமும் மௌனம் நிறைந்ததாகவும்
மற்றொன்று சிறு இடைவெளிவிடாது இதழ்களை கிழித்தெறியும் படியான
உரக்க பேச்சிகளுக்கு பழக்கப்பட்டு போனதாகவும்……
ஒன்றை ஒன்றை பார்த்து
நகரும் பொழுதெல்லாம்
மௌனமும் குரலும் சற்று
வழக்கத்திற்கு மிஞ்சியே கனமாகிப்போகிறது……….
எனது ஒட்டுமொத்த மௌனத்தில்
சரியான வழியில் செல்கிறது மொழிகள்…
மற்றொன்று சீரணிக்க இயலாத
வசைகளை மொழிந்துக் கொண்டே
மெல்ல மெல்ல தலையாட்டி நகர்கிறது
எனது இடது வலதுமாய் கனமேறிய மௌனத்தலைகள்………..
ஒரு இருட்டுக்குள் நடைபயணம் மேற்கொண்டேன்
சிறு ஆபாச தொடலில் மௌனத்தையும் களைக்கிறது ஆழ் இரவு….
அவ்வேளையில் வேதனையில் கனமேறிபோகிறது
பாவப்பட்ட மௌனத்திற்கு……
காதலாய்…
மோதலாய்….
முடியாத சாதலாய்……
ஒரு குடுவை நீரில் உன் மீச்சிறு
மூச்சின் பரவளையங்களை
தாண்டியும் ஒரு புள்ளியாகி
மௌனத்திரையை கிழிக்கிறது
கனமேறிய மௌனங்களின்
நேற்று முளைத்த விரல் நகங்கள்….
இதயமும் துடிதுடிக்கும்
புஜங்கள் திமிறும்
முடிவுறாத கனத்திலான மௌனங்களில்……..
மௌனம் முற்றிலும் கனமானது
எடைக்கல்லில் அடங்காதது
காற்று வெளியில் காணாதது…
ஆனால்
மௌனம் கனமானது…….
கவிஞர் சே கார்கவி