யாரிடமும் பேசிடா மௌனம்..
நீயில்லா நொடிகளனைத்தும்
மொட்டவிழ்த்த மலரின் அழகோ
மழலையின் மெல்லிய புன்னகையோ
இரசனையின் எட்டா பிடிக்குள்
சிக்கியே மரணிக்கின்றது…
யாரிடமும் பேசிடா நின் மௌனம் கூட
என்னோடு முட்டி மோதுகிறது..
உந்தன் நினைவொன்றையே
ஆடையெனச் சுற்றிக் கொள்ளும்
மனம் ஏனோ வெட்கம் மறக்கிறது…
காற்றோடு கரையும் வாசமதில்
நின் வாசமும் கலந்தே வருகிறது…
நின் வாசமதை சுவாசமென ஏற்று
சப்தநாடிகளும் சப்திக்குமாறு
உயிரின் ஆழம்வரை
இழுத்துக் கொள்கிறேன்..
தன்னிலை மறந்திட்ட என்நிலைக் கண்டு
பரிகசித்து சிரிக்கிறது இந்த காதல்..
காதலில் வீழ்ந்தப்பின்
யாவரின் நிலையும் இதுதானே..
பின் ஏன் என்னை மட்டும்
எள்ளி நகையாடுகிறது
இந்த பொல்லாத காதல்…
********
நீ மட்டும் என்னோடு இரு…
காதல் தேனில் ஊறிய
என் மனதினை
உனக்காய் பரிசளிக்கிறேன்..
தவிர்த்துத் தவிக்க விடாதே
எடுத்து சுவைத்துக் கொள்…
அப்போது தான்…..
உன் அருகாமையை
எதிர்பார்த்து தவித்துருகும்
என் உயிரின் ஆழம் உணர்வாய் நீ…
உன் பெயர் உச்சரித்தே
உறைந்துக் கிடக்கும்
என் இதழ்களின் நிலை அறிவாய் நீ…
காதல் தேசமதில்
ஓர் இடம் பிடித்திட போராடும்
என் மனதின் வேதனை அறிவாய் நீ…
யாவருக்குமான உலகில்
நான் மட்டும் யாருமற்று
தனித்து விடப்பட்டதை நீ அறிவாயா?…
உந்தன் நினைவின் வெப்பம் தாளாமல்
காதல் கழுவில் ஏற்றப்பட்டு பரிதவிக்கும்
பாவியிவளின் மனம்
உன்மீது பித்தம் கொண்டு
பிதற்றுவதைத்தான் நீ அறிவாயா?..
உன்னோடான வாழ்விற்காய்
ஏங்கித் தவிக்கும் என்நிலையை
எப்போதுதான் உணர்வாயோ நீ…
எனக்கு வேறெதுவும் வேண்டாம்
எப்போதும்
நீ மட்டும் என்னோடிரு போதும்…
********
கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.