கவிதைகள் - வளவ. துரையன் kavithaigal - valav.thurayan
கவிதைகள் - வளவ. துரையன் kavithaigal - valav.thurayan

உள்மன ஆழம்

உன் கவிதைகளில்
நான்தான் இருக்கிறேன் என்றால்
ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.

சுருள்முடியும் நான்விடும்
சுருள் புகையும் எப்படிச்
சுற்றிச் சுற்றி
அங்கே இடம் பிடித்தன.

அன்று நகருந்தில்
என் காலை மிதிப்பது
தெரியாமல் மிதித்து ரணமாக்கி
ரத்தக் கண்ணீர் வடித்தாயே.

அருகருகே தோளுரசி
நடக்கும்போது இருவரும்
கைகள் கலந்தும்
கலக்காமலும் போனதையும்
கவிதையாக்கி இருக்கிறாய்.

ஆனால்
கல்லிலிருந்து
தலை நீட்ட மறுக்கும்
பாம்புக் குட்டியாய் நீ
பரிதவிப்பது தெரிகிறது.

நீ ஒப்புக் கொள்ளாவிடினும்
உன் உள்மன ஆழம்
அறிந்தவன் நான்.

+++++++++++++

பார்வை

ஆக்டோபஸ் போல வரும்
அந்நிய முதலீடுகள்
அச்சுறுத்துகின்றன.

எல்லா நிலங்களிலும்
ஒரே பயிர்தான் நீ
விதைக்க வேண்டுமென
சட்டம் வருமோவெனப்
பயமாயிருக்கிறது.

வயிற்றில் சாக்கு போட்டும்
உண்ணா நோன்பிருந்தும்
சுங்கச் சாவடிகள்
சோர்ந்துவிட்டன.

ஒப்பந்தக் கூலிகள் என
உருவாக்கிய சொல்லாக்கம்
ஓலமிட்டுக்
கொண்டே இருக்கிறது

எல்லாவற்றையும்
புன்சிரிப்போடு
மேலே இருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்

++++++++++++

கண்ணி வலை

நான் காத்திருக்கிறேன் இங்கே
கடங்காரா! சீக்கிரம் வாடா!

ஓடிவந்து கட்டிக்கொள்ளடா!
உதட்டோடு உதடு வைத்து
ஒட்டிக்கொள்ளடா.

பசலை படர்ந்த
மேனியைப் பார்வைத் தீ
கொண்டு அணைத்து
ஆறுதல் படுத்துடா.

பொருள்வயிற் பிரிவு
என மொழிந்து சென்றாயே!
பொறுத்துக் கொண்டேன்

இங்கிருக்கும் பொருளை
மறந்துவிட்டு நீ
தேடும் பொருள்கொண்டு
போகம் துய்க்க முடியுமா?

நீ வரும் வழியெல்லாம்
என் விழித்தாமரைகள்
பூத்துக் கிடக்கின்றன.
வரும்போது மிதிக்காமல் வா.

அவை கூடக் கோபம் கொண்டு
உன் கால்விரல்களைக்
குத்திக் கிழிக்கக் கூடும்.

நாளை வருவேன்
எனச்சொல்லிச் சென்றாயே
நாளை என்பது
உன் நாள்காட்டியில்
மாதத்தைக் காட்டுமா?

வா! வா!என் கண்களில்
கண்ணி வலை வைத்துள்ளேன்.
கண்ணாளனைக் கட்டிப் போடுவதற்கு

++++++++ 

சிற்றெலி

நான் அடைந்துவரும்
இன்றைய வெற்றிகள்
மிகவும் சலிப்பூட்டுகின்றன.

பாலில்லாத தேநீராகப்
பதறவைக்க வரும்
தோல்வியை வரவேற்கக்
காத்திருக்கிறேன்.

வெற்றி முழக்கங்களும்
வாழ்த்தொலிகளும்
என்னைப் பரிகசித்துப்
பரிசோதனைக் கூடத்தின்
சிற்றெலியாக்குகின்றன.

உடம்பெங்கும் பலர்
சொறிந்த காயங்களும்
சொரிந்த மலர்களும்

போதும்போதுமென்ற
அழுகையை எழுப்புகின்றன

தாகம் எடுத்தவுடன்
அருந்துகின்ற தண்ணீரும்
ஆசை ஏற்பட்டபின்
அணைக்கும் கலவியும்
அருமையானவை.

One thought on “கவிதைகள் – வளவ. துரையன்”
  1. வாசிக்க வாசிக்க வாஞ்சை உருவாகிறது கவிதைகளின் மேலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *