1.
தம் பிள்ளைகளின்
வயிற்றுப் பசியையோ
தான் பட்ட பாட்டைப்
பிள்ளைகள் பட்டுவிடாமல்
படித்து மேல வந்துவிட
அடி வயிற்றில் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த
நீண்ட கால ஏப்பத்தை பெரு மகிழ்வுடன்
வெளியேற்றி விடுகிறாள் தாய்
வேப்பங்கொட்டை பொறுக்கியாவது…

2.
சாலையிலிருந்து லாவகமாக
வானத்தைத் தொடும் வித்தையறிந்த
அசுர மனித மனம் படைத்தோர்
அதி விரைவான வாகனத்தில் கடக்கும் போது உரசியதில்
சிதைந்த நாயை அடக்கம் செய்ய
எங்கிருந்தோ வர வேண்டியுள்ளது ஒரு மனிதப் புனிதம்,
கண்களை மூடிக் கொள்வோம்
கடந்து செல்வோரெல்லாம்…

3.
ஓசியில் வாங்கி
நெருக்கடி நெருக்கிக் கொண்டிருந்த
போதிலும்
எத்தனையோ முறை
அலைபேசியை வைத்து விடட்டுமானு கூறிக்கிட்டே நானும் எம்மகளும்
அன்பில் கண்ணைக் கழுவிக் கொண்டிருந்ததில்,
அணைந்துதான் போனது
அலைபேசி…
அலையலையாய்
தன் நினைவு உள்ள வரை
உயரும் உன் நினைவு!

4.
சேர்த்துப் பார்த்துக் கட்டியபோது
கிடைத்த கொஞ்சம் பரவசத்தையும் மிஞ்சும்
பந்தாவையும்
பக்கத்தில்
நின்று பல தோரணைகளில்
தீட்டியதும் உணர்ந்த உற்சாகத்தையும்
நானெனப் பிளந்த ஆணவத்தையும்
நறுக்கெனக் கிள்ளி
மகிழ்ச்சியில் உச்சிதனை முகர வைக்கும்
குழந்தைகளின்
சிறுகையால் அளாவி தூவிய
வண்ணச்சாயம்!

5.
மற்ற நாட்டின் வளர்ச்சிக்காக
எண்ணிலடங்கா
காந்தி தாள்களை
கொட்டிக் கொடுக்க வண்ண
விளக்கிலான
நவீன விமானத்தில்
செல்பவரைக் கண்டு
பளிச்சொளி முகத்துடன்
கை கொட்டி மத்தாப்பாய் சிரிக்கிறாள் சிறுமி
சீமண்ணெய் விளக்கு அணைந்தது கூட தெரியாமல்!

6.
சாலையில் பயணிப்பவர்கள்
மீதுள்ள எல்லையில்லா
அரவணைப்பினாலோ
அல்லது ஆர்வக்கோளாறிலோ
வேக வேகமாக
ஊஞ்சல் போல் சாலையையும் சேர்த்து
ஆட்டிவிடுகிறது
ஜுலைக்_காற்று…

–அக அரசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “அக அரசு கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *