அமீபாவின் கவிதைகள்
அன்பெலி
*************
வீட்டின் எல்லா மூலைகளிலும்
ஓடிக் கொண்டிருந்தது
ஒரு காலத்தில்

அதன் பிறகான காலத்தில்
ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே
பதுங்கத் தொடங்கி இருந்தது

இரவு நேரங்களில்
இருட்டைப் பூசிக்கொண்டு
குதியாட்டம் போட்டது.

சமீப காலமாக
சத்தம் இல்லாமல் போகவே
அதை உற்று நோக்குகையில்
காற்றில் அதன் சப்தம்
பெருநாற்றமாக ஓடிக்கொண்டிருந்தது

வீடெங்கும் ஓடி நிறைந்திருந்ததை இறந்த பின்பு கண்டெடுப்பது
பெரும் பாடாய்ப் போனது

ஒரு வழியாக
முகம் சுளிக்க மூச்சடக்கிக் கண்டெடுத்து
ஒவ்வாமையுடன்
வீதியில் வீசியாயிற்று

இருந்தும் இருக்க வாய்ப்புண்டு
வீட்டின் ஏதேனும் மூலையில்
அதன் குட்டிகள்.

மரணம்
***********
எத்தனை இழப்புகளை
ஏற்படுத்திவிட்டது
இந்த ஒரு மரணம்.
எனது கவனக் குறைவோ
என்ற குற்ற உணர்வு
குறுகுறுக்கின்றது.
என் நினைவுகள் எல்லாம்
நீர்த்துப் போய்விட்டன.
காலைப் பொழுதுகள்
அத்தனைக்
கலகலப்பானதாக இல்லை.
இரவு படுக்கை
ஏதோ ஒன்று குறைவதாய்
குற்றம் சாட்டுகிறது.
குறுகிய காலமே
என்னிடம் இருந்தாலும்
இறுக்கமாக்கி விட்டது
இந்த
ஆண்ட்ராய்டு போனின்
அகால மரணம்.

சுயரூபம்
************
கண்டதையும் படித்து
கண் கெட்டுப்போய்
கண்ணாடி மாட்டித் திரிவதாக
கவலை கொள்கிறாய்.

கண்டபடி நடித்து
புத்தி கெட்டுப்போய்
முகமூடி மாட்டித் திரிவதைப் பற்றி

கவனமில்லாமல்.

– அமீபா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.