பட்ஜெட்
**********
வருடா வருடம்
வளர்கிறது
வறட்சியும், வாக்குறுதிகளும்.
இளைஞர்கள்
***************
ரசிக்கவும் ருசிக்கவும்
நேரமின்றி – இயங்கிடும்
இயந்திரங்கள்…….
கொரானா காலம்
**********************
உயிர் காத்திரு
காத்துதவு
கடவுளாவாய்!!
சுதந்திரக் கொண்டாட்டம்
******************************
தேசியக் கொடி ஏற்றும் நேரம்
முப்படைகளும்
முச்சந்தியில்!
இயற்கை
************
முடித்து வைப்பதற்காகவே
அனைத்தையும் தொடங்குகிறது
இயற்கை!
பிட்காய்ன்…
*************
தகிக்கும் கோடை,
தார் பாலை,
கார் சாலையில்
அதோ தூரத்தில்
நீர்….
அள்ளிப் பருகச்
சென்றுகொண்டிருக்கிறேன்.
அதுவும்
அருகில்
வந்து கொண்டே
இருக்கிறது…….
விரைவு உணவு எனும் எமன்
முப்பத்தி இரண்டு
வயது முடிந்த
முன்னாள் மாணவருக்கு
இறுதித் தீர்ப்பு
எழுதினார்கள்
இருதயத்தில்
அடைப்பு என்று!
இந்தியாவே ஆடும்
கிரிக்கெட்டை ஆடி
ஓய்ந்த அவன்…
உலகம் வியந்த
உசேன் போல்ட்டை
உரசிப் பார்த்த அவன்…
கட்டுடல்
கருத்துப் போக
கடினமாய் உழைத்தவன்..
காலனை நோக்கி
கடிது செல்ல
காரணம் என்ன?
விரைவு உணவு
விஷமானதோ?
விதி என்று
விட்டுவிட
மதியில்லை….
108
*****
பல மதத்தினரும்
படையெடுத்து
வந்திருந்தாலும்
பார்த்த அனைவரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்
ஒரே மந்திரத்தை..
சாரை சாரையாய்
சாலையெங்கும்
நான்கு சக்கர
ஊர்திகளின்
அணி வகுப்பு
நீண்ட பாம்பு போல்..
பரபர வென்று
பறக்கும்
பட்டாம்பூச்சி போல்
இரு சக்கரங்களின்
இரைச்சல்கள்…
கலைந்த
எறும்புக் கூடு போல்
திக்கு தெரியாது
ஊசாடும் மக்கள்..
படையணித்
தலைவன் போல்
மிடுக்காய்
மிரட்டிக் கொண்டிருக்கும்
காக்கி உடை கனவான்
பிற நேரங்களில்
காணது விட்ட
கடவுளை
விழாக் காலங்களில்
கண்டுவிட்ட
திருப்தி
கண்டவர் கண்களில்..
ஏக்கம்
காணாதவர் நெஞ்சில்..
கொரானாவை
ஒதுக்கி விட்டு
ஓடி உரசிக் கொண்டு
பார்த்தால்,
சிதறிக் கிடந்தன
சித்திரை திருநாளுக்காய்
வாங்கியிருந்த
சில கனிகள்..
மாதத் தவணை
கட்டி முடிக்கப்படாது
உருக் குலைந்த வாகனம்…
உடன்
கை கால்கள்
இடம் மாறி,
தலைகீழாகக் கிடக்கும்
குருதி கொப்பளிக்கும்
ஓர் உடல்…
எதாவது சில துளிகள்
நீர் கிட்டாதா என்று
இறுதி ரயில் பிடிக்கும்
பிரயாணியாய்
நம்பிக்கையற்று….
எல்லோரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்
போராடும்
உயிரைக்
காப்பாற்றி விட,
கலாம் கண்டு
கொடுத்த,
108 எனும்
மகா மந்திரத்தை
அலைபேசியில்
யாரிடமோ!
-பாலா
பொள்ளாச்சி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super Brother 💐💐💐