அ.பாலாஜியின் கவிதைகள்

அ.பாலாஜியின் கவிதைகள்




பன்மைத்துவம் நமது வலிமை
***********************************
சேரிகளுக்கு அருகில்தான்,
வானுயரக் கட்டிடங்களும் எழுகின்றன;

அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினத்திற்குத்தான்
“சில நேரச்” சிறகுகளும் தரப்படுகின்றன;

கோவில்களுக்கு அருகில்தான்
தேவாலயங்களும் மசூதிகளும் தோளுரசி‌ நிற்கின்றன;

முரண்பாடில்லை என நம்ப வைத்துவிட்டேன் என்னை நானே!
கார்ல் மார்க்ஸையும்
பெரியாரையும்
அம்பேத்கரையும்
படிக்கச் சொல்லிய மனதுக்கு
ஒரு கடிவாளம் போட்டேனேயானால்
நம்ப வைத்து விடுவேன்
வேற்றுமையில் ஒற்றுமை என
இற்றுப்போன இந்த மனத்தையும்…!

மும்மேதைகளிடம்
முரண்பட்டுக் கிடப்போரின்
குறுக்கே ஒரு மன நூல் ஓடும்,

இதயங்களுக்கு இடையில் இடைவெளியா?

பன்றியைக் கடவுளின் அவதாரம் என்றபடியே

வயற்காட்டில் உழுதோடி உழைத்த நம் மக்களை
பன்றிகள் என்று பழித்துரைப்பர்…!

மனிதர்கள் நினைக்காமல்
மன நூல் பொசுங்காது !

நூல் பிடித்தாற்போல
தோழர்கள் நாம் தோள்களுரசி தொடர்ந்து பாடுவோம்!
நூலறுத்து பட்டமெனப் பறப்போம்
அகன்ற வானம் நம் அறிவின் விசாலம்!

பற
*****
தாய்க்குருவி தன் குஞ்சுக்குப்
பறக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது;

முன்பொரு நாள்
இதே கூட்டுக்குள்
தன் தாய் தனக்கு
எவ்வாறு கற்றுக்கொடுத்ததோ அவ்வாறு…!

புத்தகச்சிறை
*****************
புத்தகத்தைச் சிலநொடி நேரம் சிறை பிடித்திருந்த
பட்டாம்பூச்சியைப் படித்தேன்,
புத்தகத்தை மறந்து…!

அதன் பங்கிற்கு
எந்தக் காட்டிலோ
எந்த பூவோ தந்த தேனை எடுத்து வந்த
கதையை எழுதிச் சென்றது..‌.!

கதை
*******
இறகுகள் சொல்லும் கதைகளை
மொழிபெயர்க்க யாருமில்லை இந்தக் கூண்டில் ;
முன்பிருந்த பறவைகளைக் கேட்டால் ஒருவேளை சொல்லலாம்,
சொன்னால் என்ன சொல்லும்?!
பறந்து போகச் சொல்லும்…!

கதவு
*******
பள்ளிக்கூடக் கதவுகளில்
காம்பஸ் வைத்துச் செதுக்கிய
என் பெயரையும் அவள் பெயரையும்
இந்நேரம் பெயிண்ட் அடித்து அழித்திருப்பார்களோ?!

வீட்டுக் கதவில்
குழந்தை தற்செயலாய்
என் பெயரை க்ரேயான்ஸ் கொண்டு
எழுதி அழித்துக் கொண்டிருந்த கணம் தோன்றி மறைந்தது
அவள் பெயருடன் முகமும்…!

பிரார்த்தனை
*****************
“கைகால் நல்லாத்தானே இருக்கு,
உழச்சுத் திங்க வேண்டியதுதான” என்று
யாசகம் கேட்ட கிழவரின் காதுபடச் சொல்லிவிட்டு,
நந்தியின் காதில் சொன்னான்
“எல்லாருக்கும் கைகால் சொகத்த குடு,
எல்லாரும் நல்லாருக்கணும்”…!

கைதி
********
பார்வைச் சிறையில் என்னைக் கைதியாக்கினார்
கண்களில் பசி ஏந்தி நின்ற அந்தத் தாத்தா;

பார்சல் சாப்பாடு வாங்கிச் செல்வது என் முதலாளிக்கு என்று
எப்படிச் சொல்ல அவரிடம்…!

அ.பாலாஜி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. அ.பாலாஜி

    Comment your thoughts…❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *