சந்துருவின் கவிதைகள்
1)
எதிரிகளிடமிருந்து காப்பாற்ற
குட்டியைக் கவ்விச் செல்லும்
மிருகம் போல் எல்லோரும்
வாழ்க்கையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள்

பாதுகாப்பான இடத்தில்
இறக்கி வைத்து
இரைதேட நினைப்பவர்களுக்குக்
குட்டியைத் தவறவிடக் கூடாதென்ற கவனம்
அருகிலிருக்கும் மனிதர்களிடம்
சந்தேகங்களைத் தந்து விடுகிறது.

துறைமுகத்தில்
சிதறிக் கிடக்கும்
தானியங்களைப்போல்
கண் முன்னே காய்த்துத் தொங்கும் கனவுகள்
அள்ளிக்கொள்ள அழைக்கின்றன

சிந்தியிருப்பதை கூட்டி வாருபவர்களுக்குக்
கூடைகளெங்கும்
கல்லும் மண்ணும்
சேர்ந்தே கிடைக்கின்றன

விரட்டும் கற்களுக்கு அஞ்சாமல்
துறைமுகத்துப் புறாக்கள் மட்டும்
லாவகமாய் விலகி அமர்ந்து
தானியங்களைக் கொத்துகின்றன

கரையிலிறங்கிய உற்சாகத்தில்
பிரத்தியேக உணவை
கப்பல் கேப்டன்
பறவைகளுக்கு விசிறுகிறான்
அவன் கால்களைச் சுற்றி
சிறகுகள் உரசும்
நன்றியின் பூக்கள்.

மற்றவவை போல்
பசித்த நேரத்தில் உண்ணவும்
நினைத்த நேரத்தில் கூடடையவும்
மனிதர்களால் முடிவதில்லை.

கூட்டமாய்ப் பறந்து
கட்டடங்களில் அமரும்
புறாக்களின் வாயில்
குஞ்சுகளுக்கான
மகிழ்ச்சி.

ஒரே சமயத்தில்
புறாக்களின் அலகுகளாகவும்
வீசுபவனின் கரங்களாகிவிடவும்
ஏங்குகிறது மனம்.
*********************

2)
பத்து குண்டு இருபது ரூபாய்
உப்புக்காற்றில் ஆடும் பலூனை
சுடும் சிறுவன்
நான்கு பலூன் வீழ்த்துகிறான்
எட்டு தீர்ந்த பின்
மொத்தம் முடிந்ததென்று
சாதிக்கிறான் கடைக்காரன்.

சற்று தள்ளி
அதே விலை
வேறு சிறுவன்
ஐந்து பலூன் வீழ்த்துகிறான்
பத்து முடிந்தும்
மேலும் ஒரு குண்டை
பரிசாகத் தருகிறான்.

தள்ளுவண்டி மீன் வாசம்
முதல் கடை ஈர்க்கிறது.
துணியால் துடைத்த கடாயில்
மீன் மிதக்க எண்ணை ஊற்றி
நேற்றைய மீனைப் பதமாக

சூடாக்கித் தருகிறாள்.

கூட்டம் குறைந்த அடுத்த கடை
புதிய மீன்
மிதமான எண்ணை
வயிற்றையும் கணக்கில் வைத்து
பொரித்துத் தருகிறாள்
வேறொருத்தி.

இரண்டு காட்சி
இரண்டு பார்வை
யூகிக்க முடியாத
வாழ்க்கை…!

 – சந்துரு.ஆர்.சி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.