வலிகளின் தைலம்
**********************
எல்லோரிடமும்
சில துன்பங்கள் இருக்கின்றன
மெல்லிய சில
வார்த்தைகளும் உள்ளன
சுமக்கும் வலிகளின் மீது
தைலமாய்த் தடவி விட
அவ்வார்த்தைகளை
ஆழமாய்ப் பதியமிடுகிறார்கள்.
எதற்கும் இருக்கட்டுமென்று
எல்லோரைப்போலவும்
சில பொய்களையும்
கோபங்களையும்
தயாராய் வைத்திருக்கிறோம்
செலவழிக்க விரும்பாமல்
முடிந்து வைத்த அவற்றை
உணர்ச்சிப் பெருக்கில் எப்போதேனும்
அவிழ்த்தும் விடுகிறோம்.
எனினும்
பகிர்தலின் பொருட்டு
எல்லோரும்
தங்களின் தோட்டங்களில்
இன்சொற்களால் பின்னிய
கூடுகளை அமைக்கவே முயல்கிறார்கள்.
வெளிப்பார்வைக்குத் தெரியாத
சில புன்னகைகளை
அதற்குள் மின்மினிகளாய்ப் பிடித்து ஒட்டுகிறார்கள்.
ஜொலிக்கும் சிறு வெளிச்சத்தில்
கூடுகளெங்கும் பரவுகிறது
வாழ்வின் ருசி…
யார் எதிரி
*************
கடவுளின் தோட்டத்திலிருந்து
விரட்டப்பட்டதால்
ஆதியிலிருந்தே இப்பூமி
சாத்தான்களால்
ஆசிர்வதிக்கப்பட்ட நிலமாய்
இருந்திருக்கலாம்…
தடை செய்த கனிகளுக்குள்
சுவையையும்
படைக்கபட்டவளுக்குள்
பறிக்கும் விருப்பத்தையும் தந்தது
கடவுளைத்தவிர
யாராய் இருக்கமுடியும்…!
முழுதாய் துய்த்துணரும் முன்பே
கைவிடப்பட்டதால்
சொர்கத்தை
ரசிக்கத் தெரியாதவரென்று
இன்பத்தின் எல்லையை
எதற்குள் வரையறுக்க முடியும்…
ஏவாளைப் படைக்க
ஆதாமிடமிருந்து
உருவப்பட்ட விலா எலும்பில்
ஆண்குறிகளின் நிழல்…
கடவுளைவிட இந்த பூமி
சாத்தானின் துகள்களால்தான்
நிரம்பியிருக்கிறது…
கைவிடப்பட்ட
ஆதாம் ஏவாளுக்குப்பின்
ஏதேன்ஸ் தோட்டத்தில் படைக்கப்பட்டவர்
யாராக இருக்கக்கூடும்…
இன்று பூமியிலிருப்பவை
யாருடைய கனிகள்…
தூக்கிட்டவனின் மரத்தைப்போல்
சாத்தானின் மரமும் இந்நேரம்
அடியோடு
வெட்டி வீழ்த்தப்பட்டிருக்குமா…
கீழ்படியாத படைப்பை உருவாக்கியதால்
தோற்றுப்போனது
கடவுளா…மனிதனா…?
சாத்தானின் சொல் கேட்டதால் விரட்டியடிக்கப்பட்டு
வேறு நிலம் பிறந்த வாரிசுகள்
கடவுளின் பிள்ளைகளாவதெப்படி…
சபிக்கபட்ட இருவரின் சந்ததிகள்
உருவாகக்காரணமான
சாத்தானை
எதிரியாய் எப்படி ஏற்பது…!
சாத்தான் மட்டும் இல்லையெனில்
நாமெல்லாம் இன்று ஏது…?
இருவரில் ….
முரண்படாமல்
மனிதனின் பக்கம் ஆதரவாய் நிற்பது
சாத்தானாகவும் இருக்கலாம்…?
ஒருவேளை….
பணிய மறுத்த மனிதனை
பகடையாய் உருட்டி விளையாடும்
மனித எதிரி
கடவுளாய்கூட இருக்கலாம்…!
இருள் உமிழும் கோபம்
***************************
உறை பனியில்
போர்வையற்று நடுங்குபவனின்
பற்கடிப்பை
அலட்சியம் செய்கிறான்
அதிகாரத்தின் பிரதிநிதி.
வழுக்குப் பாதையில்
நடப்போர்க்கு ஒத்தாசையாய்
எண்ணைப் பானைகளை
கவிழ்த்து விட்டவன்
நிலை தடுமாறுபவர்களை
புதுவித நாட்டியமாடுவதாய்
கைதட்டி ரசிக்கிறான்.
ஆட்சியதிகார மொந்தைகளில்
தலை கவிழ்ந்து
குடிகளை மறந்தவன்
எப்போதும் தன்னை
முக்காலத்தின் தீர்க்கதரிசியாய் அறிவித்துகொள்கிறான்..
செயற்கை வெளிச்சத்தில்
மின்னுபவன்
இரவில் மினுங்கும்
கண்களின் ஒளியை தவிர
தன்னிடம்
சுயமாய் ஒளியேதுமில்லை என்பதை
மறைத்தே வருகிறான்.
இயலாமையின்
கண்ணீர்த் துளிகளை
பூக்களாய் தொடுத்து
சந்தைப்படுத்தும்படி
காயப்பட்டவர்களிடமே
பரிந்துரை செய்கிறான்.
கசடுகளால்
இதயம் வளர்ப்பவனின்
அதிகாரம் பிடுங்கப்படும் நாளில்
அச்சப்பட்டு
ஒடுங்கிக்கியிருந்தோர்
தேக்கி வைத்த நியாயங்கள்
சர்வாதிகாரத்தின் தசைகளை
ஆளுக்கொன்றாய் அறுக்கும்.
முகமூடி
கழட்டப் பட்டவனின்
அசல் முகத்தை காண்போர்
அவன் நின்றிருந்த இடத்தின்
தடங்களையும் தகர்ப்பர்.
நசுங்கிக் கிடந்தோர்
விசும்பல்களை
உதாசீனம் செய்தவன்
அரண்மனை தாண்டி
தப்பிக்க வழிதேடி
அபயக்கரம் நீட்டும் நாளில்
துயர் சுமந்த கூட்டம்
யாசித்தவன் மீது
கோபத்தின்
இருளை உமிழும்.
அவ்விருளில்
மக்களை மடையர்களாக்கி
அதிகாரம் செலுத்தி வந்தவன்
ஆணவம் மொத்தமும்
சாமானியர்களின் காலடிக்குள்
யானையின் கால் இடறிய
நத்தையென
நசுங்கிக்கிடக்கும்.
– சந்துரு ஆர்.சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.