பறவை
**********
வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின்
நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின்
சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல
மனதிலிருந்து வடியும்
உணர்வுகளும் ஏக்கங்களும்
வார்த்தைகளாய் வடிந்தோட
நதியின் இருகரையில்
வளர்ந்திருந்த செடிகொடிகளில் மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் ரீங்காரமிட்டு
தேனெடுக்கும் வேளையில்
விரிந்த மொட்டுக்களிலிருந்து வெளிப்படும் நறுமணத்தில்
சிலநிமிடம் இளைப்பாறி
பல்லுயிர்க்கும் பசிபோக்கும்
கனியொன்று மலையிலிருந்து சீறிப் பாய்ந்தோடும் நதியில்
விழுந்து மிதக்க
ஓடும்நதியின் போக்கில் பயணித்த கனி
கையருகே வந்தடைய
சிறுஅலகால் கொத்தி சுவைத்ததும் வியந்துபோனது
நாவில்படும் துண்டுகள் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு சுவையில் இனிக்கும் ஒற்றைக் கனியினை
அடுத்தவேளைப்பசிக்கல்லாது கூடுகளில்
பசியோடு காத்திருக்கும்
சிறகுகள் முளைக்காத சிறுகுஞ்சுகளுக்காக
சுமந்துபோய்
வெயிலும் நிழலுமென
மாறிமாறி வந்துபோகும் மரக்கிளையில் அமர்ந்து
இரையோடு வந்திருப்பதாய்
சிறுஅலகில் ஒலியெழுப்பியது அந்தப்பறவை.
தாத்தா
*********
நாலுமணி சிற்றுந்தில் வந்திறங்கும் வானம்பாடிகளைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் நேரங்களில்
காலையில் விடுபட்ட கதைகள் மீண்டும்
வசப்படுத்திவிடுகின்றன பிஞ்சுஇதயங்களை
ஆள் நடமாட்டமேயில்லாத வீதியில்
வெளிச்சம்தெரியும் தூரம்வரைத் தேடுகிறது –
ஏதாவது அசைவுகளிருக்கின்றனவாவென்று
நடமாட்டம் எதுவுமில்லையென உறுதிப்படுத்தியவுடன்
பிஞ்சு நடைகளுடன் தளர்ந்த நடையும் தள்ளாடி
பூட்டியவாசல் திறந்து
ஒய்யாரமாய்ப் போய்
வர்ணங்கள்பூசிய சுவற்றினோரம் கிடந்த மரநாற்காலியில் அமர்கிறது
காலையிலிருந்து தனிமைச்சிறையில் அடைபட்ட முதிர்ந்ததேகம்
சீருடைகள் களைந்து மாற்று உடையணிந்த வானம்பாடிகள்
சிறகுகளசைத்து காற்றில்மிதந்து
பெருமரக்கிளையில் அமர்வதைப் போல்
தாத்தா என ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் பேரக்குழந்தைகளுடன்
-தன் இலையுதிர்கால நினைவுகளையும்
சின்னஞ்சிறு கதைகள்பேசியும்
இறுதியில் மழலைகளின் ஒப்பனையில்
மீண்டுமொருமுறை இளமைக்குத் திரும்பி பேரின்பத்தைக் கொண்டாடுகிறது
தாத்தாவின் மனதும் ஒரு குழந்தையாய்.
நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…
அவசரமாய் கேசத்தை
சரிசெய்து முகப்பசைகளைப்பூசி
ஒப்பனைகள் செய்து கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…
பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப் பொட்டுகளும்
விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…
எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும் –
மீதம் வைக்காமலும் காட்சிப் படுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்-நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில் இன்னொரு பிம்பத்தைப் பதிவுசெய்ய
இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…
கோவைஆனந்தன்
[email protected]
+919003677002
3/177,குமாரபாளையம்
கிணத்துக்கடவு
கோவை-தமிழ்நாடு 642109
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கவிதைகள் மிக மிக அருமை. வாழ்த்துகள் கவிஞரே