தர்மசிங் கவிதைகள்
வேடங்கள்
*************
கொதிக்கும் வெயிலை
வலைக்குள் அடைத்து
நடுங்கும் குளிரை
நயமாய் துரத்துவோம்
என்றீர்கள்

மழையின் வேர்களை
நடவு செய்யும் முறையை
மழலைப் பருவத்திலேயே
புத்திக்குள் புகுத்துவோம்
என்றீர்கள்

சூரியக் கீற்றுகளை
கட்டுகளாக கட்டிவைத்து
உங்கள் உள்ளத்து இருளை
விரட்டியடிப்போம்
என்றீர்கள்

காற்றின் எல்லைகளை
வரைமுறைப் படுத்தி
உங்கள் சுவாசங்களுக்கு
உத்தரவாதம் தருவோம்
என்றீர்கள்

வசந்தத்தின் தூதுவர்களே
வருகவென்றோம்

முள் வேலிகளால்
எங்கள் பாதைகளை
முடக்க முயன்றபோது தான்
புரிந்தது

நீங்கள்
சொக்கும் சொற்களால்
வானம் படைப்பவர்கள்

நறுமணப் பூக்களால்
தீ வளர்ப்பவர்கள்

சிதைகளின் நெருப்பில்
குளிர் காய்பவர்கள்
என்பது…

எங்கள் வழியை மறித்தீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் கைகளில் விலங்கிட்டீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் அங்கங்களை உரசினீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் மர்ம உறுப்புகளை
ஆயுதங்களால்
சிதைத்த போதுதான்
உயிர் வலியால்
நடுங்கிப் போனோம்

பலவான்களே!

உங்கள் இதயத்தில்
எப்போதாவது
ஈரம் கசிந்தால்
உங்கள் வேடங்களை
களைந்து விடுங்கள்

பாதுகாவலர்கள் எனும்
பதத்தை கேட்டாலே
நெருப்பு பொறி பறக்கிறது
நெஞ்சாங்கூடுகளில்…

வலி
******
காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்

பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்

புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்

இறங்குமிடத்தில்
வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்

அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுயகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த கொரோனா கால
” லாக் டவுண் ”
மனநலத்தை சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது

வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…

நமக்கென்ன?
****************
பிளந்த மண்டையிலிருந்து
பீரிடுகிறது ரத்தம்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கைகளின் மொத்த பலமும்
லத்தி வழி நுழைகிறது
முழங்கால்களில்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

முதுகில் வரிவரியாய்
ஆயுதங்கள் முத்தமிட்ட
சிவப்புத் தடங்கள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

விரலுக்கு மீறிய
வீக்கங்கள்
வெண்கட்டுகளுக்குள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கிழித்து வீசப்பட்ட
துப்பட்டாக்களில் படிந்து கிடக்கிற
கண்ணீரின் ஆறாத வலிகள்
அவளுக்குத் தானே
நமக்கென்ன?

சுதந்திரமாய் சீறும்
துப்பாக்கி முனையின் முன்
அவனது மார்பு தானே
நமக்கென்ன?

அந்நியருக்கான நேற்றைய
வலி வடிவங்களில்
இன்று நானாக இருக்கலாம்
நாளை நீயாக இருக்கலாம்
மறுநாள் அவனாக இருக்கலாம்

நம் மௌனமே
நம் வாழ்வுக்கு ஆதாரமானால்
நாளையே படரும்
நம் செவிப்பறைகளிலும்

” அவனுக்குத்தானே
நமக்கென்ன?”…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.