சே.கார்கவி கவிதைகள்
வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை……
*************************************************************
எத்தனை மௌனங்களை இடிகளாய் ஏற்பது
எத்தனை இன்னல்களை மின்னல்களாய் ஏற்பது
மேகம் விலகுமென
நீண்டநேரமாக நிலவிற்கு காத்திருக்கிறது
மண்ணில் வாழ் குழந்தை…..!

மாடியிலிருந்து வானை கீற முயன்ற கல்
காற்றைக் கிழித்த திருப்தியில் பூமியை அடைந்தது…..!

காற்றைக் கிழித்து விழுந்த கல்
குழுந்தைகளுக்கு
ஆற்றில் கோலம் வரையும் புள்ளிகள் ஆகிவிட்டன….!

ஆற்றில் உருவான வளைய கோலம்
அடுத்த கரையை தொடும் முன் முற்றுப் பெறுகிறது,
சிறு மீன் துள்ளி மீண்டும் உருவாக்கிய இன்ப வளையத்திற்கு முன்….!

மீனின் துள்ளலும், ஆற்றின் கரையோர சிறுவர்களின் நீச்சலும்

ஒன்றாகவே மூழ்குகின்றன,
மொத்தமாக உலகை நகர்த்தும் ஆற்றின் நீரோட்டத்தில்…..!

ஓடும் ஆற்று நீரின் உச்சபட்ச தேவை என்னவென்றால்
அதன் வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை
என்பதில் எந்த மாற்றமும் இல்லை………!

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில் இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுல்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும் சற்று அதிகமாகவே பதிவுறுகிறது……..

கடற்கரைப் பாதங்கள்
***************************
உனது மொத்த தலைகணத்தையும் இறக்கி வைத்த
பள்ளத்தில் நிரம்பி வழிந்து ஆரம்பமாகிறது
அலைகளின் தலைகணநிரப்பங்கள்………….

உனது ஒட்டுமொத்த எடையை அழுத்தி நகர்ந்த உனக்கு
என்னை மிதித்து சென்றதாக கவலையில்லை
நன்றிகெட்ட முன்னேற்றச்சுவடுகளாய்……..

அழைத்து சென்றேன்
அழித்து சென்றது
எழுந்து நடந்தேன்
என்னை ஒரு நூல் இறக்கியது………..

மணற்கம்பளத்தை வரியில்லாது மிதித்து சென்று
எறி இறங்க இயலாத நண்டுகளை படைத்ததுதான்
ஆகச்சிறந்த படைத்தலாகிறது…….

உனது அருகில் நான்
எனது அருகில் நீ
பாதியாக்கப்பட்ட யாரோ ஒருவர்
இங்காவது ஒற்றுமைக் காப்போம்
அலையடிக்கும் வரையில்………

அவளுக்கான அழுத்தங்களை
எடையாக்கி மிதித்து சென்றேன்
நீரின்றி நினைவுகள் மணலாய் ஒட்டியது…
நீர்பட்டு விரக்திகள் நீரோடு வழிந்தோடியது……….

அலைகளின் ஓயாத கரையேறுதலி்ல்
பலர் அறிய இயலாமல் போய்விடுகிறது
நேற்றைய நலம் விரும்பிகளின்
உண்மையான் கடற்கரைப் பாதங்கள்………

கவிஞர் சே.கார்கவி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.