குமரகுரு கவிதைகள்
************************
பார்த்ததைப் பற்றிய யோசனை
பார்த்த பின் அதிகரித்துக் கொண்டேயிருந்தது!
பார்த்த போதொரு காட்சியாகவும்
பிறகொரு அனுபவமாகவும்
பாடங்களை உதிர்த்தபடி
நிகழ்ந்து போனது!!
**********************
அருவியினடியிலொரு
மீன் துள்ளியபடியிருந்தது
அதன் துள்ளலுக்கேற்ப என் விழிகளை நகர்த்தி கொண்டேயிருந்தேன்!
விழியின் துள்ளலுக்கேற்ப இப்போது மீன் துள்ளிக் கொண்டிருந்தது!!
**********************
கிளிக்கொரு பழமெனப்
பழுக்க வைத்துக் காத்திருக்கும்
மரத்திற்கு வராத கிளிகளே!!
எங்கேயோ இல்லாத பழத்தைத் தேடிக் கொண்டிருக்கவா
இம்மரம் காய்த்தது?
***********************
கண நேரம் உன் கைப் பிடித்திருந்தேன்
பெருங்கடலொன்று அலையலையாய் ஊர்ந்து செல்ல முயல்வதைப் போல்
தன் பரந்து விரிந்து இறக்கைகளால் பறந்து போகும் வானம் போல்
மௌனம் நம்முள் மிதக்கத் துவங்கியது!
**********************
படகினடியில்
நாய்க்குட்டி போல்
துடுப்பை விரட்டி வரும் அலைகளைப் பாரேன்!
ஒரு கணம் கூட ஓயாமல் விரட்டி கரை சேர்த்ததும் தான்
சற்று ஓய்ந்து மீண்டும் கடலுக்குள் செல்கிறது!
***********************
ஓரிகாமி பறவையொன்றைச் செய்ய நினைத்தவள்,
யூடியூப்பில் காணொளி பார்த்துக் காகிதத்தை மடக்குகிறாள்
மடக்குகிறாள்
திடீரென அடித்த காற்றில்
அவள் கை கதகதப்பிலிருந்து
தப்பிப் பறந்தோடுகிறது
அந்த பாதி பறவை!!
விடுவதாயில்லை
அவள் அதை மீண்டும் பிடித்து
மடக்குகிறாள்
மடக்குகிறாள்
வீடியோ முடிந்ததும்
முழுதாகாத பறவையை செய்து முடிக்க
மீண்டும் ரீவைண்ட் செய்கிறாள்
மீண்டும்
தப்பிப் பறக்கிறது
அந்த முக்கால் பறவை…
மெதுவாய் பிடித்து
மீண்டும் மடக்குகிறாள்
மீண்டும் மடக்குகிறாள்
…
இப்போது “அப்பா! இங்கே பாரேன்!! பறவை செய்துவிட்டேன்!!” என்று என்னிடம் காண்பித்தாள்…
பறக்கவியலா ஓரிகாமி பறவை
கசங்கிய காகிதத்தில்
ஒடுங்கி கிடந்தது!!
“நல்லாயிருக்குமா!! ஆனா!! அந்த காகிதம் ஒரு கூண்டு போல்,
உன் பறவையால் பறக்க முடியல,
அதைப் பிரித்து பறக்க விடேன்!” என்று சொன்னதும்…
“போப்பா!!” என்றபடி அந்த பறவையை மடக்கி
புத்தகத்துக்குள் மறைத்து விட்டாள்.
“நான் நாளை என் பள்ளி தோழிக்கு காட்டுவேன்!!” என்றபடி!
காலைக்குள் அந்த முழு பறவை
மீண்டும்
பறந்திடாமல் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்!
குமரகுரு
9840921017
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை சகோ 😍😍💐💐