பயணக் குறிப்புக்கள்
*************************
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
அப்பத்தா ஊருக்கு
பயணப்பட்டேன்
பங்குனி திருவிழாவிற்கு
அம்மாவுடன்
விடிந்த பொழுதில்
எட்டு மணியை தவறவிட்டா
உச்சிப் பொழுதுக்கும் காத்திருக்கணும்
ஜெயவிலாஸ்க்கு
கூட்ட நெரிசலில் சிக்க
இருக்கையின்றி
இருவரும் பிரிந்தோம்
முட்டிமுனைந்து
அம்மாவின் அருகே
செல்ல இயலாது ஒரு காலில் தொங்கி நின்றேன்.
பிடிமானமின்றி தவித்தவள் ஒவ்வொரு தலையாய் விலக்கி
எக்கி நின்று கண்ணில் துழாவினாள் என்னை இருபக்கமும்,
அனேகமாக கழுத்து வலித்திருக்கும் அம்மாவிற்கு
நடுத்தர வயதுள்ள
பயணி ஒருவர்
எண்ணக்கூடும்
அவரையே கவனிப்பதாக
ஒருவர் மூச்சை
இன்னொருவர் சுவாசிக்க
திட்டுமுட்டாகி
வியர்வையோடியது சமத்துவமாக பேருந்திற்குள்
எங்கள் ஊர் நிறுத்தத்தில்
இறங்க காத்திருக்கும்
ஜனக்கூட்டத்தில்
அம்மாவை மோதியவாறு
அந்த நடுத்தரவயது பயணி
விரசாக நகர்ந்து திரும்பிப்பார்த்தார்
எனைநோக்கி வந்தவள் கையை இறுகப்பற்றி
படபடத்தாள்
உன் அப்பா இருந்திருந்தால்
தனியாக விட்டிருப்பாரா என்னை .
பூட்டியின் நிறம்
******************
மஞ்சள்பூசினால்
பொன் நிறமாகும்
முகரை
கடலைமாவு
பையித்த மாவு
அரைத்துத் குளித்தால்
சருமம் மினுமினுக்கும்
ஹமாம்
பான்ஸ்க்கும்
வெள்ளையாய் தெரியும்
முகவாட்டு
க்ரீம் தடவினாள்
கரும்புள்ளி
காணாமல் போகும்
ஃபேசியல் பண்ணினால்
மறையும் சுருக்கம்
மூஞ்சி ப்ளீச்
அம்மாயி ஆச்சிகள்
ஆலோசனைகள்
விளம்பரங்களின்
விளக்கக்காட்சி
ஒவ்வொரு நாளும்
பரிசோதனையில்
மூழ்கிய அவள்
எதை அப்பினாலும்
எங்க அப்பத்தா கருவாச்சியை
உரித்த நிறத்தில்
பிறந்ததாக வர்ணிப்பார்
அப்பா.
காதல் என்பது
*****************
அரைப் பாவாடை சட்டையில்
வரப்பு மேட்டில் சுற்றி வருகையில்
எதிர் வீசும் காற்றாக
குவித்த கைக்குள்
மாவிளக்கும்
சிரட்டை தேங்காயுடன்
பல்லைய் காட்டி
வெகுளியாக ஓடிவரும் வெள்ளையப்பனிடமொரு ப்ரியம்
பூப்பெய்திய நாளில்
தென்னை ஓலை
வெட்டி சாய்த்த
மாமனின் நண்பன்
கன்னியப்பன் மீதொருகண்
டவுன் பஸ் பயணத்தில்
நித்தம் ஜன்னலோர இருக்கைபிடித்துதரும்
பள்ளிக்கூட தோழன்
வள்ளியப்பனிடமொரு ஈர்ப்பு
விடுமுறை நாளென்றாலும்
துடுப்பிட
குளத்தங்கரையில்
மிதி வண்டியோடு காத்திருக்கும்
காத்தவராயன் மேலொரு மோகம்
மனசுக்கு பிடித்ததும் பிடித்தமானவர்கள்
வந்து போவதும்
பறவையின் கூடாக
வாழ்க்கை பயணத்தில் வாய்க்கப் பெறும்
அவரவர்களுக்கு.
இதுவல்ல காதல்
இதுவல்லவே காதல்,..
தூரத்துசொந்தமென
காதலிப்பது
முறைமை உரிமை ஆய்ந்து
பிரம்ம முகூர்த்தத்தில்
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
திருமண பந்தத்தில்
புகுவது இதுவா? காதல்?
விலாசம் அறிந்திராத
விகல்பமில்லா
ப்ரியத்தில்
உள்ளங்கையோடு
உள்ளங்கையில்அளித்த
மாவிளக்கின்
ஈர பிசுபிசுப்பின்
தித்திப்பை
மனசு சுவைக்கனும்
கடைசிவரை.
குடியிருப்பது குடிசையானாலும்
குறையாத நேசத்தின்
வெளிச்சத்தில்
குதுகலமாய் கொண்டானும்
குழந்தைகளோடு
வாழ்நாள் முழுவதும்.
நெருக்கடிகள்
குரல் வளை இறுக்கினாலும்
ஒருவருக்கொருவர் உள்ளான
இருப்பு வெதுவெதுப்பாய்
சப்பணமிடனும் உள்ளத்தில்
இறுதி வரை.
பருவம் முடிந்தபொழுதுகளில்
ஒருவர் தலைமாட்டில்
ஒருவர் அளப்பரிய காதலை
அசையிட்டாவாறே
உயிரின் ஓசை நின்றிடவேண்டும்.
கரை தொடா
அலையில்லை
மரணம் நிகழா வீடில்லை
கடுகளவு துளிர்க்காத காதல்
மனமில்லை
காதலிக்கவிட்டால் ஜீவனே இல்லை .
காதலால்
காவியம் படைக்காவிடினும்
காத்திரமான
காதலை முன்னெடுப்போம்
கட்டி அரவணைப்போம்
மாட்டையல்ல
காத்திரமான
காதல் மனங்களை
க.பாண்டிச்செல்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.