ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு
*******************************
இலை துளிர்காலம்
வசந்தகாலம்….
வனப்பில் துள்ளின
வேம்பின் இலைகள்
பசேலென….
அந்தச் சாலை ஓரத்தில்
கம்பீரமாக….
மழை வரும்போதுகூட
அறியாமையில்
அண்டிச்செல்லும் மனிதர்கள்!
கோடை வெயிலென்றால்
குடும்பமே நடத்துகின்றார்!
ஒரு இலை நிழலுக்கு
ஒரு மனிதனென
சுகமென புகழும்
புகழுரைகள்!
எறும்புகளின்
எகத்தாளங்கள்
கன்று காளைகளின்
அண்டல்கள்!
சும்மா கிடைத்து விடும்
சுகபோகமென்ற
சோம்பேறிகளின்
சொர்க்க புரியாகிறது
வேப்ப மர நிழல்!
ஓய்வை விரும்பி நின்றபோதும்
காமம் கொண்டு தழுவும்
காற்று;
காமக் காற்றின்
சுகம் உணரும்
சோம்பல் கூட்டம்!
உடலுக்கு நல்லதென
ஒய்யாரக் கூட்டம்;
கிளை அமர்ந்து
இல்லமாக்கும்
சின்னக் குருவிகள்!
இராக கீதமிசைத்து
எச்சமிட்டு
நாளை பறப்பதற்கான
ஆசுவாசம் கொள்ளும்
அடைக்கலம்!
சின்னக் குருவிகளின்
எச்சங்கள்
கனவுலகில் சஞ்சரிக்கும்
மரத்தடி மரண உறக்கக்காரர்களின்
திறந்த வாயில்…. !
உறக்கமற்ற சில
சோம்பேறிகளின்
காட்டுக் கூச்சல்….
எச்சமிட்ட சின்னக் குருவிகளை
வார்த்தைக் கற்கள் வீசி… விரட்டும் சோகம்!
முளைப்பதற்கு விதைபோடாதக் கூட்டம்;
உரிமை கொண்டாடி;
முளைப்பதற்கு விதைபோட்டக்
குருவியின் வாரிசுக்கு
அண்ட இடமின்றி
அடித்து விரட்டும் சோகம்!
உரிமைக்குக் குரல் கொடுக்கத் தெரியாத
சின்னக் குருவிகளின்
கூட்டம்!
யாரோ போட்ட விதையில்
சுகமாக குறட்டை விடும்
கூட்டம்;
சிரித்துக் கொள்வதைத் தவிர….
வேறென்ன செய்யும் மரம்?!
மண்ணானக் கற்பனை
***************************
கற்பனை என்ற
கடிவாளமற்றக் குதிரை
ஒவ்வொரு
மனிதனிடமும் உண்டு!
கற்பனைகளால்தான்
மனிதன் மேம்பட்டான்
என்பதனை விட,
கற்பனையில் மிதந்து
பறந்து, நீந்தி….
வாழ்க்கையை
கற்பனையிலேயே
கறைத்துக் கொண்டான்
மனிதன்!
ஒரு மனிதனின்
கற்பனைதான்
இன்று
உலகையே உலுக்கிக்
கொண்டிருக்கிறது!
பேய்க் கற்பனை!
ஏதோ…
நாட்டுக்கு நாடு
பெரியவன் சிறியவன்
என்ற
வீராப்பு…
வெட்டி வீராப்பு….
கடைசியில்
உழைப்பாளர் நிறைந்த
ஒரு
அழகியக் குட்டி நாட்டை
சுடுகாடாக்கிப் பார்த்ததுதான்
அந்த
ஒருவனின்
பேய்க் கற்பனை!
கற்பனையைப்பற்றி
கதைப்போமானால்
அது
கரையின்றி
கதைத்துக் கொண்டேயிருக்கலாம்!
எட்டாதக் கற்பனை
எவனுக்குத் தோன்றியதோ?
அந்தக்
கல்லையும் கரையவைத்த
கற்பனை
எவனுடையதோ?
மண்ணாய்ப்போக!
மலையை
மண்ணாக்கியக் கற்பனையை
நாளை
மன்னிக்காது
எங்கள்
மழலையர் உலகம்!
மலையை
வரலாறாக மட்டுமே…
ஏட்டுக் கல்வியில்
படித்தால்
சபிக்கவும் செய்யும்;
சாப விமோசனமே
இல்லை… இல்லை..
மலையை
மண்ணாக்கச் சொல்லி
கற்பனை செய்து
நிஜப்படுத்தியவனுக்கு!
– பாங்கைத் தமிழன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.