பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




அட்சய திருதியை
**********************
அள்ள அள்ளக் குறையாதது
அட்சயம்!
இந்து சமண சமய
விரும்பிகளின் புனித நாள்!
இந்த நாளில்
எதனை ஒன்றை செய்கின்றோமோ
அது…
அப்படியே தொடரும்;
குறையில்லாமல்!

பிரம்மா…
இந்த பூமியை
சிருஷ்டித்தப் புனித நாளாம்!

எப்படி
நம்பாமல் போவது?

நாம்
குறையின்றி வளர வேண்டுமே!

பத்தாண்டுகளுக்கு முன்
அட்சய திருதியைக்கு
அட்டிகை வேண்டுமென
அடம்பிடித்தாளாம்
நண்பரின் துணைவி!

தெரிந்த… அறிந்த…
நண்பரின்
நகைக்கடையில்
கொஞ்சம் முன்பணமும்
அட்டிகைக்கான
பெரும் பணம் கடனாகவும்
வாங்கிக் கொடுத்தாராம்!

வளர்கிறதாம்….
அன்று
அவர் செய்த செயல்;
இன்றும்
கடனாக….

‘ஒரே நாடு’
*************
இரண்டு இடம் வேண்டாம்;
இந்த ஒரே இடம் போதும்!
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்!

எங்கேனாச்சும்
கேள்விப்பட்டிருப்பீரா
இந்த
அநியாயத்தை!

முதல்
மனித இனமாகத் தோன்றி
வழி வழியாய்
வாழ்ந்து வந்தோரை….
வழி மறித்து,
அந்நியப் படுத்திய
அநியாயத்தை
வேறெங்கேனும்
கேள்விப்பட்டதுண்டா?

கறையான் புற்றுக்குள்
கருநாகம் புகுந்துக்கொண்ட
கதையதனை
வேறெங்கேனும்
கண்ட துண்டா…. கேட்டதுண்டா?

இந்த நாடுதான்
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்
உகந்த நாடு!

ஒற்றுமையாகத்தான்
வாழ்கிறோம்
என்பதெல்லாம்…..
நரியின் ஊளை!

ஒரே தன்மையுள்ள
மண்ணில்
வெவ்வேறு தன்மையுள்ள
மனிதர்!
வேறு எங்கேனும்
நடப்பதுண்டா?

ஒரு பாம்புக்கு
படையே நடுங்கியக் கதை
இந்த
மண்ணிலிருந்துதானே?

விஷம் கொண்ட பாம்பை
அடித்து விரட்டுதற்கும்
அய்யோ பாவமென்ற
அடி மனதை தொட்ட
தந்திரவாதிகளை
வேறெங்கும் கண்டதுண்டா?

கண்ணுக்குக்
கசப்பானவனை
கறைப்படுத்தி…..
கண்ணுக்குத் தெரியாத
கரை கட்டி….
கரை உடையாமல்
காப்பதற்குக்,கையில் தடிகொடுத்து,
காவலரை நியமித்து
கர்வம் ஏற்றி…..
அடடா….
இதனை புத்திசாலித்தனமென்று
போற்றி மகிழும்
ஒரு தேசத்தை
வேறெங்கும் தேட வேண்டாம்;

அந்த
விடியாத தேசம்….
இதுதான்…. இதுதான்!

சொல்லுங்கள் சாமீ
**********************
தாலி அறுப்பதற்கு
நீங்கள்தான்
காரண மென்றால்
வலிப்பதாகவும்
நடிக்கத் தெரியும்
உங்களுக்கு!

புலிப் பற்களில்
தாலி கட்டிய
பூர்வீகக் காரனுக்கு
அறிவில்லை!

நீர் சொன்னதெல்லாம்
நம்பி… நம்பி….

தாலியை
தாரைவார்க்கிறோம்…
தங்கத்தில் கட்டி….
உடன்
உயிரையும்!

தாலி கட்டி
அதனை
சாதுர்யமாக
காக்கும்
வித்தகிகளை
வீட்டுக்காரிகளாக்கியவர்
நீங்கள்!

இப்போதும்
நம்புகிறோம்;
எங்கள் தாலிகளை
காப்பாற்றுங்கள்!

தங்கத்தில்
தாலி செய்தால்
விமோசனமில்லையென
ஒரு
வித்தையை வீசுங்கள்;

நம்புவதற்கு
நாங்கள்
காத்துக் கிடக்கிறோம்!

உடன்
ஒரு ஆலோசனை சாமி;
கொஞ்சம்
படிக்க விட்டுட்டீங்கல்ல
அதனால்தான்!

தாலியை
விலைமதிப்பற்றதாகவும்,
தாலி செய்யும்
தங்கத்தை மாற்றி
விற்பனைக்கு உதவாத
ஓர் உலோகத்தைக்
கூறுங்கள்….
ஏற்றுக் கொள்வோம் சாமி!

கூறுவது
நீங்களாயிற்றே!

– பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *