து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்
தமிழ் என்றே முழங்கட்டும் ‌..

தமிழர் குடிக்கிங்கு ஈடு வேறெங்கும் உளதோ இப்புவியினிலே…

தமிழ் பெற்றெடுத்த முக்கூடலே..
தமிழன்னை புகட்டிய தமிழ்ப் பாலே

தான் உயர தம் சுற்றம் வாழ்வினிக்க
தமிழ் உயர தமிழன் வான் சிறக்க
நிலமெங்கும் தமிழ் தமிழ் என்றே
அதிரட்டும் பறை.

தொல்குடித் தமிழினம்
தமிழர் கொண்டே சிறக்கட்டும் இனி.
காணி நிலம் தொட்டு
காணாத நிலமெங்கும்
தலவிருட்சம் முதல் வேர்வரை வழங்கட்டும் இனி தமிழ்க்கனி.

வேற்று மொழி தலைவிரிக்க..
தமிழர் தோள் தமிழ் தாங்கி நிற்க
களையறுப்போம் தமிழ் கெடுக்கும் அன்னிய தலைகளை
வளர்த்தெடுப்போம் தமிழ்க் கலைகளை

இருள் சூழ்ந்த நிசிகள் ஒவ்வொன்றும்..
புலரட்டும் தமிழ்க் காலையாக
மலரட்டும் தமிழ்மாலையாக..

அச்சம் தவிர்..
அடங்க மறு..
தமிழின்றித் தமிழனில்லை
தமிழனின்றி தமிழகம்
இல்லவே இல்லை
என்றே..
கொட்டட்டும் செண்டை..
முழக்கட்டும் பம்பை

திக்கெட்டும் தமிழ் தமிழ்
என்றே கூவட்டும் சங்கு…
திசையெங்கும் தமிழா தமிழா‌
என்றே ஓங்கி ஒலிக்கட்டும்‌‌ இங்கு..

எங்கும்
உடுக்கையும் சிலம்பும் அதிரட்டும்
தமிழர் இசை கொண்டாடட்டும்
உலகம்..

நித்தம் எம் எழுத்தாணி
தமிழ் போற்றியும்
தமிழர் புகழ் பாடியுமே
சிறக்கட்டும்!
***********************

வாழ்வென்பது இங்கு ஒன்று போல..

வனசாதி ரோஜா கூட்டமதற்கு
உடலுரசும் முட்கள்..
திக்குமுக்காடும் இதழ்கள்..

மாளவுமுடியாது..
மீளவுமியலாது ..
அங்ஙனமே..
பூத்தும்
அவ்விடமே மரித்தும்
வாழ்ந்து தான் முடிகின்றன..
மீண்டு வாராமல் தத்தளிக்கின்றன..

தோட்டத்து மலருக்கோ கூந்தல் வாசம்
காட்டு மலருக்கிங்கே சகதியின் சுவாசம்.
ஏனிந்த பாரபட்சம்
எதற்கிந்த வெளி வேஷம்.

வாழ்வென்பதும் ஒருமுறை தான்.
அதில் வீழ்வதென்பதும் ஒன்றாய் இருக்கட்டுமே..
சூடும் மலருக்கே இங்கு இத்தனைத் துயரம்
கதறும் மனிதர் வாழ்வுக்கேது இங்கே உயர்ம்?
************************

அனைத்தும் கடந்தே இனி போவோம்..
மீதத்தை வாழ்ந்தே இனி முடிப்போம்.

எதுவும் இங்கு நிரந்தரமில்லை.

எத்தனை எத்தனை வியன்கள் இங்கு..
அத்தனை அத்தனை விந்தைகளும் உண்டு.

எது நட்பு
ஏது பகை..
யாது துரோகம்..
என்னது விரோதம்..
உணரும் முன்..
வாழ்வே மாயமாகி விடுகிறது..
மனிதவாழ்வே கேள்விக்குறியாகிப் போகிறது..

நண்பன் சிலகாலம் பகை ஏற்கலாம்..
பகைவன் கூட நொடிப் பொழுதில் நட்புண்டு தோள் கொடுக்கலாம்
துரோகியை ஒருக்காலும் அருகில் கொள்ளாது இருக்கலாம்.
உயர் நட்பின் மாண்பை எப்போதுமே கொண்டாடியே தீர்க்கலாம்.

நட்பும் உருமாறலாம்..
பகைமையும் உயர்ந்தோங்கலாம்.
எதுவும் இங்கு சாஸ்வதமில்லை.
மனித வாழ்வும் இங்கு நிதர்சனமில்லை..
மழலைக்கும் இங்கு கரிசனமில்லை.

மனிதன் மட்டும் எப்போதும் தவிக்கின்றான்..
சற்றே தொய்வுற்றால் அழுதே தான் புரளுகிறான்.

மனித வாழ்வு…
அதில் தான் எத்தனைச் சித்திரம்

அமைதிக் கொண்டால் காணலாம்
பன்முக விசித்திரம்.
*************************

– து.பா.பரமேஸ்வரி
சென்னை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.