அம்மாவுக்கு ஒரு தாலாட்டு…..!!!!!
***************************************
உலகிலுள்ள
எல்லா மொழியிலும் அம்மாயென்று எழுதி
மொழிபெயர்ப்பு செய்கிறேன்

மொழிபெயர்ப்பு
செய்த ஒவ்வொரு
மொழியும் அம்மாயென்றால்
அன்புயென்றே மொழிபெயர்ப்பாகிறது,

உருவம்
கொடுத்தவள்
உழைத்து உதிரத்தையும் கொடுத்து
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
ஒரு வேளை உணவுக்காக
வீட்டின் கதவோரம் நின்று
எட்டி எட்டி பார்க்கிறாள்
எட்டிய தூரத்தில்
நிற்கும் பூ வண்டியில் ஏறிக்கொள்ள,

நடிக்க தெரியாத
ஒரு கதாபாத்திரம் அம்மா

தாலாட்டு
பாடலைப் பாடி
பிள்ளைகளை தூங்க
வைத்த அம்மா
நீண்ட நேரமாகவே
தூங்கிக் கொண்டிருக்கிறாள்
தெருவோர
அனாதை பிணங்களாகவே,

இட்லியும் மாட்டுக்கறி குழம்பும்…!!!
*****************************************
உழுத மாடு தலைகீழாக தொங்குகிறது தோரனமாக
ரோட்டோர பந்தலில்
தலைகீழ் தொங்கும்
மாட்டின் தொடையை
அறுத்து தராசு தட்டில் போடுகிறான் கறிக்காரன்
அப்பாவுக்கு பிடித்த
மாட்டுக்கறியை அலசி, மஞ்சள்தூள்,மிளகு, இஞ்சி,
போட்டு வேக வைத்திருப்பாள் அம்மா
இட்லி குண்டானிலிருந்து
வெளியேறும் ஆவி வீட்டையே
சுற்றி சுற்றி வருகிறது
அம்மாவாசைக்கு வராத
காகம் வாரம்தோறும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
மொட்டை மாடியில்
துணி கம்பிகளில் அமர்ந்து ஊஞ்சலாடுகிறது
இரண்டு இட்லியும்,
மாட்டுக்கறி குழம்பும்,
டம்ளரில் தண்ணீரோடு
மொட்டை மாடியில்
காகம் கரைவது போல
கரைகிறான் தாத்தாவிடம்
அதிகமாக பேசாத அண்ணன்
இறந்து போன தாத்தாவும்
பாட்டியும் காகங்களாக மாறி
மொட்டை மாடியில் அமருகின்றனர்,
மாட்டுக்கறி வாசம்
விண்ணிலும் வீசியதால்
மாட்டுக்கறி துண்டுகளை
கூர்மையான அலகுகளால்
கொத்தி கொத்தி தின்னுகின்றனர்,
காகங்களான
தாத்தாவும் பாட்டியும்
இட்லியையும், மாட்டுக்கறியோடு
தண்ணீரை குடித்த
காகம் பறந்து போகிறது
மரக்கிளைகளை நோக்கி
ஒரு இட்லி
சாப்பிடும் குழந்தைகள்,
இன்று மூன்று இட்லியை
பிசைந்து சாப்பிடுகின்றன
மாட்டுக்கறி குழம்போடு……!!!!!!!
– கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
9791642986,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *