தேநீர் இடைவேளை
*************************
சிறகு விரித்த பறவையாய்…
புத்துணர்வின்…
புதையலாய்… மனம்
தேடிடும்… தேநீர்
இடைவேளையில்…

உன் குவளையைக்
கையிலேந்தத் துடிக்கும்
விரல்களுக்கு மத்தியில்…
உள்ளக் குதூகலம்…
திடம்…மணம்…சுவை
எதிர்பார்க்க…

உள்ளுணர்வின்…
உண்மை உணர்ந்தே…
உத்வேகம் கொண்டே…
பொங்கியெழுந்த
பாலில் புதுச்சட்டை போட்டே…

குவளைக்குள் நடனமாடிக்
கொண்டிருக்கிறாய்…சிந்திய
திவலைக்குள்…சிந்தாத
என் ருசியாய்…

நினைவுகள்
*****************
வாரந்தவறாமல்…
எண்ணெய் வைத்தே…
குளிப்பாட்டுவது போல்…

என்னையும்..நீரால்
கழுவி… எண்ணெய் போட்டு அழகு பார்த்தே…

மெலிந்த சக்கரத்தை காற்றால் நிரப்பி…
கடவுளாய்… வணங்கிய காலமும்…
கண் முன்னே நிற்க…

பட்டும் படாமல்… தொட்டும் தொடாமல்…
ஓரமாய் நிற்க வைத்தே…
உபயோகமில்லாமல் உதாசீனம்
செய்வார்கள் என்று ஒருபோதும்…
நினைத்ததில்லை…

எதிர்திசைச் காற்றை… கடினமாய்
அழுத்தி… சேரும் இடம்… தூரமாக்காமல்
சேர்த்த என்னை இன்று தூரமாக்கிவிட்டார்கள்…

குழந்தைகளை முன்வைத்தே…
அவர்களுக்குக் கொடுத்த…
முக்கியத்துவத்தை… எனக்கும்
கொடுக்க… தவறிவிட்டார்கள்…

வெயிலில் நின்றால்… துருப்பிடிக்கும்
என்றே எண்ணியவர்கள்…
வெயிலே… என் ஆயுளாய்
மாற்றிவிட்டார்கள்…

அழகுக்கோர் அழகாய்… என்னை
அழகுபடுத்தியவர்கள்…
அழுக்கேறி… துருப்பிடிக்கக்
காரணமானார்கள்…

என்னென்ன குற்றம் சொல்ல…
இவர்களை… என் மனக் குமுறல்
அனைத்தும்… சாய்ந்து நிற்கும்
கருங்கல்லிடம் சொல்லி விட்டேன்…

இருந்தும் அது என்ன செய்யும்…
கல்லாய் மாறிய மனித மனம்…
மாறும் காலம் வரும் என்றே…
காத்திருக்கிறேன்… என் ஆயுள்
முடிந்தாலும்… ஆகாய வெளிச்சத்தில்…
காய்ந்து கிடப்பேன்… வளமையான
நினைவுகளுடன்…

– சக்தி ராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *