சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




‘நானெனும் பொய்’ 
***********************
பிரபஞ்சம் முழுதும்…
எனக்கானதென்றே உணர்ந்தேன்…
என் செயல் அனைத்தும்
வண்ணமடித்தே…பிறர் கண்ணில்
பதிய வைத்தேன்…

எனக்கான வலி பொறுக்காது…
கதறிய அழுகையில்…அன்பைத் தேடி சுழன்றேனே…
சுழன்ற சுழற்சியில்…
பேரன்பின் வடிவங்கள்…
பின்னலாய் என் வாழ்வை
பிணைந்திருக்க செய்தேன்…

பொருள் தேடி அலைகின்றேன்…
புகழ் தேடி அலைகின்றேன்…
புதிதாய் வாங்கிய…
புத்தகப்பையில்…புது சொந்தம்
படரப் பார்க்கிறேன்…

காலத்தின் அருமையாய்…அற்புத செயல்கள் பல செய்த பின்னும்
சில அற்பமான செய்கையில்
என் குற்றம் உணர்கின்றேன்…

வருங்காலம் பெரிதாய் எண்ணி
நிகழ்காலம் மறக்கச் செய்கின்றேன்…
நின்ற பொழுதின் நிழலாய்…
நிஜங்களின் துறவை அறிகின்றேன்…

பிறர் செய்யும் குற்றங்கள்…
என் புன்னகையிலேயே கடக்கிறேன்…

புதிய குற்றச்சாட்டை…
தூக்கிச் சுமக்கும் கூன் முதுகை நானும் இங்கே தவிர்க்கின்றேன்…

தோழனாய் தோள் கொடுக்கும்
உறவின் உண்மை அறிய மறைமுக சோதனை நடத்துகிறேன்…

காலக்கடிகாரம் கையில்
கிடைத்த போதும்…
எக்காலம் பெரிதென குழம்புகிறேன்…

என் குழப்பத்தீர்வை…குயவனின்
மண்பானையாக ஆக்குகிறேன்…
அப்பானையில் குளிர்ந்த நீர் ஊற்றிப்பருக ஆசை நானும் கொள்கிறேன்…

குளிர்ந்த நீரும் சுடுநீர் ஆகி சுடுகிறதே…
அச்சூட்டில் என் சுயநலம்…
எண்ணெய் போல் மிதக்கச் செய்கிறதே…
மிதந்த கனவில்…என்னைத் தேடி
அலைகின்றேன்…

நான் சேர்த்த சொத்தும்…பணமும்
யாரோ அனுபவிக்கப் பார்க்கின்றேன்…
கந்தலாடையில் ஒதுக்கப்பட்ட
வாழ்க்கை போல உணர்கின்றேன்…

என்ன வாழ்க்கை இதுவென்றே…
ஓடி ஓடி…உழைத்தேனோ…
என் ஓய்வின் தனிமை…
என்னைத் தின்ன…நானே
விருந்தைப் படைப்பித்தேன்…

இல்லா…கடவுளை இருப்பதாய்
எண்ணி…இறைவா உன்னை
சரணடைந்தேன்…
என் வேண்டுதல் உணர்ந்த
கடவுளும் இங்கே…காலதூதனை
அனுப்பிவிட்டான்…

உயிராய்…உறவாய் இருந்தவர்
எல்லாம் ஓரமாய் நின்று
பார்த்திடவே…என் உயிரை
அழைத்திட்ட சங்கு சத்தமும்
என் உயிரை கொஞ்சம் எழுப்பிடுதே…

காலன் வென்ற செய்தியை…
வேதனையாய் எண்ணிய மனம்
காலன் கைப்பிடித்துக் கிளம்பியதே…
அப்போது உணர்ந்த நொடி…
எல்லாமும் இங்கே…பொய் தானோ…!!!
நானும் இங்கே பொய்தானோ…!!!
என் மெய்யும் இங்கே பொய்தானோ…!!!

‘மனிதம்’
**********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்க வாழுறேன்…

ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…

போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…

மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…

என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கண்ணம் உரசி கிடக்குதே…

உணர்வால உறவான நாம…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பை சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…

மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…

ஆறுதலாய்
***************
ஏமாற்றத்தின் உச்சம்…
யாரையும் பார்க்க விருப்பமில்லை…
எனக்குள் நானே…தொலைகிறேன்…
என் முகம் புதைத்தே…என்னுள்
என்னைக் காண்கிறேன்…

எத்தனை… எத்தனை…
முகங்கள் பார்த்த பின்னும்…
ஏமாற்றத்தின் வலிக்கு மட்டும்
இங்கே குறைச்சலில்லை…
வலியல்ல இது வடு…என்றே

வந்தமர்ந்து அறிவுரை கூறுபவர்களுக்கு
ஒன்றும் புரிவதில்லை…இது
புதிதும் அல்ல அவர்களுக்கு…

யாரோ ஒருவரின் சாயலில்
என் வலிக்கு ஆறுதல் தேட
விரும்பவில்லை…என்னுள் தேடுகிறேன்
எனக்கான ஆறுதலை…

‘வலிமை’
***********
வீடு தாண்டி வெளியே
வரும் ஓர் இடம்…
என் வலிமையெலாம்
சோதிக்க…பிடித்த இடம்…

நான் வரும் போதே…அவளும்
வெத்துக்குடத்தை…வேகமா
தூக்கிட்டு ஓடி வந்துடுவா…

மனசெல்லாம்…வார்த்தையாக்கும்
இந்த இடம்…மனம் விட்டு பேசிய
பின்னும்…நாளைக்கு சந்திக்கும்
நேரத்தை வந்தவுடன் சொல்லிடுவா…

தண்ணீரால நிரப்பிய குடமும்…
கண்ணீரால் நிரம்பிய விழிகளும்…
பேசிய மொழியை நாள் பூரா சிந்தித்தாலும்…மௌன மொழியில்
வீட்டுக்குள்ள சுமக்கும் நேரம்…

விடிவு காலம் வராதோனு…
ஏக்கப்பார்வையில் பார்க்கும் போதே…

மறுநாளும் விடிஞ்சிருச்சி…தண்ணீர்
பிடிக்க போகலையானு…குரலொன்று
செவி கேட்க…இதோ கிளம்பிட்டேனு
போய் வாரேன்…என் வலிமையை
கொஞ்சம் சோதிச்சுப்பார்க்க…

‘அப்பா…’
************
உறவுகள் ஆயிரம்… இருந்தாலும்
அப்பப்பா…அப்பா உன் முகம் பார்க்க
என் விழி இரண்டும் காத்துக்கிடக்குமே…

ராத்திரி வேலை முடிஞ்சு லேட்டா நீ வந்தாலும்
தூங்கிய என் விழிகள் இரசிக்கும் உன் முகம்
காரணமின்றி… என் இரசனை விரும்பிக்கிடக்குமே…

எனக்கான தேவைகள் நிறைவேற்றியே…
நின் வாழ்க்கை சக்கரம் சுழலுதே…
அதில் நம் காலமும் விரும்பி நகருதே…

பசிக்கு…ருசியும்…
ருசிக்கு…பசியும்…நீ உண்டு பார்த்ததில்லை…
அப்பப்போ நீ நிற்கும் டீக்கடை வாசலில்
நின் சொர்க்கம் டீயில் முடியுதானு நினைச்சேன்…

நான் உயர ஏணியா இருந்து ஏத்தி விட்டு இரசிச்ச…
பல சறுக்கல்களையும்…சருகா மிதிச்சு
கடந்து போக பாதையா வழிகாட்டி என்னோடு நடந்த…

நான் நடக்கும் பாதையில பட்டுக்கம்பளம் விரிச்ச…
ஆனா உன் பாதத்திற்கு செருப்பு கூட
இல்லாமலே நடந்த…

மனம் விட்டு நீங்கள் பேசி நான் பார்த்ததில்லை…
ஆனா உன் மனசுக்குள்ள உள்ள வார்த்தை
மௌன மொழியின் செயலாவே
நான் பார்த்து வளர்ந்தேன்…

சாப்பிட்டியானு தொடங்கும் உரையாடலுக்காக…
கைபேசியும் காத்து தினமும் கெடக்கும்…
இந்த காத்திருப்பின் இரகசியத்தை…ஒருநாளும் நாம
தவறவிட்டதில்லை…

உன் அன்பை சொல்ல வார்த்தை இங்க இல்ல…
எப்போதும் நீ மட்டுமே…போதும் என்பதில்
என் அன்பை சொல்லி வைப்பேன்…
நின் உறவோடு என் வாழ்வை புதைத்து
நானும் வாழ்வேன்…

– சக்தி ராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *