* நீலமேறிய வானத்தைக் கிழித்தபடி
புன்கைமர அடர்த்திக்குள் வந்து
அமர்ந்தது அந்த அழுகுரல் பறவை
அப்பறவையின் சிறகசைப்பில்
தெறித்து விழுந்த ஒரு துளி
குரலுக்குள் உற்றுப்பார்த்தேன்
பாடி நகர்ந்து வரும் ஒரு நதியை
குரல்கள் வழிந்தோடி
எங்கோவொரு தொலைவுக்கு
அப்பால் கடலாகத் ததும்பியபோது
புன்னகைப் பெருவனம் உம்மென்று
மௌனித்திருந்தது
அவை மனம் கனக்க
நேரப்போகும் நம் பிரிவை
முன்பே அறிந்திருந்தன
போலுமென் ஆண்தேவதையே…
************************************
* வாழ்வெனும் பெருவனத்தில்
உன் பிடிவாதக் கங்குகளால்
தீயூட்டித் தப்பிச் செல்கிறாய்
இப்போதெல்லாம் எப்படிக் கடக்கிறாய்
குறைந்தபட்சம் குறுச்செய்திகளில்கூட
பிரியங்கள் பகிராத இந்நெடுநாட்களை?…
உன் பித்தேறிய தருணங்களால் மூர்ச்சையாகிய நான் மீண்டெழ
கொஞ்சம் நஞ்சேறிய வார்த்தைகளையாவது உதிர்த்துவிட்டுப்
போயிருக்கலாம் நீ
இனி மீதமுள்ள வாழ்வை வலிந்தேனும் நகர்த்த பிரார்த்திக்கிறேன்
முன்பைப் போல்
சிறகுகளை முறித்து
அதே நிலத்தில்
விழச் செய்துவிடாதேயென் ஆண்தேவதையே…
***************************************************
* பிரிவைப் பருகுதல் என்பது
ஒருவகைப் பித்துநிலை
புளித்த திராட்சை ரசமாய்
நினைவுகள் நுரைக்க
அபாண்டத்தின் பழிச்சொல்லென
கையிலிருக்கும் அப்பத்தை நனைத்து
பிரிவைப் பருகுதல் என்பது ஒருவகை பித்துநிலை
இப்போது பழைய ஞாபகங்களை முதுகில் சுமந்தலையும்
ஒரு பறவையாகிறேன் என் வானமெங்கும் நஞ்சேறிய
அடர்நீலமாய் காட்சியளிக்கிறது
இத்தனை கடந்தும்
சிறகுகளை வலுப்படுத்த
ஒருபோதும் மறப்பதில்லையென் ஆண்தேவதையே
அடுத்த நாளை எதிர்கொள்ள…
*************************************
* இதுகேளென் ஆண்தேவதையே
முன்பொரு காலத்தில் நாம்
காடுகளுடன் கைகோர்த்து
நடந்தோம் சரித்திர மர நிழலில் இளைப்பாறினோம்
முதைப் புனம் கொன்று
சுடுபுன மறுங்கில் பயிரிட்டோம்
நம் சந்ததிகளை
நாளெல்லாம் வெயில் பருகும்
பறவைகள் காலத்தின் மீதான
அதிர்வுகளில் நம்மோடு
பயணித்தன
நட்சத்திர ஆழங்களில் புதைந்து
மீள வல்லவையாக இருந்தன
நம் சுவடுகள்
கல்லோடு கல்லுரசி தீயெழுப்பிய
கற்கால நினைவுகளுக்குள்
பின்னிக்கிடக்கின்றன
நம் மரபின் வேர்கள்
‘மரபு வழிப்படுதல்
மானிடர்க்குக் கடனாயின்
‘குறிஞ்சி’ என்பது வெறும் ‘புணர்தலும்; புணர்தல் நிமித்தம்’ மட்டுமன்று…
********************************************************************************
* நானோ; நிபந்தனையற்ற காதலோடு
உன்னை அணைத்துக்கொள்கிறேன்…
இறுகக் கரம் பற்றி முத்தமிடுகிறேன்;
மார்பில் உன் முகம் புதைத்துக் கொள்கிறேன்;
தலை கோதி உறங்க வைக்கிறேன்…
துயரம் படிந்த வாழ்வில்
நீ தொலைத்த பால்யத்தை மீட்டுத்தருகிறேன்
கனவுகளையும்கூட
நீயோ; பாசறையோன்
சமூக நீதி
சுயமரியாதை
பகுத்தறிவென பெரியாரின் தீச்சொல்லைக் கணையாக்கி
மனித அவலம் களைத்து
மகிழ்ச்சியின் பெருங்கூச்சலெடுத்து தேர்க்குரவை ஆடுகிறாய்.
வேந்துவினை முடித்து விரைந்து வந்துவிடுவேன் கண்ணே
என் செவிமடல் வருடும்
உன் விரல்களை முத்தமிட
இன்னமும் காத்திருக்கிறேன்…
இனிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ எங்கிருக்கிறாய்? விரைந்து வந்துவிடுவாய்தானே?
என் ஆண்தேவதையே…
– சங்கமித்ரா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

