இன்னும் தேடுகிறேன்
**************************
லட்சம் முறை எடுத்துப் பார்த்திருப்பேன்
நீயும் நானும் சேர்ந்து எடுத்த
சில புகைப்படங்களை…
பசுமைமாறா நினைவலைகள்
ரம்மியமாய் சூழ்ந்தது
ராத்திரி வேளையில்….
நீ கொடுத்த எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்த
மனவறையை திறந்து பார்க்க சாவியைத் தேடினேன் இதயப்பெட்டியில்
வெகுநேரம் தேடிய பின் தான்
கிடைத்தது அந்த மாயச்சாவி…
காலம் கடந்து திறப்பதால்
சீக்கிரம் திறக்க இயலவில்லை
என்ன செய்ய மனம் தான் அடிக்கடி மாயமாகிப் போகிறது
கால இடைவெளியில்…
ஒவ்வொன்றாய்த் தேடிப்பிடித்துப் படித்தேன்
தேன் சொட்டச் சொட்ட எழுதிய காதல் கடிதங்கள்
ஒருநூறு கிலோ இருக்கும்…
அப்படியே கொஞ்சம் தூரம் துழாவிப் பார்த்தேன்
சாப்பிட்ட சாக்லேட் எச்சத்தை மிச்சம் வைத்திருக்கும் உறைகள் ஒருகிலோ இருக்கும்….
விசித்திரமாக இருக்கிறது தூக்கி எறிய வேண்டிய குப்பைகளைச் சேர்த்து வைத்திருக்கிறது
பேதை மனமென்று நகைத்தப்படியே நகர்ந்தது நனவிலி மனம்…
நான் தான் உன் கண்ணன் என்று
நாலாயிரம் முறை சொல்லி இருக்கிறாய் அலைபேசியில் ஒரு வருடமாய்…
தேடிக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை என்று சோர்ந்து அமர்ந்து கொண்டது சோம்பேறி மனம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில் விடியல் பிறக்கப் போகிறது
அவனோ! தயாராக இருக்கிறான்
தயக்கமின்றி தாரமாக்க தங்கமங்கையை
நான் ஏனோ! இன்னும் தேடுகிறேன் அவன் கொடுத்த
நினைவுகளை
நிறுத்தமால் என் மனவறையில்….
மரணித்து விட்டேன்
***********************
உன் புகைப்படத்தை
ஓராயிரம் முறை
பார்த்து இருப்பேன்
ஏனோ! நீ இன்னும்
பார்க்கவில்லை
என் குறுஞ்செய்தியை…
காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று
நானும் கூட,
சிலாய்த்துப் பேசியது உண்டு
என் தோழியின் காதலுக்கு
தூது போன நாட்களில்…
தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது…
ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய்
இம்மியளவும் மாறாமல்
உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில்…
நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது…
என்ன செய்ய நீயும்
கொள்கையின் வாரிசு தானே!
உன் கொள்கையை காதல்
களவாடுமென நினைத்தேன்
மாறாக, கொள்கை களவாடியது காதலை…
எல்லாவற்றிலும் நீ முழுமை காண விரும்புகிறாய்….
நான் உன்னை மட்டுமே காண விரும்பிறேன்
உணர்வுகள் சேர்த்து வைக்கும் உறவை என்று நானும் நம்பினேன்…
என் நம்பிக்கைக்கு பரிசளித்தது உறவல்ல பிரிவு
என் நினைவுகள் ஒருநொடி பேசியிருந்தாலும்
நீ அழைத்திருப்பாய்
உரிமையுடன்
இன்று என் பிறந்தநாள் நீ மறந்து விட்டாய்
நான் மரணித்து விட்டேன்…
உனக்குள் தேடு உன்னை
*****************************
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள
காமம் என்னை விட்டுச்செல்ல
அடங்க வைத்தது வயது
அடக்கம் செய்தது மனது
வெள்ளத்தில் ஓடும் உள்ளம்
பள்ளத்தில் நாடத் துள்ளும்
சிற்றின்ப மாயையில் நெஞ்சம்
சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும்
ஆசையின் வழியோ சிறிது
ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது
அறுசுவை உணவு ருசிக்கும்
அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும்
மோனம் உள்ளே செல்ல
மோகம் வெளியே செல்லும்
இருக்கும் நாட்கள் குறையும்
இகவாழ்வு நாளும் கரையும்
தேடி அலையாதே என்னை
தேடு உனக்குள் உன்னை
பார்ப்பவை எல்லாம் அழகு
பார்வையை மாற்றிடப் பழகு
அறிவின் வடிவே உலகு
அன்பே இறையின் அலகு
– சரவிபி ரோசிசந்திரா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.