சசிகலாவின் கவிதைகள்
காதலித்துக் கிடப்போம் வா…
*********************************
பனிக்குடம் உடைந்து
வெளிவரும் போதே
குரல்வளை நெறித்துக்
கொல்லப்பட்ட அவலம்…

தடைகளைத் தாண்டிடும்
போதெல்லாம்
தடுமாறி விழுந்து
முடமாகிப் போன துயரம்…

பறத்தலை முடக்கி
பிய்த்து எறியப்பட்ட
மென்மையான இறகுகளென
பறந்திட வலுவின்றி
தவித்திடும் கொடூரம்..

விழுங்கிடவியலாமல்
அரவத்தின் விடமென
கண்டத்தினை கவ்விக்கொள்ளும்
நின் நினைவுகளின் வேதனை…

கவிதையாய்க் கருத்தரிக்கப்பட்ட
நம் காதலோ
சிதைவுற்று சிதறுகிறது
அர்த்தமற்ற வார்த்தைகளாய்..

மாளாத் துயரத்திலிருந்து
மீளவியலா நிலையில்
அனுதினமும் அரங்கேறுகிறது
முட்களின் படுக்கையில்
முகம் புதைக்கும் நிகழ்வொன்று…

அடுத்த ஜென்மத்திலேனும்
காலம் தாழ்த்தாமல்
வந்து விடு
காதலித்து கிடப்போம்…
*****************************

விருட்டென்று
விழித்துக்கொள்ளும் காதல்..

உன் அன்பெனும்
ஆழிப்பேரலையில்
வாரிச் சுருட்டி
அணைத்துக் கொள்கிறாய்
எனை மொத்தமாய்…

பெருமழைக்கு முன்னான
சிறுதூறல் போல
மண்வாசனையோடு
மணக்கிறது நின் காதல்…

என் காதலோ…
சிணுங்கல்களின்
பொக்கிஷமாய் உண்டாகும்
நின் இதழின் சுழிவில்
விருட்டென்று
விழித்துக்கொள்கிறது…

உந்தன் கழுத்தோர
பூனை ரோமங்களின்
குறுகுறுப்பில் சிக்கி
சிலிர்த்துக் கொள்கிறது…
நகப்பூச்சு சாயத்தில்
சுயமிழந்து
சொக்கி நிற்கிறது..

இப்படி
அணுவணுவாய்
உன்னை ரசித்து
உள்ளம் உறைகையில் எல்லாம்
போதுமென்ற மனம் மட்டும்
வருவதேயில்லை
என் காதலுக்கு…

ஆமாம்..
உன்மீது கொள்ளை ப்ரியம்
என் காதலுக்கு…
அது அப்படி தான்
உன்னை ரசித்து லயித்திருக்கும்..
எப்போது பார்த்தாலும்
இப்போது தான்
முதன் முதலாய் பார்ப்பது போல…

– சசிகலா திருமால்
கும்பகோணம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.