சுதாவின் கவிதைகள்

சுதாவின் கவிதைகள்




உதவி செய்யாமலும்
கடந்து சென்று பழகுங்கள்…

பேசுவதற்கு வார்த்தைகள்
நிரம்பிய போதும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

அடுத்தடுத்த குறுஞ்செய்திகள்
அவசியம் இல்லையெனில்
தவிர்த்து நகருங்கள்…

உங்கள் நட்பாயினும்
ரகசியங்களை பத்திரப்படுத்துங்கள்….

உங்கள் குழந்தையேயாயினும்
உங்களுக்கு பிறகு தான்
என்பதை உறுதி செய்யுங்கள்…

எத்தனை வேலைகள் இருந்தாலும்
வெட்டவெளியில் வெறுமனே
அமர்ந்திடப் பழகுங்கள்…
கைபேசி இன்றி…

எல்லா வேலைகளையும்
இன்றே முடித்துவிடாதீர்கள்…
நாளைக்குக் கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…

ஏனெனில் இங்கே தீர்ந்து போதல்
என்பது முடிந்து போதலுக்குச் சமம்…
அன்பே ஆயினும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

வெறுப்பையும் கூட கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…. பிறிதொரு

சந்திப்பில் அறிமுகம் தேவையிருக்காது…

******************

நான் விலகி நிற்கிறேன்
பஞ்சுமிட்டாய் வாங்கிய கைகள்
இன்று என் நிழல் விட்டு
விலகி நிற்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

ஊர் சுற்றித் துள்ளிக்குதித்த
கால்களில் காரணம் தேடி
கடக்க நினைக்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

பேசிப்பேசி ஓயாத வார்த்தைகள்
சுற்றிச் சுற்றி நோகாத கால்கள்…
இன்று வலியில் உதிர்த்த
வார்த்தைகளை இலையை அசையாது
உந்திச் செல்லும் பறவையாய்
கடந்து செல்கயில் நான்
சற்று விலகி நிற்கிறேன்…

அன்பின் பரிமாணம்
வார்த்தைகளில் முற்றுப்பெறும்
பொழுதுகளில் நான் விலகி
நெடுந்தூரம் செல்கிறேன்…

வேறு வேறு நட்புகளையும்,
அன்பையும் கொண்டவர்களே
அனைவரும் என உணர்கையில்
நான் மெல்ல விலகிச் செல்கிறேன்…

சாக்குப்போக்கு சொல்லி
என்னோடு நீ நிற்கமறுக்கும்
வேளையில் இதய ஓரத்தில்
ஒரு நரம்பு மட்டும் ஊமைக்
கண்ணீரில் ஓலமிடுகிறது…
அந்த இதயத்தைத் தேற்றுவதற்கேனும்
நான் விலகி நிற்கிறேன்…

மௌனத்தின் துர் நிமிடங்களை
மீண்டும் ஸ்பரிசிக்க விருப்பமற்று
நான் மெல்ல மெல்ல விலகுகிறேன்…

என் தலை முடியில் நரை முடி
மிகுந்த வேளையில்
சிந்தனைகளும் வெளிறிப் போனதோ
எனச் சற்றே விலகுகிறேன்…

உனக்கென நான்
பத்திரப் படுத்த நினைக்கும்
கைக்குட்டையும்
நீ விரும்பாத ஒன்றாகிவிடுமென
சற்றே விலகி நிற்கிறேன்…

மனதால் தொலைவில் வாழ
முயற்சிக்கையில் நான்
மெல்லமெல்ல விலகி நிற்கிறேன்…

– சுதா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *