அவளும் நானும்
அரிதாகவே பேசிக் கொள்கிறோம்…
எப்போதாவது எதிர்ப்பட்டாலும்
புன்னகை இதழ்கள்
ஆழ விரியாமலும்
அகல விரியாமலும்
கடந்து செல்கின்றன…
எங்களின் பெயரிடப்படாத உறவில்
அப்படி என்ன நேர்ந்து விடப் போகிறது…
இல்லை அப்படி என்ன நேர்ந்துவிட்டது…
என்று மட்டும் இப்போது வரை புரியவில்லை…
இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன?…
சில மணித்துளிகளுக்கு முன்பு
நானும் அவளும் சேர்ந்து வாங்கிய
தோட்டை மாற்ற நினைத்தேன்…
அப்போது என் தொங்கட்டான்
சொல்லியது நீங்கள்தான்
பேசிக்கொள்வதில்லை
நீங்கள் கடந்து போகும்போது
நாங்கள் பேசிக் கொள்கிறோமென…
இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன?…
******************************
மை தீர்ந்த
பந்து முனை
பேனாவின் தனிமை…
மை இருந்தும்
முனை ஒடிந்த
பேனாவின் இயலாமை…
தவறி விழுந்த பேனாவை
தழுவ விரலின்றி
குப்பையில் சேர்ந்த
பேனாவின் இறுதிநாட்கள்…
எழுத்தை முன்வைத்துப்
பிரித்த பேனாவையும்
மூடியையும்… எழுதி முடித்தபின்
இணைக்க மறந்ததால்…
வருத்தத்தில் காற்றைக் குடித்து
இறந்த பேனாக்கள் பல…
அந்த வரிசையில் நிற்க மனமின்றி
உன் விரல் தேடி அலைகின்றேன்…
எழுதித் தீர்த்துவிடு…
ஏனெனில் பாதியில் பரிதவிக்கப்
பயமாக இருக்கிறது…
****************************
நான்கு சுவர்களுக்கு
மத்தியில் நான்
மட்டும் தனியே…
தனிமைப் படுத்திக் கொள்
எனச் சொல்லும் வைத்தியருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
தனிமை
சில அமானுஷ்யங்களையும்…
சில அழகான நினைவுகளையும்…
கவிதைக்கு இட்டுக்கட்டும்
வார்த்தைகளையும்…கடத்த வல்லது…
நான்கு சுவர்களுக்கு
இடையே மரப்பலகையில் இருக்கும்
சிறு துவாரத்தின் வழி
என் உலகம் விரிகிறது…
இருளும் இருளின் பொருட்டு
சில வெளிச்சமும்…ஊரே
உறங்கும்போது உறங்கா விழிகளும்…
இந்தக் கவிதையைப் போல்
முற்றுப்பெறாமல் தொடர்கிறது…
என் பிரியமான காய்ச்சலும்…
********************************
இன்று இல்லாது போனாலும்
என்றோ ஒரு நாள்…
அது வருடத்தின் முதல் நாளோ
என் பிறந்த தினத்தின் முதல் நிமிடமோ…
விடியலின் சில மணித்
துளிகளுக்கு முன்போ…இல்லை
அடர்ந்த இருளின் மத்தியிலோ…
இதில் ஏதும் நிகழாது போனாலும்
என் இறுதிப் பயணம் முடியும்
சில நிமிடங்களுக்கு முன்போ…
கட்டாயம் நிகழ்ந்துவிடும்…
என் அடர்ந்த நெத்தியில்
உன் சிறு இதழ் முத்தம்…
-சுதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.