இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்
1. அன்பை விதைப்போம்
வஞ்சக எண்ணத்தில் வலைவிரிக்கும்
நஞ்செனும் மனதிலும் ஒட்டியிருக்கலாம் நல்லதன் விதைகள்.
முகம்பார்த்து முன் ரசித்து
பின்விட்டுப் புறம் பேசும் உள்ளத்திலும்
உறைந்திருக்கலாம் உதவிடும் நேசம்.
பெண் பார்த்துப் பித்தாகி
வன்முறைக்குள் வழியமைத்து
வஞ்சியின் வாழ்வை புதைகுழிக்குள்
பொசுக்கிடும்
நயவஞ்சகனின் நெஞ்சிலும்
நிலைத்திருக்கும் தாய்ப்பாசம்.
கருவிக்குள் தன்னை தொலைத்து
காலத்தைத் தாண்டி ஓடும்
பணத்தைத் தேடும் இயக்கத்திலும்
பதுங்கியிருக்கலாம்
பாசத்திற்கான ஏக்கம்.
அவதூறுகளுக்குள்ளே ஆற்றலைத் தொலைத்து
அடுத்தவர் நகர்வை அசிங்கப்படுத்தும்
அறம் தொலைத்தோரிடமும்
கவனிக்கலாம் ஒழுக்கத்தின் ஒளிவு.
நிம்மதியைத் தொலைத்திடும்
நெஞ்சமுள்ளோர் நிறைந்திருக்கும்
சமூகத்தின் பயணத்தில்
நிழலென அன்பை விதையுங்கள்
நெகிழ்ந்திடும் மனதின் வேர்வையில்
பிறந்திடக்கூடும் பேரன்பின் வாசம்.
******************************************************************************
2. வழியைக் காட்டும் உழைப்பு
பொதுநலம் பேணும் ஓட்டமென காந்தியின் அகிம்சை
எளியோனும் அரியணை ஏறிடும்
ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை நோக்கிய அம்பேத்கரின் பயணம்
அடிமையின் மனத்திற்குள்
அனலென தேசப்பற்றை விதைத்து
ஆயுதம் நீட்டியாவது
விடுதலைக் காற்றை சுவாசிக்க
வாளேந்திய நேதாஜியின் வேகம்
உள்ளத்திலும் தேசத்திலும்
வீரமும் விவேகமும்
எழுச்சியும் சமத்துவமும்
விதையென முளைத்திட
எழுத்தால் எழுந்து நின்ற பாரதியின் தீரம்
முதலாளித்துவத்தின் கரத்தில்
தொழிலாளியின் எண்ணத்தைக் கூட்டி
ஆலைகளை உயர்த்திக் கட்டிய நேருவின் தொலைநோக்குப்பார்வை
வசதிகளற்ற கிராமத்திலும்
எண்ணற்ற கருவிகளைக் கண்டறிந்து
பொருளாதாரத்தை மேம்படுத்திய நாயுடுவின் தேடல்
தொழில்நுட்பங்களே எட்டாது தொலைவில் நின்ற போதும்
திறமையில் வைத்திட்ட நம்பிக்கையில்
தேசமெங்கும் அணைகளை எழுப்பிய
விஸ்வேஸ்வரய்யாவின் அறிவியல்பார்வை
கல்வியில் கிடைக்காத போதும்
அனுபவத்தில் பெற்றிட்ட
அறிவுத்திறத்தால் வறுமையின் பிடிக்குள் வறண்டு கிடந்த
எதிர்காலத்தை பள்ளிகளால்
மீட்டெடுத்த
காமராசரின் யதார்த்தப்புலமை
பிஞ்சுகளின் மூளைக்குள்
கனவுகள் உருவாகிடத் தூண்டி
காணும் செயலெங்கும் அறிவியலைக் கண்டுதெளிந்திட
போகுமிடமெங்கும் எதிர்காலத்தை
நேர்மறைப் பார்வைக்குள்
உருவாக்கிய கலாமின் உற்சாகம்
காட்டிய வழிகளில் புதைந்திருக்கும்
உழைப்பின் மேன்மையை
உணர்ந்தோர் உலகின் திசையெங்கும்
உயர்ந்தோராய் மாறலாம்.
***********************************************************************
3. சிறகு விரிக்கும் கனவு
உழைப்பின் கரம் பிடித்து
முயற்சியின் பாதையில் கால் பதித்து
நம்பிக்கையின் நல்பலத்தில்
நடப்பவை யாவும் நல்லதென்ற
நேர்மறைச் சிந்தையில் நுழைந்து
வாழ்வெனும் வானத்தில்
விரித்திடும் சிறகுகளுக்கு
இயக்கமென உந்துகிறது
எப்போதும் பூக்கும் கனவுகள்.
***********************************************************************
4. அன்பை அறுவடை செய்
முள்சூழ மலர்ந்தாலும் வீசும் மணத்தாலும்
விரியும் புன்னகையாலும்
இன்முகத்தைப் பெருக்கிவிடும் மலரின் வாழ்வென
மனதினில் பெருக்கிடு அன்பெனும் அமுதம்.
தடையெனவே தடுத்தாலும் தடுமாறாப் பாதையிலே
சித்தம் கலங்கிடாது
நடைபோடும் வரிசையிலே
எறும்பின் திறனென
எப்போதும் சேமித்துவை
இதயத்தில் இரக்கத்தை.
மேனியிலே. வெட்டும் குத்தும் விழுந்தாலும்
பள்ளம் மேடுகளெனப் பாத்திகளில் பிரிந்தாலும்
புதையலைப் பரிசளிக்கும்
பூமியின் பொறுமையென
பரிசளிப்பாய் பகையாளிக்கும்
அன்பின் குணத்தை.
இடியும் மின்னலும் பிளந்திடும் சோதனையில்
எப்போதும் நிலைகுலையாது
தன்னையே உருக வைத்து தரணியின் தாகத்தை
தணிக்கின்ற மேகத்தின் தியாகத்தின் எல்லையென
உணரவைப்பாய் காணும் யாவருக்குள்ளும் பேரன்பின் பிரியத்தை.
குருதியிலே உயிர் வளர்த்து கொடையெனவே பிரசவம் காட்டி
பிள்ளையினைப் பேணுகின்ற தாய்மையின் தன்னிகரற்ற கடமையென
எண்ணத்தில் நிறைத்துவை
அழியாத கருணையினை.
அளவிலாக் குப்பையினால் அகமெலாம் மூடினாலும்
வீணாகும். கழிவெல்லாம் கால்வாயில் கலந்திட்டாலும்
புறத்தைத் தூய்மையாக்க புதுவெள்ளம் பாய்ச்சி
காணும் நிலமெங்கும்
பசுமையினைப் பிரசவிக்கும்
நதி போல
நகர்தலில் விதைத்திடுக நல்லதொரு அன்பின் உலகத்தை.
ஓட்டத்தை உடன்வாங்கி
கதிரோனின் நேரத்தை
காட்டுகின்ற காலமென
மனங்களிலே மாண்புகளை மதிப்பாக்கும் மகிழ்வுடனே
கருணையினைச் சுரக்கின்ற கண்களில் மிதந்து
பேரன்பை தவமெனப்
பிரியத்தில் பெற்றிட்டால்
நகரும் வாழ்வினிலே நாளும் உடன்வைத்து
அன்பினைச் சுமக்கலாம்.
இத்தரை மீதினில் இன்முகம் கூட்டி
எத்திசையும் இசைகின்ற ஏற்றம் கண்டு
முத்திரை பதியும் முயற்சியிலே முன்னேறி
முகமெலாம் அன்பையே செய்திடுவோம் அறுவடையாய்.
**********************************************************************************
5. அன்னதானம்
ஆங்கோர் ஏழைக்கு உணவிடும் அற்புதம்
தாங்கிடும் நற்செயலின் தலையாயதென
ஓங்கிய புகழ் கண்ட பாரதியின் கூற்றில்
இங்கிவர் அளித்திடும் தானத்திலே
அறமும் அன்பும் கருணையும் நிறைந்திடின்
வற்றிய வயிறுகளுக்குள் வாழ்வென இறங்கும்
அன்னத்தின் உயிர்ச்சுவை அமுதென மாறிடும்.
நம்பிக்கை வைத்தே காத்திருக்கும் ஏழைகளுக்கு
இன்னும் முழுமையாய் எட்டாத உணவின் தேவையை
அன்னதானம் நிறைத்திட வருகையில்
வாழ்த்திடும் மனங்களின் வழியே
தென்படக்கூடும் தெய்வங்கள்.
*************************************************************************************
6. வீழ்வேனென்று நினைத்தாயோ?
அறத்தைப் புறம்தள்ளி அவலத்தை ஏந்தியபடி
சூழலைக் காத்திடாது தன் சுகத்தில் இளைப்பாறி
ஊழலை வளர்த்திடவே ஊதுகுழலாக மாறி
கடமைகளைச் கண்ணுறாது களிப்பிலே மனம் வைத்து
உடைமைக்குத் தருகின்ற முன்னுரிமை போற்றி
மடமையெனத் தெரிந்தும் மாறிடாது தொடருகின்ற
மனிதப் பதர்கள் பெருகிவர
பெண்ணுக்குத் தொல்லை தந்து பிதற்றுகின்ற கூட்டம் நிறைய
போராட்ட குணங்களையே மறந்துவிட்டு
போதையிலும் கவர்ச்சியிலும் புதைந்து போன
இளைஞர் படை கண்டும்
இரக்கமற்ற கல்நெஞ்சமென நின்றிடாமல்
காணும் மனமெங்கும் பேரன்பை விதைத்திடாமல்
வீழ்வெனென்று நினைத்தாயோ?
*******************************************************************************
7. போன்சாய் மரத்தில் பூத்த காலம்
அனுபவங்களின் வளர்ச்சியில் ஆளுமையானபின்னே
முதுமையின் தடத்தில் முயற்சிக்கும்
பெரியோரின் பாதைக்குள்
எட்டு வைக்கக்கூட நினைப்பில்லாது
கையில் அலைபேசியுடன் சுற்றுகிறது
இளமையின் துள்ளல்.
சகிப்பற்றும் சலிப்புற்றும் தனக்குள் தானே
பொறுமையைத் துறந்தும்
முணுமுணுத்துத் திரியும் எரிச்சல் மனதில்
விதைகளைத் தூவிட நீளும் கரங்களை
நேசிப்பதில்லை உலகின் ஓட்டம்.
கூட்டுத் தனத்தில் கோபமும் வெறுப்பும்
இளைப்பாறிக் கொள்ள மனங்கள் ஏந்தின.
யாருமற்ற தனிமையில் வீடெங்கும் வெறுமையைக் காணும்
போன்சாய் மரமென பூக்கிறது ஒற்றைப் பிள்ளையின் ஓயாக் கனவுகள்.
நடை வண்டி ஓட்டாது நாலு சக்கர வாகனப் பயணம்
தடை கண்டால் தாண்டாது தவித்திடும் தருணம்
இடையூறுகளுக்குள் ஏற்றுக்கொள்ளாத பக்குவமென
சோலைகளில் பூக்காத மரங்களைப் போல
இல்லமெங்கும் போன்சாய் மரமெனப் பூத்திடும் காலத்தில்
அவரவர் பயணத்தில் அவரவரே ஆண்டவராகலாம்.
*******************************************************************************
8. வெயிலின் வாழ்வு
பருவத்தேடலுக்குள் புகுந்தபடி
பாலையைப் பெரிதாக்கும் பண்டிதத்தில்
சாலையெலாம் சுவடுகளை அழித்துவிட்டு
பொழியும் மரங்களின் இலைகளைப்
புசித்தபின்னும்
ரத்தத் தேடலுக்குள் வேகத்தைப் பாய்ச்சி
வேர்வையின் வழிதலை அருவியாக்கி
நாக்கும் உடலும் தீக்குள் நுழைந்தவிட்டதென
தாகத் தேடலுக்குள் தம்மைத் தொலைக்க
வெளிச்சத்தைக் கூட்டாமல்
வெப்பத்தை எரிய விட்டு
உலகப் பரப்பெங்கும்
ஏப்பத்தை அதிகரிக்கும் வானத்தின்
நகராப் பாதைக்குள்
உயிரையே துண்டு துண்டாக்கி
ஒப்படைக்கும் வேதனைக்குள்
உலவிடும் மனிதனுக்கு
வாய்ப்பைத்தான் வழங்குகிறாய்
பூமி சுழற்சியின் பயணமதில்
வாழ்வின் வெளிச்சத்தை வழக்கமாக்கிடும்
வெயிலின் வாழ்வை
வீரியமாக்கி
நெருப்பைக் கக்கவைத்திடும்
பேராசை மனிதனுக்குள்
பிறந்திடும் ஞானமே
உயிரின் வாழ்வுக்கும் ஒளியேற்றலாம்.
**********************************************************
9
சாதனைகளைச் சந்தித்த தருணங்களில்
வெற்றிக் கோப்பைகளை
கையில் ஏந்துகிறேன்
மகிழ்ச்சி மழை எங்கும் பெருகி நிற்க
மமதையில் தள்ளாடுகிறேன்.
வேதனைகளாக விளைந்து நிற்கையில்
வெற்றுக் கோப்பை
என்னை ஏந்துகிறது.
எனக்கான சுதந்திரம் பறிக்கப்பட்டது.
என் குடும்பச் சித்திரம் பொசுக்கப்பட்டது.
சமூக இருப்பு உருட்டி விளையாடப்பட்டது
துணை நின்ற தோழமையும்
தூவென துரத்தப்பட்டது.
இத்தனை அழிச்சாட்டியும் செய்த பின்னும்
நெருப்பு என்னுள் நீரென இறங்கியது.
என்னை முற்றிலும்
கரைத்து முடித்த பின்
உலகத்தைக் கரைக்க
திறந்த வாய் கொண்டு
உருள்கிறது மது.
எழுதியவர்:
இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி தினபூமி மனித நேயம் புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1. மின்மினிகள்(1999), 2. தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022), 3. தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது), 4. அன்பு மொழி(2024), 5. மீன் சுமக்கும் கடல் (2025) என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.