சுதாவின் கவிதைகள்
ஆழமான காதல்
**********************
கண் தீண்டா தூரத்தில் இரு கண்கள்
என் வார்த்தைகள் செவிநுகரா தூரத்தில் இரு செவிகள்…
ஒருமுறை கூட சந்திக்க முடியா தூரத்தில் ஒரு காதல்…

எப்போதாவது பேசும் வார்த்தைகள் ஒரு சிலிர்ப்பு…
என்றுமே பார்க்க முடியா உன் நிழலை
கற்பனையில் வரைந்து
கதை பேசிக் கொள்ளும் நிமிடங்கள்…

பிடித்ததையும் பிடிக்காததையும்
கடந்ததையும் கடத்தியதையும்
கண்ணீரும் சிரிப்புமாய்க் கதைக்க
உன் நிழலின் விரல் பிடித்துக் கொள்கிறேன்.

மழைக்கால வேளையில் தெருவோர தேநீரில்
ஒவ்வொரு மிடறுக்கும் உன் நினைவோடு
உள் கடத்துகிறேன்…என் ரத்தத் துளிகளிலும்
உன் நினைவு கலந்திடட்டுமே…

இன்று ஓர் இரவின் மத்தியிலோ
பகலின் முடிவிலோ நானோ…
நீயோ இறந்து போக நேர்ந்தால்
எங்கே சென்றாய் என்று தேடாமல்
வாழ்ந்துவிட்டுப் போகும்
எஞ்சி நிற்கும் நினைவுகளை மட்டுமே
கண்களின் ஓரத்தில் தேக்கி வைத்துக் கொண்டு
கற்பனையில்தான் வாழ்வோமே என்னதான் ஆகிவிடும்…
*******************************

எது ஒன்றும் புதிதில்லை…
எது ஒன்றும் விலகியும் சேர்ந்தும் இருப்பதில்லை…

ஒவ்வொன்றையும் புதுப்பிக்க
ஒரு பிரிவு ஒரு விலகுதல்
அவசியமாகிறது…

எது ஒன்றிலும்
எது ஒன்றும் நிலையில்லை
பிரிவோ… பிணைப்போ…

தயை செய்யுங்கள்…

நான் மௌனித்துத் தான் கிடக்கிறேன்…
எதையும் மறந்தல்ல…

நான் சற்று விலகி நடக்கிறேன்
பயந்தல்ல…

என் சிரிப்பின் ஓரத்தில்
கண்ணீர்த் துளிகள் கதறும் சத்தம்
கேட்காதவாறு கொஞ்சம் சத்தமாக
சிரித்தே சிலாகிக்கிறேன்….

அவளின் நிழலிலும்
விலகி நிற்கிறேன்…
விரும்பி அல்ல…

யாதொருவரின் ஆனந்தக்
கொக்கரிப்புகளும் என்னை
அசைத்ததில்லை…அது அவசியமும் இல்லை…

தயை கூர்ந்து கொஞ்சம் விலகி நில்லுங்கள்…
மீண்டும் நட்பு எனும் கூர்வாள் கொண்டு
தீண்டாதீர்…எனக்கு வேறு வேலை இருக்கிறது…

வேண்டாம் என நினைத்து விட்டால்
காரண காரியங்களுக்காக
ஒட்டிக் கொள்ளும் காரியவாதி அல்ல…

உங்கள் காரண
காரியங்களுக்காக
சாதக பாதகங்களுக்காக
பயன்படுத்தாதீர்கள்…

– சுதா 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.